ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு பைசா! தூத்துக்குடியில் அரசே விற்கிறது | One litre water costs one paise in Thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (31/05/2017)

கடைசி தொடர்பு:17:02 (31/05/2017)

ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு பைசா! தூத்துக்குடியில் அரசே விற்கிறது

எஸ்.ஜோயல்

 தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு பைசாவுக்கு அரசே விற்பதாக, தி.மு.க. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு ஒன்றையும் அவர் தொடர்ந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயத்துக்கும் குடிநீர் தேவைக்கும் தாமிரபரணி ஆற்றை மக்கள் பயன்படுத்திவருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் தடுப்பணைகளில் ஒன்று, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது. இதன்மூலம் 25 ஆயிரத்து 867 ஏக்கர் விவசாய நிலம் பயன்பட்டுவந்தது.  இந்தச் சூழ்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் துறையினர், 20 எம்.ஜி.டி திட்டத்தின் மூலம் 21 தொழிற்சாலைகளுக்கு தினமும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுத்துவருகின்றனர். இந்த திட்டத்தால், விவசாயத்துக்கு போதியளவில் தண்ணீர் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்று தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல், சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், " 20 எம்.ஜி.டி.திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் பிரச்னையும் தலைவிரித்தாடுகிறது. இருப்பினும், தொழிற்சாலைகளுக்கு மட்டும் தடையின்றி தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தண்ணீர் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. அதாவது, ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இதனால், அணையின் உள்ளே குடிநீர் திட்டங்கள் தொடங்க வேண்டும் என்றால், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி, தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை எண் 18 கடந்த 7.3.2008ல் வெளியிடப்பட்டது.

 

ஸ்ரீவைகுண்டம் அணை

அதில், அணையிலிருந்து குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் எடுக்க அனுமதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள், குடிநீர் என்ற பெயரில் தொழிற்சாலைகளுக்கு ராட்ச மோட்டர் மூலம் நீரை ஊறிஞ்சிக் கொடுத்துவருகின்றனர். தமிழக அரசு, ஒரு லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்கிறது. ஆனால், ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்குக் கொடுக்கப்படும் தண்ணீர், லிட்டர் ஒரு பைசாவுக்கு வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் மொத்தமுள்ள 46 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, போதிய தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் மூன்று போக விளைச்சல் தற்போது ஒருபோகமாகச் சுருங்கிவிட்டது. தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்று பொது மக்கள் மற்றும் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளின்படி, அதற்குத் தடை விதிக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனால்தான், தொழிற்சாலைகளுக்கு விதிமுறைகளை மீறி தண்ணீர் வழங்கக்கூடாது என்று சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் பொதுநல மனுவை தாக்கல்செய்தேன். அந்த மனு மீதான விசாரணை, இன்று நடக்கிறது" என்றார்.

 இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க இடைக்காலத் தடைவிதித்தார்.


டிரெண்டிங் @ விகடன்