வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (01/06/2017)

கடைசி தொடர்பு:13:08 (01/06/2017)

மேலும் 2 வழக்குகளில் திருமுருகன் காந்தி கைது!

2016ஆம் ஆண்டு, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போராடிய வழக்கில், திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 


சென்னை மெரினா கடற்கரையில் மே 21 ஆம் தேதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தடையை மீறி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கடந்த 29 ஆம் தேதி, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் திடீரெனக் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில், திருமுருகன் காந்தி மற்றும் டைசன், இளமாறன் ஆகியோர் நேற்று மீண்டும் கைதுசெய்யப்பட்டனர். திருமுருகன் காந்தி மீது 17 வழக்குகள் உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மேலும் இரண்டு வழக்குகளின் கீழ் திருமுருகன் காந்தி மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராகப் போராடியதாக, அவர் மீது சைதாப்பேட்டை மற்றும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தற்போது, அந்த வழக்குகளில் திருமுருகன் காந்தி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே, மேற்கண்ட வழக்குகளில் திருமுருகன் காந்தி புழல் சிறையில் உள்ள நிலையில், தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

பண மதிப்பு நீக்க வழக்கு தொடர்பாக திருமுருகன் காந்தி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். காவல்துறையினர் தன் மீது தவறான வழக்குகளை பதிவு செய்வதாக திருமுருகன் காந்தி குற்றம் சாட்டினார்.