டொனால்டு ட்ரம்ப் - மெலானியா விரிசலுக்கு என்ன காரணம்? DonaldTrumpVsMelania

ட்ரம்ப்

மெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் அவர் மனைவி மெலானியாவுக்கும் இடையே விரிசல் என வெளிநாட்டு ஊடகங்கள் பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன. சமீபத்தில், இஸ்ரேல் நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் டொனால்டு ட்ரம்ப். அவருடன் மெலானியாவும் சென்றார். இஸ்ரேல் விமான நிலையத்தில், மெலானியாவின் கையைப் பிடிக்க ட்ரம்ப் முயன்றபோது, அதனைத் தவிர்க்கும் விதமாக தட்டிவிட்டார் மெலானியா. இருவருக்குமிடையே இப்படி நடப்பது புதிதானது இல்லை. அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற விழாவில், ட்ரம்ப் பின்னால் நின்றுகொண்டிருந்தார் மெலானியா. அப்போது, மெலானியாவிடம் ஏதோ பேசிவிட்டு ட்ரம்ப் திரும்பியதும் மெலானியாவின் முகம் இறுக்கமாக மாறிவிட்டது. அது சமூக வலைதளத்தில் வைரலானது. டொனால்டு ட்ரம்ப் - மெலானியா திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை எனப் பல்வேறு சம்பவங்களைப் பட்டியலிட்டு சொல்கின்றனர். அவற்றில் சில...

* அமெரிக்க அதிபராக வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் வசிக்கிறார் டொனால்டு ட்ரம்ப். ஆனால், மெலானியா தனது மகன் பரோன் (Baron) பள்ளிப் படிப்பை காரணம் காட்டி, நியூயார்க் நகரில் வசித்துவருகிறார். 

* அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாளன்று, காரிலிருந்து இறங்கிய ட்ரம்ப், அவரை வரவேற்பதற்காக நின்றிருந்த ஒபாமாவைச் சந்திக்கச் சென்றுவிட்டார். சில நொடிகள் கழித்தே, மெலானியாவை தன்னுடன் சேர்த்துக்கொண்டு நின்றார். ஒருவர் அதிபராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனது மனைவியை தன்னுடன் அழைத்துச் செல்வதுதான் நாகரிகம்.

* அதிபர் பதவியேற்பு விழாவில், டொனால்டு டிரம்ப் மனைவியுடன் சம்பிரதாயமாக நடனமாடினார், அவர்கள் இருவருக்குமிடையேயான அந்நியோன்யம் வெளிப்படவே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

* எந்த நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் தனது மனைவி விமானத்தைவிட்டு இறங்குவதற்கு முன்னரே, ட்ரம்ப் விமானத்திலிருந்து இறங்கி, அதிகாரிகளுடன் நடந்துசெல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

* கடந்த பிப்ரவரி மாதம், ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொள்ள வந்தனர். அப்போது, விமானத்தைவிட்டு இறங்கி ட்ரம்புடன் ஒன்றாக காரில் ஏற முயன்றார் மெலானியா. ஆனால், சில நொடிகள் கழித்து, காரின் மறுபக்கமாகச் சென்று ஏறினார். இது, மெலானியா தன்னுடன் அமரவும் ட்ரம்ப் அனுமதிக்கவில்லை என்பதை தெளிவாக காட்டியது. 

* அதே ஃப்ளோரிடா நிகழ்ச்சியில், மெலானியா பேச ஆரம்பித்த சில நிமிடங்களில், மெலானியாவின் கையைத் தொட்டவாறு கடந்துசென்றார் ட்ரம்ப். அந்தத் தொடுதல் தனக்குப் பிடிக்கவில்லை என்பது போல முகத்தில் உணர்வை வெளிப்படுத்தினார் மெலானியா. 

* மெலானியாவை பொது இடங்களில் மரியாதை நிமித்தமாக ட்ரம்ப் கட்டியணைக்கும்போதும், ஏதோ கடமையே எனச் செய்வதாக சர்ச்சை எழுந்தது. 'இவர்கள் கட்டியணைக்கும் விதம் கணவன் - மனைவிபோல தெரியவே இல்லை' என்று நெட்டிசன்கள் ‘ட்ரோல்’ செய்கிறார்கள். 

* ட்ரம்ப் பற்றி விமர்சித்து எழுதப்பட்ட ஒரு ட்விட்டை, சில மாதங்களுக்கு முன்பு ’லைக்’ செய்திருக்கிறார் மெலானியா. இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'இது அவருக்குத் தெரியாமல் நடந்த தவறு' என்று மழுப்பியிருக்கிறார். 

* “ட்ரம்ப் மெலானியாவை தன் மனைவியாக மதிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, மெலானியாவை ஒரு பொருளாகவே பார்க்கிறார்” என்று வெள்ளை மாளிகை வட்டாரங்களிலேயே பேசப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!