உணர்வதும் கரைவதும் ராஜா இசையில் தொடங்குதம்மா..! #HBDIlayaraja | Just feel his music. Happy birthday IlayaRaja

வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (02/06/2017)

கடைசி தொடர்பு:14:22 (02/06/2017)

உணர்வதும் கரைவதும் ராஜா இசையில் தொடங்குதம்மா..! #HBDIlayaraja

இளையராஜா ஓர் ஆன்மிகவாதி. ஆன்மிகத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட ராஜாவை ஏற்றுக்கொள்வார்கள். `தான் என்ற அகங்காரத்தை அழித்து, பித்துநிலையை அடைவதுதான் ஆன்மிக உணர்வுநிலை' எனச் சொல்லப்படுவதுண்டு. தன்னை மறப்பது, தன்னில் கரைவது, பரவசம் அடைவதுதான் ஆன்மிகம் என்றால், அந்த உணர்வுகளைத் தமிழர்களுக்குத் தந்தது ராஜாவின் இசைதான். ஆன்மிகத்தையும் ஆன்மிகம் குறித்த ராஜாவின் வார்த்தைகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்களும்கூட, அவரது இசையின்மூலம் `ஆன்மிக நிலை' எனச் சொல்லப்படும் பரவசத்தை அடையலாம். ஏனெனில், ராஜாவின் இசை... தமிழர்களின் தீரா தியானம்.

நூற்றாண்டு காணும் தமிழ் சினிமா, மகத்தான பல சாதனையாளர்களையும் மேதைகளையும் உலகத்துக்குத் தந்திருக்கிறது. அந்தச் சாதனையாளர்களில் ராஜாவுக்கு  தனித்துவமான ஓர் இடம் உண்டு. தமிழ் சினிமா சாதனையாளர்களில் பலர், தமிழ் மண்ணுக்கே உரிய தனித்துவம்கொண்டவர்கள். உலக அளவில் முன்னிறுத்தக்கூடிய தன்மை அவர்களின் சாதனைகளில் இருந்ததில்லை (அவசியம் இல்லாமலும் இருக்கலாம்). ஆனால் ராஜாவோ, தமிழ் மண்ணின் தனித்துவத்தையும் உலகளாவிய தன்மையையும் தன் இசையின் மூலம் நிகழ்த்திக்காட்டியவர். ராஜாவுக்கு முன்னால் இருந்த இசையமைப்பாளர்களின் இசையிலும் பல நல்ல பாடல்கள் உருவாகியிருக்கின்றன. ஆனால், பின்னணி இசையின் தன்மையையும் அதன் அர்த்தத்தையும் தமிழர்களுக்கு அழுத்தமாக உணரவைத்தவர் இளையராஜாதான். ஒரு சிற்பி இறுதியில் கண்களைத் திறக்கும்போது அந்தச் சிற்பத்துக்கு ஜீவன் வந்துவிடுவதைப்போல, ஒரு சினிமாவுக்கு உயிர் கொடுக்கும் கலையை நிகழ்த்தியவர் இளையராஜா.

இசைஞானி இளையராஜா

அவருக்கு அரசியல்மீது ஆர்வமில்லை அல்லது அரசியலைக் கண்டு விலகிக்கொள்கிறார் என்று சொல்லலாம். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து பிறந்து வந்ததால் அவரை தங்களின் அடையாளமாக, ஒடுக்கப்பட்ட மக்களும் சாதி எதிர்ப்பாளர்களும் முன்வைப்பதுண்டு. ஆனால், அதை ராஜா விரும்புவதில்லை. அவர் விரும்பாவிட்டாலும் அவரது இசை ஓர் அரசியல் செயல்பாடுதான். அயோத்திதாசரின் தமிழ் பௌத்த அரசியல், பெரியாரின் திராவிடர் அரசியல், பண்ணையடிமை முறைக்கு எதிராகப் போராடிய பொதுவுடைமை இயக்க அரசியல் என  இரு நூற்றாண்டுத் தமிழக அரசியலின் அடிப்படைகளாக இருந்தவை சுயமரியாதைக்கான போராட்டமும், தங்கள் இடத்தை உறுதிசெய்துகொள்ளும் விடுதலை அரசியலும்தான். இந்தித் திணிப்பை எதிர்த்த தமிழ் மண்ணில், இந்திப் பாடல்களின் ஆதிக்கம் நிறைந்த காலகட்டத்தை மாற்றியமைத்தவர் இளையராஜா. எளிய மக்களின் இசைக் கருவிகளான பறை, உடுக்கை, உறுமி ஆகியவற்றுக்கான மகத்தான இடத்தை உருவாக்கித்தந்தது அவரது இசை.

