கூவம் நதி சாக்கடையானது இப்படித்தான்! -அதிர்ச்சி ரிப்போர்ட் | This is how cooum river became a sewage says report

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (31/05/2017)

கடைசி தொடர்பு:19:52 (31/05/2017)

கூவம் நதி சாக்கடையானது இப்படித்தான்! -அதிர்ச்சி ரிப்போர்ட்

கூவம்

20 ஆண்டுகளுக்கு முன்பு 'ஐ.ஐ.டி சென்னை' நடத்திய கணக்கெடுப்பின்படி, சென்னையில் இருந்த நீர்நிலைகளின் எண்ணிக்கை 650. ஆனால், தற்போது அதன் எண்ணிக்கை மிகச்சிறிய பின்னம் மட்டுமே. கடந்த ஜனவரியில்தான் ஒரு தனியார் கம்பெனி தனது கழிவுகளை நேரடியாக கூவம் நதிக்கரையில் கொட்டியதாகப் பிடிபட்டது. லாரிகளில் கழிவுகளை எடுத்துச் செல்லும் ஓட்டுநர்கள், 'கழிவு சுத்திகரிப்பு நிலையம்' வரை  கொண்டுசெல்லாமல், அப்படியே கூவத்தில் கொட்டிவிடுவதாகக் கூறப்படுகிறது. பெருநகரக் குடிநீர் வாரியம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டது.

கடந்த வருடம் மார்ச் மாதம், 'தேசிய பசுமைத் தீர்ப்பாயம்', கூவம் நதியில் முறையற்ற வகையில் கழிவுகளைக் கொட்டியதற்காக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்துக்கு 40 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. அந்த பல்கலைக்கழகம் போல வேறு சில கல்வி நிறுவனங்களும் முறையற்ற வகையில், தனது கழிவுகளை கூவத்தில் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதாகவும் கண்டறியப்பட்டது. இது ஒருபக்கம் இருக்க... ''சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் இருக்கும் பெரும்பாலான அபார்ட்மெண்டுகளும் ஐ.டி நிறுவனங்களும், போதிய கழிவு நீர் வடிகால் வசதி இல்லாமல்தான் இருக்கின்றன” என்று பதிவு செய்தார் ஒரு சமூக ஆர்வலர். 

இத்தகைய சூழலில்தான் அறப்போர் இயக்கத்தினர், சென்னையின் கழிவு நீர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். கழிவுநீர் உற்பத்தி, சுத்திகரிப்பு முறை, சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவுகள் நீர்நிலைகளில் கலத்தல் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதில் திடுக்கிடும் வகையிலான தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி சென்னையில், நாளொன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் அளவு கழிவு நீர் வெளியேற்றப்படுவதாகவும் அது மட்டுமே சுத்திகரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கணக்கீடுக்கு மாறாக நாளொன்றுக்கு 1,500 முதல் 2,000 மில்லியன் லிட்டர் வரையிலான கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அதன்படி நாளொன்றுக்கு 1,000 மில்லியன் லிட்டர் வரை சுத்திகரிக்கப்படாமலேயே கூவம் போன்ற நீர்நிலைகளில் நேரடியாகக் கலக்கப்படுகிறது என்கின்றனர். பெருநகர நீர்நிலை வாரியத்தின்  சுத்திகரிப்பு நிலையங்கள், நாளொன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் திறனுடையவை. ஆனால், இந்நிலையங்கள் வெறும் 430 மில்லியன் லிட்டர் வரை மட்டுமே நாளொன்றுக்கு சுத்திகரிப்பினை மேற்கொள்வதாகவும் அவர்களது தரவு கூறுகிறது. 

கூவம்

உண்மையிலேயே சிங்காரச் சென்னையாக்க தீர்வுதான் என்ன?

''கழிவுநீர் சுத்திகரிப்பு 100 சதவிகிதம் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும்'' என்கின்றனர் அறப்போர் அமைப்பினர். அப்படி ஒப்புக்கொண்டால் மட்டுமே 1,000 மில்லியன் லிட்டருக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டுமானத்தை அமைக்க முடியும் என்பது அவர்களது வாதம். 1,000 மில்லியன் லிட்டருக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டுமானம் என்னும் வகையில், அதற்குத் தகுந்த டிப்ளமோ படித்த ஊழியர் நியமனமும் தேவை. தற்போது இருக்கும் காண்ட்ராக்ட் முறை பணி நியமனம் வழியாக, அது தொடர்பான தெளிவற்றப் பார்வை இல்லாதவர்களை நியமிப்பதும் நிறுத்தப்படவேண்டும் என்கிறார்கள்.

இதுதவிர டெல்லி போன்ற பெருநகரங்களில் உள்ள 'ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம்' என்னும் முறை இங்கேயும் நிறுவப்படவேண்டும். அது அனைவராலும் பார்க்கப்படும் வகையிலும் நிர்மானிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். 

இது நடைமுறைப்படுத்தப்பட்டால் சிங்காரச் சென்னையும், மணக்கும் மாநகராட்சியும் நிச்சயம் சாத்தியம்தான். கவனிக்குமா தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்