Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை ஐஐடியில் அன்று நடந்தது என்ன?-கண் காயம்பட்ட மாணவர் வாக்குமூலம்

மிகச்சிறந்த உயர்கல்வி நிறுவனம் எனக் கூறப்படும் சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதற்காக முனைவர்பட்ட ஆய்வாளரான கேரளத்தைச் சேர்ந்த சூரஜ் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். இவரைத் தாக்கிய மணீஷ் என்ற முதுநிலைப் பட்ட மாணவரோ, சூரஜ் தன்னைத் தாக்கியதாகப் பதிலுக்குப் புகார்கூற, இரு தரப்பினர்மீதும் பொத்தாம்பொதுவாக போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். 

சென்னை ஐஐடி


ஆனால் தாக்குதலை முன்னின்று நடத்திய மணீஷ்மீது ஏற்கெனவே இரண்டு முறை கல்லூரி டீனிடம் புகார் தருமளவுக்கு, அவர் அடாவடி செயல்களில் ஈடுபட்டவர் என்கிறார்கள். முகநூல் தளத்தில் அவரின் வெறுப்பூட்டும் கருத்துகளை ஆசிரியர்களே கண்டிக்கும்படி அவர் நடந்துகொண்டுள்ளார் என்றும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக மாட்டுக்கறி சாப்பிடும் நிகழ்வையும் அது தொடர்பான விவாதத்தையும் நடத்தியதை மணிஷ் மற்றும் அவரைச் சார்ந்த சிலருக்குச் சகிக்கமுடியவில்லை. அதனால் உணவுவிழா நடந்த மறுநாளன்று அதில் பங்கேற்ற மாணவர்களைத் தேடியுள்ளனர். அந்தச் சூட்டில்தான் அவர்களின் வன்முறைக்கு மாணவர் சூரஜ்ஜும் இன்னொருவரும் இலக்காகிவிட்டனர். 


கண் மற்றும் தலை பாதிக்கப்பட்டு வானகரம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சூரஜ்ஜை, திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மமக தலைவர் ஜவாஹிருல்லா முதலியவர்கள் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். முன்னதாக, சூரஜ்ஜின் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், முதலமைச்சர் பழனிச்சாமி இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், தமிழக அரசின் சார்பிலோ அதிமுகவின் சார்பிலோ இது குறித்து அதிகாரபூர்வமாக கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 


இந்நிலையில் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது பற்றி தாக்கப்பட்ட மாணவர் சூரஜ், போலீசில் கொடுத்த வாக்குமூல விவரம் வருமாறு:
” கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகோபாலன் என்பவரின் மகனான எனக்கு, 36 வயதாகிறது. சென்னை ஐஐடியிலுள்ள கிருஷ்ணா மாணவர் விடுதியில் 2067ஆம் அறையில் தற்போது தங்கியிருக்கிறேன். வான்வெளிப் பொறியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறேன். 


கடந்த 30ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணிவாக்கில், இமாலயா உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். அப்போது கடல் பொறியியல் துறை மாணவர் மணீஷ்குமார் சிங்கும் வேதியியல் துறையைச் சேர்ந்த அகில் பிரதாப்சிங்கும் இன்னும் ஆறு மாணவர்களும் என்னுடைய சாப்பாட்டு மேசைக்கு அடுத்து வந்து உட்கார்ந்தனர். அதில் மணீஷ் எனக்கு வலப்பக்கமாக அடுத்த இருக்கையில் வந்துஅமர்ந்து என் பெயரையும் தனிப்பட்ட விவரங்களையும் கேட்கத் தொடங்கினார். எதற்காக அவர் இவற்றைக் கேட்கவேண்டும் என நான் கேட்க, குறிப்பான காரணம் ஒன்றுமில்லை என்றார். அதன் பிறகு 28ஆம் தேதியன்று நான் மாட்டுக்கறி சாப்பிட்டேனா என்று கேட்டார். ஆமாம் என நான் கூறவும், அவர் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கி, மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டு ஜெயின் உணவகத்துக்கு வருவதா என்று கேட்டார். அதற்கு நான் பதில் சொல்வதற்குள்ளாகவே அவர் என் தலையில் கடுமையாகத் தாக்கினார். 

சென்னை ஐஐடி


உடனே அகில்பிரதாப்சிங்கும் மற்ற ஐந்து பேரும் வேகமாக வந்து என்னைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் என்னைப் பிடித்துக்கொள்ள மணீஷ் என் தலைமுடியைப் பிடித்து தரையோடு தரையாக இழுத்து முகத்தில் திரும்பத்திரும்பக் குத்தினார். இந்தக் கடுமையான தாக்குதலால் முகத்தில் பல எலும்பு முறிவுகளாகி, தற்போது (வானகரம் அப்போலோ) மருத்துவமனையில் சிகிச்சைபெறும்படி ஆகிவிட்டது. இதற்கு அறுவைச்சிகிச்சையும் செய்யவேண்டிய நிலை உண்டாகியுள்ளது. முகவீக்கமும் காதிலிருந்து ரத்தமும் திரவமும் வருவது சரியாகுமா என்பதை உறுதிப்படுத்த ஒருவாரமாவது மருத்துவமனையில் தங்கி சிகிச்சைபெற வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட வலதுகண் பார்வையையும் மீளப்பெற வேண்டியுள்ளது. 


என்னுடைய புகாரை ஏற்கெனவே போலீசார் பெற்றுக்கொண்டாலும் மணீஷை இன்னும் கைதுசெய்யவில்லை. இதில் என்ன மோசமானது என்றால் அவர், ஐஐடியில் ஏற்கெனவே மற்றவர்களுக்கும் கொலைமிரட்டல் விடுத்தது போன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபட்டவர் என்பது நன்கு தெரிந்த செய்திதான். என் மீதான இந்தத் தாக்குதலைப் பார்த்தால் இது முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டதாகவே தெரிகிறது; முகநூல் தளத்தில் ஏற்கெனவே இது குறித்து அவர் மிரட்டல் விடுத்திருந்தார் என்பது முக்கியமானது. என்மீதான தாக்குதலுக்குப் பிறகு ஐஐடி மருத்துவமனைக்கு வந்த மணீஷ், இது ஒரு தொடக்கம்தான் எனக் கூறியுள்ளார். எனக்கு இன்னும் உயிராபத்து இருப்பதால் போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.”


இந்தக் கடிதத்தில் சூரஜ்ஜின் உறுதியாக வேண்டுகோள் விடுப்பதற்கு, பின்னணியும் இருக்கிறது என்கிறார்கள், அவரின் சக நண்பர்கள்.

முதலில், இரு தரப்பு மாணவர்களுக்கு இடையிலான மோதலாக இதை முடிக்கவிரும்பியதைப் போலவே, போலீசின் நடவடிக்கைகள் இருந்தன. அதையடுத்தே மாணவர் சூரஜ்ஜின் வாக்குமூலத்தை அல்லது விளக்கத்தை வெளியிடுவது என அவர் சார்ந்துள்ள அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட நண்பர்கள் முடிவுசெய்தனர். அது மட்டுமின்றி மணீஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள்மீது கொலைமுயற்சி வழக்கைப் பதியவேண்டும் எனப் போலீசாரிடம் வலியுறுத்தினர். அதையடுத்தே ஐஐடி நிர்வாகத் தரப்பில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஏதும் உடன்பாடு வராததால் தாக்கப்பட்ட மாணவர் சூரஜ்ஜுக்கு ஆதரவாக போராட்டங்கள் இரண்டாம் நாளாகவும் தொடர்ந்தன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement