மேரி மாதாவை வணங்கிவிட்டு காவடி! - கிராமத்தின் ஆச்சர்ய மத நல்லிணக்கம்

'மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்மந்தம்'  என்று பொதுவாக ஒரு சொலவடை உண்டு. ஆனால், இன்னும் ஊர்க்கோயில்களில், கிராமங்களில், அப்துல்காதருக்கு மட்டும் அல்ல அந்தோணிதாசுக்கும் கூட தொடர்பு உண்டு, என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன சில திருவிழாக்கள். ஆம். கிராமங்களில் நடைபெறும் விழாக்களில் இன்றளவும் பெரும்பாலான திருவிழாக்கள், மதங்களைக் கடந்து ஒற்றுமையோடு நடத்தப்படுகின்றன. அப்படி ஒரு காவடித் திருவிழாவைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். 

காவடித் திருவிழா நல்லாத்துரை முனீஸ்வரர்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை என்னும் ஊருக்கு அருகே உள்ளது ஓரிக்கோட்டை கிராமம். இங்கே இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களும், கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த மக்களும் வசிக்கின்றனர். இங்கே நல்லாத்துரை முனீஸ்வரர் ஆலயம் என்று ஒரு ஆலயம் உள்ளது. இதன் அருகிலேயே மகாலிங்கமூர்த்தி, பரமகாளீஸ்வரி சமேத சிவாலயம் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயிலின் தலவிருட்சமாக 'வக்கனத்தி மரம்' இருக்கிறது.  இந்த இரண்டு ஆலயங்களுக்கும் திருவிழா ஒன்றாகத்தான் நடைபெறுகிறது.

வருடந்தோரும் வைகாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் பூக்குழி இறங்குதல், காவடி எடுப்பு மற்றும் விளக்கு பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. 

புனித ஜெபமாலை மாதா ஆலயம்

திருவிழாவின் முக்கிய நிகழ்வான காவடி எடுப்பின்போது காவடிகள் அனைத்தும் தயார் செய்யப்படுகின்றன. பின்னர், அதே ஊரில் உள்ள கிறிஸ்துவ வழிபாட்டுத் தலமான புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் வழிபட்ட பிறகுதான் காவடி எடுப்பு ஊர்வலம் தொடங்குகிறது. பல ஆண்டுகளான இது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இங்கே வாழும் கிறிஸ்துவ மக்களும், சுற்றுவட்டார கிராம மக்களும் இத்திருவிழாவில் பெருமளவில் பங்கேற்கின்றனர். அதேபோல் புரட்டாசி மாதம் நடைபெறும் மாதா கோயில் திருவிழாவும் மதங்களைக் கடந்து வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 

காவடித் திருவிழா

இக்கோயில் பற்றிய தகவல்களை அறிய இக்கோயில் உருவாகக் காரணமாக இருந்தவரான கருப்பையாவின் மகனான முருகானந்தத்திடம் பேசினோம்.முருகானந்தம்

'' தொடக்கத்தில் கோயில் கட்டப்படாமல் வெறும் சிலை வழிபாடு மட்டுமே நடைபெற்றது. பின்பு 1968 ஆம் ஆண்டில்தான் கிராம மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு கோயிலாகக் கட்டப்பட்டது. பின்பு இக்கோயிலுக்கு அருகிலேயே மகாலிங்கமூர்த்தி - பரமகாளீஸ்வரி கோயிலும் கட்டப்பட்டது. வருடா வருடம் இக்கோயில் திருவிழா நடைபெறுகிறது. அனைத்து ஜாதி, மத மக்களும் இணைந்து நடத்தும் திருவிழாவாகத்தான் இருக்கிறது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியான காவடி எடுப்பின்போது, மாதாவை வணங்கிவிட்டுத்தான் காவடி ஊர்வலமே தொடங்கப்படுகிறது. இது மத நல்லிணக்கத்துக்காக காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு நடைமுறையாகும். முனீஸ்வரர் கோயில் திருவிழாவாக இருந்தாலும் சரி, மாதா கோயில் திருவிழாவாக இருந்தாலும் சரி இரு மதத்தவரும் ஒற்றுமையாகக் கொண்டாடி வருகிறோம். 

2001 ஆம் ஆண்டு வரை என் தந்தை தான் கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வந்தார். அவர் இறந்த பிறகு, கிராமத்தார்கள் கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகின்றனர். திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெறுகிறது" என்றார் மகிழ்வோடு.

ஜாதிகளைக் கடந்தும், மதங்களைக் கடந்தும் இன்றளவும் நடைபெறும் இதுபோன்ற திருவிழாக்கள் போற்றத்தக்க ஒன்றாகும். ஆறுமுகமும், ஆரோக்கியமும், மாரியம்மாளும், மேரி அம்மாவும் ஒற்றுமையோடு கொண்டாடும் இது போன்ற திருவிழாக்கள்தான் மதங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை இன்றளவும் பாதுகாத்து வருகின்றன.

எம்மதமும் சம்மதம்

அனைத்து மதங்களுமே மனிதனை நேசிக்கும் மகத்துவமான தத்துவங்களைத் தான் போதிக்கின்றன. நாம் அதனைச் சரியாகப் பின்பற்றி ஒற்றுமையோடு வாழ்ந்தாலே போதும், நம் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!