“அலட்சியம் இல்லை... அதிகாரிகளின் கூட்டு சதி...!” கொதிக்கும் ட்ராஃபிக் ராமசாமி | Traffic Ramaswamy Comments of T Nagar Fire incident

வெளியிடப்பட்ட நேரம்: 06:48 (02/06/2017)

கடைசி தொடர்பு:06:47 (02/06/2017)

“அலட்சியம் இல்லை... அதிகாரிகளின் கூட்டு சதி...!” கொதிக்கும் ட்ராஃபிக் ராமசாமி

ட்ராஃபிக் ராமசாமி

” '35 மணி நேரமா எரிஞ்சுக்கிட்டு இருக்குற ஒரு கட்டடம், கட்டும்போதே விதிமுறை மீறல்'னு எந்த அதிகாரிக்கும் தெரியாதா? இன்னைக்கு வந்து விதிமுறை மீறல்னு அமைச்சரும் அதிகாரிகளும் பேட்டி குடுக்குறாங்க. இங்க அதிகாரிங்க எல்லாம் அமைச்சர்களுக்கு மாமூல் வாங்கி குடுக்குற ஏஜென்டாதான் வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க, இது அதிகாரிகளோட அலட்சியம் எல்லாம் இல்லை; ஒட்டுமொத்த அதிகாரிகளோட கூட்டுச்சதிதான் இந்தத் டி நகர் விபத்துக்குக் காரணம்.'' தன்னுடைய ஆதங்கத்தை வார்த்தைகளில் கொப்பளிக்கிறார் டிராஃபிக் ராமசாமி.

''தொடர்ந்து விதிமுறை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி குரல்கொடுத்து வருகிறீர்கள். இந்த நிலையில் இப்போது ஒரு கோரவிபத்து...?''

''ஆமா, என்ன செய்ய? இந்த அரசும், அரசு அதிகாரிகளும் அப்படித்தானே இருக்காங்க. இந்த விபத்துக்கு வீரேந்திர பிரதாப் சிங் ஐ.ஏ.எஸ்-தான் பொறுப்பேக்கணும். அவரைக் கைதுசெய்யணும். 1999-ல இருந்து 2007வரைக்கும் விதிமுறைக்கு மாறா கட்டப்பட்ட கட்டடங்களைப்பத்தி வந்த புகார் மனுக்களோட எண்ணிக்கை மட்டுமே ரெண்டு லட்சம் இருக்கும். நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கச் சொல்லியும்... அப்போ இருந்த கருணாநிதி அரசு, 'நடவடிக்கை எடுப்போம்... எடுப்போம்'னு சொல்லியே காலத்த முடிச்சுடுச்சி. அதுக்குப்பிறகு வந்த அ.தி.மு.க அரசும் அதைப்பத்திக் கண்டுக்கலை. 16.11.2011-ல வழக்குத் தொடர்ந்தப்போ, 90 சதவிகிதத்துக்கு அதிகமா தீவிபத்து ஏற்படுத்தக்கூடிய 38 கட்டடங்களோட லிஸ்ட்டை அப்போ நீதிமன்றம் வெளியிட்டது. அப்போ கமிஷனரா இருந்த ஜார்ஜ், 'இதுக்கெல்லாம் நடவடிக்கை எடுத்தா சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கு'னு சொன்னார். இன்னைக்கு 15 ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்னு ஒட்டுமொத்த அதிகாரிகளும் தி.நகர்லதான் இருக்காங்க. இப்போ, எல்லாம் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாதா? இது, அவரவர் வசதிக்கு ஏற்ப தப்பு பண்ணிக்கிறாங்க.''

'' 'விதிமுறை மீறப்பட்டுள்ளது' என அமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறாரே?''

தீ விபத்து

''என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த விஷயத்துல பில்டிங் கான்ட்ராக்டர்மேல தப்பு சொல்றதெல்லாம் ஏத்துக்க முடியாது. ஒருவீடு கட்ட கார்ப்பரேஷன் அனுமதி வேணும்; ரெண்டு மாடிக்குமேல போனா சி.எம்.டி.ஏ பெர்மிஷன் வேணும்; மல்டி ஸ்டோர் பில்டிங் கட்ட ஹவுஸிங் செகரட்டரி பெர்மிஷன் குடுக்கணும். அப்போ எல்லாம் காசை வாங்கிகிட்டு பெர்மிஷன் குடுத்துட்டு, இன்னைக்குவந்து எதுவுமே தெரியாதமாதிரி பேசுறெதெல்லாம் பார்த்தா இவுங்கமேல கிரிமினல் கேஸே போடலாம். ஒருவீடு கட்டணும்னா, முன்னாடி 15 அடி; பின்னாடி 10 அடி; இரண்டு பக்கவாட்டுலேயும் 5 அடி விட்டு கட்டணும்னு ரூல்ஸ் இருக்கு. இப்படி, எல்லாக் கட்டடத்துக்கும் இதே ரூல்ஸ் பார்த்தா அனுமதி குடுக்குறாங்க? இவுங்களுக்கு எல்லாமே காசுதான். ஒருவேளை, விபத்து நடந்து உயிர்ச் சேதம் நடந்தாலும் காசுதான். ஆளுக்கு, ஒரு லட்சமோ... ரெண்டு லட்சமோ குடுத்து வாயை அடைச்சுருவாங்க.''

''உங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?''

''இதுதொடர்பா இன்னைக்கு வழக்குத் தொடரப்போறேன். 2006 - 2012வரைக்கும் தி.நகர்ல இருந்த எம்.எல்.ஏ., எம்.பி., கார்ப்பரேஷன் அதிகாரிகங்க என எல்லார் மேலயும் கிரிமினல் வழக்குத் தொடரப்போறேன். எல்லா ஐ.ஏ.ஏஸ் அதிகாரிகளையும் மூணு வருஷத்துக்கு ஒருதடவை மாத்துற அரசு, இந்த ஐ.ஏ.எஸ்ஸை மட்டும் அஞ்சு வருஷமா பதவில வெச்சுருக்கத்துக்குக் காரணமே, 'இவர்தான் மாமூலை கரெக்டா அமைச்சர்களுக்குக் கொண்டுபோயி சேர்க்குறாரு என்பதுதான். இதைத் தவிர, அவர் வேற என்ன சாதனை பண்ணிருப்பாருனு தெரியலை. ipc 100, 166a, 217-னு மூணு பிரிவுலயும் இவுங்கமேல இன்னைக்கு வழக்குத் தொடுக்கப்போறேன்.''

ஒரு சாமான்யனின் குரல், எப்போதும் மக்களுக்காக ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

 


டிரெண்டிங் @ விகடன்