இன்போசிஸ் அலுவலகத்தில் மென்பொறியாளர் மரணம்; நிர்வாண நிலையில் உடல் கண்டெடுப்பு..! | IT techie found dead in Infosys office without dress

வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (31/05/2017)

கடைசி தொடர்பு:12:41 (01/06/2017)

இன்போசிஸ் அலுவலகத்தில் மென்பொறியாளர் மரணம்; நிர்வாண நிலையில் உடல் கண்டெடுப்பு..!

செங்கல்பட்டிலுள்ள இன்போசிஸ் ஐடி அலுவலகத்தில் மென்பொறியாளர் ஒருவர் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். அவரது இறப்பில் மர்மம் உள்ளதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


விழுப்புரம் மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த இளையராஜாவுக்கு வயது 31. அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர் செங்கல்பட்டிலுள்ள இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று வேலைக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலையில் அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாளர்களுக்கென்று இருந்த ஓய்வு அறையில் இளையராஜா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

 

அப்போது அவர் உடல் நிர்வாண நிலையில் இருந்தது. இதைப் பார்த்த சக பணியாளர்கள் இளையராஜாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், இளையராஜா அதற்கு முன்னரே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் இன்போசிஸ் ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இளையராஜாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் சமாதானப்படுத்தினர். இதுகுறித்து தெரிவித்த காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமனி, 'இளையராஜாவின் உடலில் எந்தக் காயங்களும் இல்லை. உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு பல விவரங்கள் தெரியவரும்' என்று தெரிவித்துள்ளார்.