“பட்டித் தொட்டி வரை பரதம் பரவ வேண்டும்!” பரதக் கலைஞர் மேகலாதேவி

பரதம்

மிழ்நாட்டின் பாரம்பர்ய நடனம் பரதம். இருந்தபோதும், ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கற்கும் கலையாக உள்ளது. கலை என்பது அனைவருக்கும் பொதுவானது. அது, பாமரர் முதல் படித்தவர் வரை அனைவரையும் சென்றடைய வேண்டும். அதற்கான முயற்சியில் வெகு சில கலைஞர்களே ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, கர்நாடக சங்கீதம் சேரிகளையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகப் புரட்சிகரமாக பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகிறார். இவரது முயற்சியால், சென்னையின் சில அரசுப் பள்ளிகளில் பரிசார்த்த முறையில் கர்நாடக சங்கீதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சென்னையின் ஊரூர் ஆல்காட் குப்பம் பகுதியில் மார்கழி கச்சேரியில் அனைத்து கலைகளையும் அரங்கேற்றம் செய்துவருகிறார். இதேபோல, காரைக்குடியில் உள்ள பரதக் கலைஞர் மேகலா தேவி பட்டிதொட்டி எல்லாம் பரதம் பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசமாகப் பரதம் கற்றுத் தருகிறார்.

“சின்ன வயசிலிருந்தே எனக்கு டான்ஸ்ன்னா ரொம்பப் பிடிக்கும். ஸ்கூலில் பலமுறை பரிசு வாங்கியிருக்கேன். எங்க ஊர், சிவகங்கை பக்கத்தில் சின்ன கிராமம். அதனால், முறைப்படி பரத நாட்டியம் கத்துக்கிற வாய்ப்பு கிடைக்கலை. கல்யாணத்துக்கு அப்புறம் என் கணவர்தான் நாட்டிய வகுப்பில் சேர்த்து என் ஆசையை நிறைவேற்றினார். முறைப்படி பரதம் கத்துக்கிட்டேன். பாட்டு, நடனம் எல்லாம் சின்ன வயசிலேயே கத்துக்கிட்டாதான் வரும்னு நிறைய பேர் சொல்லுவாங்க. அப்படியெல்லாம் இல்லீங்க. ஆர்வமும் பயிற்சியும் இருந்தால், எந்த வயசிலேயும் கத்துக்கலாம். அதுக்கு நானே உதாரணம். பரதம் கத்துக்கிட்டதும் இசைக்  கல்லூரியில் சேர்ந்து பட்டம் வாங்கினேன். அந்தச் சமயத்தில் எனக்கு டெலிவரியாகி அஞ்சு மாசம்தான் ஆகியிருந்துச்சு. சிசேரியேன் வேற. அப்பவும் விடாம டான்ஸ் பிராக்டிஸ் பண்ணி படிப்பை முடிச்சேன். என்னை மாதிரி எத்தனையோ பேர் ஆர்வம், ஆசை இருந்தும் பரதம் கத்துக்கிற வாய்ப்பு இல்லாம போயிடுது. அவங்களுக்காக ஏதாச்சும் செய்யணும்னு யோசிச்சேன்'’ என்ற மேகலா தேவி தொடர்ந்தார்... 

பரதம்

“கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க காரைக்குடியில் இருந்தோம். படிப்பை முடிச்சதும் காரைக்குடியில் நாட்டியாஞ்சலி பள்ளியை ஆரம்பிச்சேன். நிறைய மாணவர்கள் ஆர்வமாக கத்துக்கிட்டு வர்றாங்க. பெரிய மேடைகளில் அரங்கேற்றம் செய்ய வசதியில்லாதவங்களுக்கு ஸ்பான்சர் வாங்கி, கோயில்ல அரங்கேற்றம் செய்யவெச்சேன். இப்போ, என் மாணவர்கள் பலர் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டு வர்றாங்க. நாம எந்தப் பணியில் எந்தத் துறையில் இருந்தாலும் அதன்மூலம் மத்தவங்களுக்கு பயனுள்ள விஷயங்களைச் செய்ய முடியும். பரதம்ன்னா ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கற்க முடியும்னு பலரும் நினைக்கிறாங்க. மத்தவங்க கற்க நினைச்சாலும் வாய்ப்பும் வசதியும் கம்மியா இருக்கு. இந்த நிலையை மாற்றி, பரதத்தைப் பரவலாக்கணும்னு தோணுச்சு. அதுக்கு நாம் என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அதன் தொடர்ச்சியாக, சிவங்கை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை பரத நாட்டியம் கத்துத்தர ஆரம்பிச்சிருக்கேன். மாணவ, மாணவிகளும் ஆர்வமாக கத்துக்கறாங்க. அவங்க அக்கம்பக்கத்தில் இருக்கிற குழந்தைகளுக்குச் சொல்லி, அவங்களும் கத்துக்க முன்வருவதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. பரதம் தவிர, மயிலாட்டம், ஒயிலாட்டம்னு கிராமியக் கலைகளையும் கத்துத்தர்றேன். நாட்டியக் கலை எல்லாக் குழந்தைகளையும் சென்றடையணும்'' என நெகிழ்ந்தார் மேகலா தேவி.

கலைகள் குழந்தைகளை இன்னும் உற்சாகப்படுத்தி புதிய உயரங்களை அழைத்துச் செல்லும். அதற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் மேகலா தேவிக்கு வாழ்த்துகள்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!