சென்னை சில்க்ஸ் நிறுவனம் மீது அமைச்சர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு நான்கு மாடி கட்டவே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம், விதிகளை மீறி ஏழு மாடிகளைக் கட்டியுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு மாடி கட்டடம்  இடிந்துவிழுந்தது. சென்னையில் நடந்த மிகப்பெரிய தீ விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டடத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது குறித்து வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2,000ஆம் ஆண்டு, வணிக கட்டடம் கட்டுவதற்காக நான்கு தளங்களுக்கு மட்டுமே சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட அனுமதிக்கு மாறாக, ஏழு தளங்களைக் கட்டியுள்ளது அந்த நிறுவனம்.

ஏழு தளங்கள் கட்டியதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்போது, கட்டடப் பணிகளை நிறுத்தும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அனுமதியின்றி கட்டிய கட்டடங்களை இடிப்பதற்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்படி, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள், 2006ஆம் ஆண்டு இடிக்கப்பட்டன. 2006ல் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியபோது, உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டது. இதனால் கட்டடத்தை இடிக்கும்பணி நிறுத்தப்பட்டது. 5-வது, 6-வது மற்றும் ஏழாவது தளங்கள் இடிக்கப்பட்டன. சென்னை சில்க்ஸிற்கு மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தியாகராய நகரில் 86 கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டன. விதிகளை மீறி கட்டப்பட்டதாக, சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 25 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

விதிமீறல் கட்டடம் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சமில்லை. சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், உடனடியாக வரன்முறைப்படுத்தப்படும். நீதிமன்றங்கள் அவ்வப்போது தமிழக அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிவந்தன. வழிகாட்டுதலின்படி செயல்பட்டாலும், சென்னை சில்க்ஸ் அதற்கும் தடையாணை பெற்றது. தமிழக அரசு உறுதியான விதிமுறைகளுடன்தான் செயல்பட்டுவருகிறது. கட்டுமானப் பணி முடிப்புச் சான்றிதழ் அவசியம் என்ற விதிமுறையை அரசு கட்டாயமாக்கியது. தி.நகரில் கட்டட விதிமுறை மீறல் பிரச்னை 20 வருடங்களாக உள்ளது. முதல்வரிடம் ஆலோசித்து, சட்டவிரோத கட்டடங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!