வெளியிடப்பட்ட நேரம்: 22:08 (01/06/2017)

கடைசி தொடர்பு:22:10 (01/06/2017)

சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவும் ஐ.ஐ.டி மணீஷ் வீடியோ!

மணிஷ்

மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் விற்பனைக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதைக் கண்டித்து சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மே 29 -ம் தேதி மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது. அதில், ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங்கில் பிஹெச்.டி ஆய்வுப்பட்டம் மேற்கொண்டுவரும், கேரளாவைச் சேர்ந்த மாணவர் சூரஜ் கலந்துகொண்டார். மறுநாள் ஐ.ஐ.டி கேன்டீனில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சூரஜை, oceanic இன்ஜினீயரிங் பிரிவில் ஆய்வுப்பட்டம் மேற்கொள்ளும், வட இந்தியாவைச் சேர்ந்த மணீஷ் மற்றும் அவரது நண்பர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். சூரஜின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், அறுவைச் சிகிச்சைக்காக வானகரத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தக் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட மணீஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேரள சமிதியும், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டமும் இணைந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் மூன்று முக்கிய கோரிக்கைகள் வைத்துள்ளனர். 1.தாக்குதலில் ஈடுபட்ட மணீஷ் மற்றும் அவரின் நண்பர்கள் அனைவரையும் உடனடியாக சஸ்பெண்டு செய்யவேண்டும். 2.விரிவான விசாரணையை மேற்கொண்டு இந்தத் தாக்குதலில் தொடர்புடைய அனைவர்மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3.எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விரிவான விளக்கத்தை மாணவர் அமைப்புகளிடம் தெரிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்கவில்லை எனில் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மாணவர்களிடையே சுமுகமாக பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் முயன்று வருகிறது. இருப்பினும் இந்தத் தாக்குதலில் சூரஜுக்கு மட்டும் அடிபடவில்லை, மணீஷுக்கும் பலமாக அடிபட்டுள்ளது. இதனால் மணீஷின் கை எலும்புகள் பாதிப்புக்குள்ளாகி கையில் கட்டுப்போடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.ஐ.டி நிர்வாகம் மாணவர்களிடம் சொல்லி வருகிறது. 

 

 


இந்த நிலையில் ஐ.ஐ.டி மாணவர்களால் வெளியிடப்பட்டதாக ஒரு வீடியோ காலையிலிருந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் மணீஷ் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் இருக்கின்றனர். அங்கு கை உடைந்ததாகச் சொல்லப்பட்டு மணீஷ்,  அவரின் நண்பர்களோடு தீவிர ஆலோசனையில் கையை வேகமாக ஆட்டிக்கொண்டு அங்கும் இங்குமாக நடந்து செல்கிறார். இது வீடியோவில் பதிவாகி இருந்தது. கை உடைந்ததாகச் சொல்லப்படும் மணீஷ் மருத்துவமனையில் கட்டுப் போடுவதற்கு முன் நன்றாகத்தான் இருக்கிறார். ஆக, இந்த வன்முறைச் சம்பவத்தைத் திசை திருப்புவதற்கான முயற்சிதான் இந்தக் கை உடைப்பு நாடகம் என்று மாணவர்கள் கூறுகின்றனர். இது ஐ.ஐ.டி மாணவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பு : இந்த வீடியோ பற்றி மணீஷ் மற்றும் அவரது நண்பர்கள் விளக்கம் கொடுக்கத் தயாராக இருந்தால் அதை நாங்கள் நிச்சயம் பிரசுரிப்போம்.


டிரெண்டிங் @ விகடன்