'மணீஷின் நிஜமுகம் இதுதான்'... அடுக்கடுக்காக குற்றம் சாட்டும் ஐ.ஐ.டி மாணவர்கள்!

மத்திய அரசு, கடந்த வாரம் கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்கத் தடை விதித்தது. மேலும்,  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த உத்தரவின்படி, இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. 

IIT Madras


குறிப்பாக, பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை ஐ.ஐ.டி-யில் மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா நடத்தப்பட்டது. இதையடுத்து, அதில் கலந்து கொண்ட மாணவர் சூரஜ் என்பவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.

Suraj


இதுதொடர்பாக, மாணவர் மணீஷ் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மணீஷ் என்ற மாணவர் சூரஜ் உள்ளிட்டோர் மீது புகார் அளித்துள்ளார். மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள், தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி அவர் புகார் அளித்துள்ளார். மேலும், மணீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போன்று படங்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த சம்பவங்கள் குறித்து சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வட்ட மாணவர்கள் சென்னை பிரஸ் கிளப்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். 


அப்போது அவர்கள் கூறுகையில், "ஆய்வு மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது தொடர்பாக ஐ.ஐ.டி. நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாட்டுக்கறி உண்ணும் விழா நடைபெற்ற அன்று இரவே மாணவர்களை மணீஷ் மிரட்டினார். மணீஷ் மிரட்டியது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. டீன் சிவக்குமார் சீனிவாசனுடன் நடந்த பேச்சுவார்த்தையில், அவர் எந்த திருப்தியான பதிலையும் அளிக்கவில்லை.  சூரஜ் மீது தாக்குதல் நடத்தியவர்களை நீக்க வலியுறுத்தினோம். சூரஜ்ஜின் மருத்துவ செலவையும் ஏற்க சொன்னோம். இப்படி எங்களது எந்த கோரிக்கைக்கும், திருப்தியான பதில் அளிக்கவில்லை. இதனால், போராட்டத்தை தொடர்ந்தோம். தற்போது, சென்னை ஐ.ஐ.டி இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


சூரஜை தாக்கியதற்கான கண்ணால் பார்த்த சாட்சிகள் உள்ளது. சி.சி.டி.வி கேமரா பதிவுகள் உள்ளன. மணீஷ் தனக்கு பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும், அவரிடம் சென்று உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவார். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒருமுறை கல்லூரியில் நடந்த கலந்துரையாடலில், அவருக்கு பிடிக்கவில்லை என்று எழுந்து சத்தம்போட்டு நீங்கள் எல்லோரும் தேசவிரோதி என்று கூச்சல்போட்டு, பேராசிரியர் ஒருவரை கொச்சையாக பேசினார். இந்த புகார் உறுதி செய்யப்பட்டும், அவர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அவருக்கு கவுன்சிலிங் வழங்குவதாகக் கூறி அப்படியே விட்டுவிட்டனர்.

மணீஷ் முதல் குற்றவாளி. அவர் மீது நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகமும் ஒரு குற்றவாளிதான்.  மாட்டிறைச்சி விழா மிகவும் அமைதியாக நடந்தது. அதில் யாரையும் மாட்டுக்கறி சாப்பிடச் சொல்லி வற்புறுத்தவில்லை. சூரஜ் தாக்கிய மாணவர்கள் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். டீனிடம் அனுமதிப் பெற்றுதான் போராட்டம் நடத்தினோம். சூரஜ் மீது தாக்குதல் நடத்தியவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரஜ்ஜின் மருத்துவ செலவை, கல்லூரி நிர்வாகமே ஏற்க வேண்டும்" என்று கூறினர்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சூரஜ்ஜின் மருத்துவக் குறிப்புகளையும் ஐ.ஐ.டி மாணவர்கள் காண்பித்தனர். மேலும், இது போல, மருத்துவக் குறிப்புகளை மணீஷால் காட்ட முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!