வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (01/06/2017)

கடைசி தொடர்பு:15:41 (01/06/2017)

சென்னை சில்க்ஸ் தீயை அணைக்க முடியாததற்கு இதுதான் காரணம்! - அதிகாரி பேட்டி

 

'சென்னை சில்க்ஸ் தீயை அணைக்க முடியாததற்கு முக்கியக் காரணமே, 'புகை'தான்' என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டடத்தில் அவசர கால வழிகளும் போதியளவில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள 'தி சென்னை சில்க்ஸ்' மற்றும் 'குமரன் நகைக்கடை'யில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தீ பிடித்தது. தீயை அணைக்கும் பணி, 28 மணி நேரத்துக்கும் மேலாக நடந்துவந்தாலும், முழுமையாக அதை கட்டுப்படுத்த முடியவில்லை. தீயை அணைக்க, தீயணைப்புத்துறையினர் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், தீயை அணைக்க முடியாமல் போராடிவருகின்றனர். தொடர்ந்து தீ எரிவதால், கட்டடத்தின் உறுதித்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏழு மாடி கட்டடம் இடிந்துவிழத் தொடங்கியது, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியிருக்கிறது.

தீயை அணைக்கும் பணி

தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடிவரும் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடை, ஏழு மாடி கட்டடத்தில் செயல்பட்டுவருகின்றன. முதல் தளத்தில் பட்டுப்புடவைகள் பிரிவும், இரண்டாவது தளத்தில் பல ரக சேலைகள் பிரிவும், மூன்றாவது  குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் பிரிவும், நான்காவது தளத்தில் சிறுவர்-சிறுமியர்களுக்கான ஆடைகள் பிரிவும், ஐந்தாவது தளத்தில் ஆடவர்களுக்கான பிரிவும், ஆறாவது தளத்தில் வீட்டு அலங்காரப் பொருள்கள் பிரிவும், ஏழாவது தளத்தில் நவீன ரக ஆடைகள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் பிரிவும் செயல்பட்டுவந்தன. மேலும், மொட்டைமாடியில் பிளாஸ்டிக் கூரையாலான ஊழியர்களுக்கான உணவகம் செயல்பட்டுவந்தது.

தீ விபத்து குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கு சென்றோம். அப்போது, கட்டடத்துக்குள் இருந்து புகை மட்டுமே வெளியேறிக் கொண்டிருந்தது. புகை மூட்டத்தால், வீரர்கள் கண் எரிச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உள்ளேயும் செல்ல அவசர வழிகள் போதிய அளவில் இல்லை. இதனால், புகையைக் கட்டுப்படுத்த முயன்றோம். ‘போர்ம் காம்பவுண்ட்’ எனும் ரசாயனக் கலவையை ‘ஸ்கை லிப்ட்’இயந்திரம்மூலம் அனைத்து தளங்களிலும் உள்ள ஜன்னல்களின் வழியாக கடையின் உள்ளே பீய்ச்சி அடித்தனர். இந்தக் கலவை தெளிக்கப்பட்டதும் நுரை சூழ்ந்து, தீயை கட்டுப்படுத்தும் என்று கருதினோம். ஆனால், தீ கட்டுக்குள் வரவில்லை. ஒவ்வொரு தளமாக தீ மள மளவெனப் பரவியது. அதிக வெப்பத்தால் 100 அடி தொலைவிலிருந்தே தீயை அணைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

கட்டடத்தை நெருங்க முடியாததால், தீயை அணைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. கட்டடத்துக்குள் 14 ஊழியர்கள் இருப்பதாகத் தகவல் கிடைத்தும் அவர்களை ஸ்கை லிப்ட் மூலம் காப்பாற்றினோம். அதன்பிறகு, தீயை அணைக்கும் முயற்சியில் 125 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கடையில் உள்ள துணிகள், பிளாஸ்டிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்கள் தீ பிடித்து எரியத் தொடங்கின. தொடர்ந்து தீ எரிந்ததால், கட்டடத்தின் உறுதித்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டடத்தின் அருகில் செல்ல முடியவில்லை. நாங்கள் எதிர்பார்த்தபடியே இன்று அதிகாலை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது  இதனால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. 

சென்னை சில்க்ஸ் தீ விபத்து


 புகை மூட்டத்தால் தீயை அணைக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. புகையைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். தீயை அணைக்க, பிற மாவட்டங்களிலிருந்தும் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் எப்படியும் தீயை அணைத்துவிடுவோம்" என்றார் நம்பிக்கையுடன்.

தீ விபத்துகுறித்து கடையின் மேலாளர் ரவீந்திரன், மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தத் தீ விபத்து சம்பவத்தை நேரில் ஆய்வுசெய்த அமைச்சர்கள், கட்டடம் உறுதித்தன்மையை இழந்துவிட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதை அரசே இடிக்கும். இதற்காக நிபுணர்கள் குழுவையும் உடனடியாக அமைத்துள்ளது. அவர்கள், சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்திவருகின்றனர். சென்னை சில்க்ஸ் கட்டடம் அமைந்துள்ள இடத்தை நேற்றே அபாயகரமான பகுதி என்று அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களிலிருந்து முன்னெச்சரிக்கையாக அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

எப்போதும், பரபரப்பாகக் காணப்படும் வடக்கு உஸ்மான் சாலையில், தற்போது தீயணைப்பு வீரர்கள், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள் வந்தவண்ணம் உள்ளனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளை உயரதிகாரிகள் கொடுத்துவருகின்றனர். அதன்படியே தீயை அணைக்கும் பணி நடந்துவருகிறது. தீயை அணைக்கும் பணியில், ‘எப்.54-எச்.டி.டி.’ எனும் 170 அடி உயரமுள்ள ராட்சத உயிர்காக்கும் ‘ஸ்கை லிப்ட்’டும், உயரமாக இருக்கும் கட்டடங்களை இடித்து, அவசர வழியை ஏற்படுத்தும் ஈ.ஆர்.டி என்ற இயந்திரம் அடங்கிய மூன்று வாகனங்களும் சம்பவ இடத்தில் உள்ளன. அதோடு, நுரைக்கலவை இயந்திரமும் உள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

  சென்னை சில்க்ஸ்

 சென்னையில் நடந்த அடுத்த பெரிய தீ விபத்து

கடந்த 11.7.1975 ஆம் ஆண்டு, இரவு சுமார் 8.30 மணியளவில் தீயணைப்புக் கட்டுப்பாட்டறைக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. சென்னையில் உயர்ந்த கட்டடம் என்ற பெருமையைக்கொண்ட எல்.ஐ.சி-யின் 14 மாடி கட்டடத்தில் தீ பிடித்து எரிவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்துசென்று தீயை அணைத்தனர். அப்போது, தொழில்நுட்ப வசதியில்லாததால், ஐந்து மாடிக்கு மேல் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் சிரமப்பட்டனர். 12 ஆம் தேதி மாலை 6 மணியளவில் தீ முழுவதும் அணைக்கப்பட்டது. கட்டடத்துக்குள் இருந்த ஆவணங்கள், பொருள்கள் எல்லாம் தீக்கிரையாகின. இருப்பினும், பாதாள அறையில் வைக்கப்பட்டுருந்த பாலிசிகள் மட்டும் காப்பாற்றப்பட்டன.  அதன்பிறகு, சென்னையில் நடந்த பெரிய தீ விபத்தாக சென்னை சில்க்ஸ் தீ விபத்து கருதப்படுகிறது. 


டிரெண்டிங் @ விகடன்