ஐ.ஐ.டி மாணவர்களிடம் கேட்கப்பட்ட 5 கேள்விகளும்... அதற்கான பதில்களும்!

ஐ.ஐ.டி

மாட்டிறைச்சித் திருவிழாவின் தொடர்ச்சியாக ஐ.ஐ.டி வளாகத்தில் கடந்த செவ்வாய்கிழமை தாக்கப்பட்டார் சூரஜ். இன்று அவரது நண்பர்கள், செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்களிடம் கேட்கப்பட்ட ஐந்து கேள்விகளும்... அதற்கான பதில்களும்! 

'' 'மணீஷ், ஜெயின் சமூகத்தைச் சார்ந்தவர். அவரை நீங்கள் மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்தினீர்கள். அதனால்தான், சூரஜைத் தாக்கும் நிலை ஏற்பட்டது' என்று தமிழிசை செளந்தர்ராஜன் கூறுகிறாரே....?''

''அவர் அப்பட்டமாகப் பொய் சொல்கிறார். அன்று, அங்கு என்ன நடந்தது என்று ஐ.ஐ.டி காவலர்களுக்குத் தெரியும். நாங்கள் பொய் சொல்கிறோம் என்றால், அவர்களிடம் விசாரியுங்கள்.'' 

'' 'சூரஜ் தாக்கப்பட்டிருக்கிறார்' என்கிறீர்கள். மணீஷும் தாக்கப்பட்டு இருக்கிறார்தானே. இது, மாணவர்களிடையேயான கைகலப்புதானே. இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பட்டம்...?''

''இது, அடுத்த பொய். மணீஷ் வேண்டுமென்றே சட்டரீதியாகத் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்காக மருத்துவமனையில் தஞ்சமடைந்திருக்கிறார். அவர் நலமாக மருத்துவமனையில் ஆடும் வீடியோ ஒன்று இன்று வெளியாகி இருக்கிறது. அதைப் பாருங்கள் உண்மை புரியும். அடுத்து, 'என்ன கேட்டீர்கள்... இது மாணவர்களுக்கு இடையேயான கைகலப்பு என்றுதானே...?' இல்லை. இது, திட்டமிடப்பட்ட தீவிர வலதுசாரியத்தின் தாக்குதல். அவர்களுடைய குரல் மட்டும்தான் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத் தொடுக்கப்பட்ட தாக்குதல். மணீஷ் தீவிர வலதுசாரி. அவர் எதிர்க்கருத்து கூறுபவர்களை, அரசை விமர்சிப்பவர்களைத் தேசத் தூரோகி என்பவர். அனைத்துத் தரப்பு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான ஓர் உரையாடலின்போது, எதிர்க்கருத்து கூறியதற்காக ஒரு பேராசிரியரை மோசமாகத் திட்டியிருக்கிறார். இது நிர்வாகத்துக்கும் தெரியும். ஆனால், மணீஷ்மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போதும் அவரைக் காப்பாற்றப் பார்ப்பதாகவே நினைக்கிறோம். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நியாயமான ஒரு விசாரணைக்கமிஷனைக்கூட அமைக்க மறுக்கிறது.''

ஐ.ஐ.டி

''பேராசிரியரிடமே மோசமாக நடந்துகொண்டதாகக் கூறுகிறீர்கள். எப்படி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்...?''

''ஆம், இருந்தது... இப்போதும் இருக்கிறது. தொடக்கத்திலிருந்தே நிர்வாகம் தீவிர வலதுசாரியத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. விவேகானந்தர் படிப்பு வட்டத்துக்குக் கல்லூரி வளாகத்திலேயே தனி அறை அமைத்துக்கொடுப்பது... அவர்களின் குரலை எதிரொலிப்பது என்று ஐ.ஐ.டி நிர்வாகிகள் அவர்களின் குரலாகவே இருக்கிறார்கள். அவர்கள் தீவிர வலதுசாரிகளை அழைத்துவந்து கூட்டம் நடத்தினாலும், வெறுப்பைக் கக்கினாலும் எதுவும் கேட்பதில்லை.'' 

''நீங்களும் அரசியல்சார்ந்த கூட்டம் நடத்தியிருக்கிறீர்கள்தானே... அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் எல்லாம் இருக்கிறதுதானே...?''

''ஆம். ஆனால், நிர்வாகம் இருதரப்பையும் எப்படி அணுகுகிறார்கள் என்று பாருங்கள். அதுதான் அச்சமாக இருக்கிறது என்கிறோம். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள். ஆனால், மற்றவர்களுக்கு ஒன்றும் செய்து தருவதில்லை. இருவரையும் சமமாக நடத்தினால், எந்தப் பிரச்னையும் இல்லை. அப்படியிருக்கும்போது நல்ல ஆரோக்கியமான உரையாடல் நிகழும். ஆனால், இவர்கள் ஒருசார்பாக நடந்துகொள்கிறார்கள். அந்தத் தைரியத்தில்தான் மணீஷ் போன்றவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள்.''

''உங்களது கோரிக்கை என்ன...?''

''தாக்கிய மாணவர்கள் அனைவரையும் நீக்கம் செய்ய வேண்டும்; சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்; சூரஜுக்கான மருத்துவச் செலவுகளைக் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!