வெளியிடப்பட்ட நேரம்: 22:09 (31/05/2017)

கடைசி தொடர்பு:07:49 (01/06/2017)

'ஜனநாயக சக்திகளே ஒன்று கூடுங்கள்!' - பியூசிஎல் அறைகூவல்

சென்னை ஐஐடி-யில், மத்திய அரசின் 'இறைச்சிக்குத் தடை 'அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாட்டிறைச்சித் திருவிழாவை ஏற்பாடு செய்த சூரஜ் என்ற பிஎச்.டி மாணவர், கடுமையாகத்  தாக்கப்பட்டார். கல்லூரியிலுள்ள  'ஏபிவிபி' என்னும் மாணவர் அமைப்பினர், இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சூரஜ் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து ஐஐடி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், மக்கள் சிவில் உரிமைக் கழகம் இந்த விஷயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'ஐஐடி ஆய்வு மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது குறித்து இரண்டு முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பா.ஜ.க ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் இந்துத்துவ கருத்து கொண்ட மாணவர்கள் மற்ற மாணவர்களைச் சாதி, மத ரீதியாகப் பிளவுபடுத்தி வன்முறைத் தாக்குதலில் ஈடுபடுவது இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. ரோகித் வெமூலா, கன்னையா குமார் போன்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்ட அவலத்தை அனைவரும் அறிவர். 

தனக்கு மாறான கருத்தை ஒருவர் கொண்டிருப்பதையே சகித்துக் கொள்ளாமல் தாக்குதலில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய வன்முறை மன நோயாளிகளாக இந்துத்துவ சக்திகள் மாறி வருவது எதிர்கால சமூகத்தை நாசமாக்கிவிடும். கருத்துகளை வெளியிடும் சுதந்திரம், இந்திய அரசியல் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த உரிமையைக் கேலிக்கூத்தாக மாற்றிக் கொண்டிருக்கும் வன்முறையில் ஈடுபட்ட சென்னை ஐஐடி மாணவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சக்திகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று பியூசிஎல் அறைகூவல் விடுக்கிறது' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.