வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (31/05/2017)

கடைசி தொடர்பு:16:49 (31/05/2017)

தினமும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் உறிஞ்சப்படும் தாமிரபரணி ஆற்று நீர்! ஆலைகளுக்கு செக் வைத்தது பசுமை தீர்ப்பாயம்!

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்க இடைக்கால தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்ககோரி திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஸ்ரீவைகுண்டத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால்-, தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலமாக 25 ஆயிரத்து 867 ஏக்கரில் முப்போக விவசாயம் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் துறையினர் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியில் இருந்து 20 எம்.ஜி.டி. திட்டத்தின் மூலமாக தூத்துக்குடியிலுள்ள 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் (20 மில்லியன் காலன்) தண்ணீரை எடுத்து வழங்கும் திட்டத்தினை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டனர். இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்த பின்பு தாமிரபரணி பாசன நிலங்களில் தண்ணீரை பார்ப்பது அரிதாகிப்போனது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடந்த 07.01.2017 அன்று மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் 9 கோடி லிட்டர் (20 மில்லியன் காலன்) தண்ணீர் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் வாய்மொழியாக அறிவித்துள்ளார். ஆனால் இன்றுவரை அதிகாரபூர்வமான தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திலுள்ள சில அதிகாரிகளின் துணையோடு தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீர் தினமும் தவறாமல் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசானது ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரை பொதுமக்களிடம் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்துவரும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து எடுக்கப்படும் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு லிட்டருக்கு வெறும் ஒரு பைசா என்ற ரீதியில் தமிழக குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தினர் நாள்தோறும் 9 கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்கி வருகின்றனர். தற்போது நிலவிவரும் கடுமையான வறட்சியால் தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பலபகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து உவர்ப்புத்தன்மை மிகுந்து காணப்படுகிறது. இதனால் சுகாதாரமான குடிநீர் கிடைக்காத மக்கள் உவர்ப்புத்தன்மை கொண்ட நிலத்தடி நீரை குடிக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது பரிதாபத்திற்குரியதாகும்.

தற்போது நிலவிவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்ட மக்களை பாதுகாத்திடவும், மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்கும், மேற்சொன்ன 20 எம்.ஜி.டி திட்டத்தின் மூலமாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கு முழுமையான தடை உத்தரவு பெற்று அந்த தண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கிட உரிய உத்தரவு வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பொதுநல வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி, நிபுணத்துவ உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தில் எடுக்கப்படும் தண்ணீரை தற்போதுள்ள சூழலில் பொதுமக்களுக்கு வழங்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.