ராஜாவின் இசையோடு பயணிக்க முடியாமல் தடுமாறி நின்றவை இரண்டு விஷயங்கள். ஒன்று, தமிழ் சினிமாக்களின் அபத்தமான காட்சியமைப்பு. எண்பதுகளில் வெளியாகி இன்றளவும் நம் ஆன்மாவை உலுக்கும் ராஜாவின் பாடல்களில் சிலவற்றை டி.வி-யிலோ யூடியூபிலோ பாருங்கள். ஒலியை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு, ம்யூட்டில் பார்த்தால் அந்தப் பாடல்கள் கவுண்டமணி-செந்தில் நகைச்சுவைக் காட்சிகளைவிட காமெடியாக இருப்பதை உணரலாம். மிகச்சில பாடல்களின் காட்சியமைப்புகளே ராஜா இசையின் உயரத்தைத் தொட்டவை அல்லது தொட முயன்றவை. அதேபோல் சத்தற்றப் பாடல் வரிகளை எழுதிக் குவித்த பாடலாசிரியர்கள் இன்னொரு நெருடல். ராஜா சிகரத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, இந்தப் பாடலாசிரியர்களின் பாடல் வரிகள் மலையடிவாரத்தில் சுள்ளி பொறுக்கிக்கொண்டிருந்தன. ராஜா உருவாக்கித் தந்த பல்லக்கில் சொற்களின் பிணங்களை அடுக்கிவைத்த பாடலாசிரியர்களும் உண்டு. இளையராஜா, காலத்துக்கு அப்பால் பறந்துகொண்டிருந்தபோது அவர் இசையமைத்த பெரும்பாலான தமிழ் சினிமாக்கள் அண்ணாந்து பார்த்தபடி, மூச்சிரைக்க பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தன என்பதுதான் நிதர்சனம்.

ஒவ்வொருவருக்குமே 'எனக்குப் பிடித்த இளையராஜா பாடல்கள்' என ஒரு பட்டியல் இருக்கும். நிச்சயமாக அவை நூற்றுக்கணக்கிலிருந்து ஆயிரக்கணக்கில் இருக்கும். எனக்கும் அப்படியே. உள்ளங்கைக்குள் ஏந்தியிருக்கும் பனிக்கட்டியின் வழியே ஒரு பனிச்சிகரத்தை உணர்வதைப்போல ராஜாவின் மிகச்சில பாடல்களை மட்டும் எடுத்துப் பேசலாம்.

இசைஞானி இளையராஜா

ராஜாவின் இசையில் மிகச்சிறந்த பாடலாக நான் நினைப்பது 'ஹே ராம்' படத்தில் இடம்பெற்ற 'இசையில் தொடங்குதம்மா...' பாடல். இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை தமிழ் சினிமாவில் வெளியான பாடல்களை தராசில் ஒரு தட்டிலும், ராஜாவின் 'இசையில் தொடங்குதம்மா...' பாடலை இன்னொரு தட்டிலும் வைத்தால், என் தட்டு ராஜாவின் 'இசையில் தொடங்குதம்மா...'வை நோக்கியே தாழும். கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலைக் கேட்கும்போது நம் மனதின் வெப்பத்தை, உடலின் அதிர்வை உணர முடியும். ஒரு களியாட்டத் திருவிழாவில் கூட்டத்தில் நம்மைத் தொலைக்கும் உணர்வையும், நம் ஆடை பிடித்து இழுத்து அண்ணாந்து பார்த்து சிரிக்கும் குழந்தையின் குதூகலத்தையும் நமக்குள் கடத்தும் பாடல் இது.

இளையராஜாவிடம் நல்ல பாடல்களைக் கேட்டு வாங்குவதிலும் அதைச் சிறப்பாகக் காட்சியமைப்பதிலும் தேர்ந்த மிகச் சிலரில் ஒருவர் கமல்ஹாசன். கமலின் 'குணா' படத்தில் வரும் 'உன்னை நான் அறிவேன்...' பாடல் ராஜாவின் மேதைமைக்கு இன்னோர் உதாரணம். தடதடக்கும் பழைய மின்விசிறி சுழலும் ஓசையிலிருந்து தொடங்கி, காதலும் தாய்மையும் கலந்த 'உன்னை நான் அறிவேன்...' மெல்லிசையில் தொடர்ந்து இடைவெட்டி நுழையும் வடக்கத்திய செவ்வியல் இசையின் ஆலாபனை நீண்டு, இடையில் அதை ஏந்திக்கொண்டு 'ஒயிலா ஹோய்...' என்று நாட்டுப்புற இசை உயரத்தில் பறக்கும்.

உண்மையில் இளையராஜாவின் இசையை அனுபவிப்பது என்பதே ஓர் ஆன்மப் பயணம்தான். அது நம்மை வெவ்வேறு நிலப் பகுதிகளுக்குத் தூக்கிச் செல்லும்; மெல்ல விடுவித்து, அந்தரத்தில் மிதக்கச் செல்லும்; திடீரென நாம் இதுவரை அறியாத நிலப்பரப்பில் தூக்கிப்போடும். இப்படி வெவ்வேறு காலத்துக்கும் நிலத்துக்குமிடையில் நம்மைப் பயணிக்கச் செய்வது ராஜாவின் இசை. 

'நிழல்கள்' படத்தில் இடம்பெற்ற 'மடை திறந்து...' பாடல், ஓர் இளம் இசையமைப்பாளன் திரைப்படத் தயாரிப்பாளர் முன்னால் பாடிக்காட்டும் பாடல். பாறைகளை உடைத்துவிடுவதைப்போல ஆவேசத்துடன் கொட்டும் அருவிக்கு முன்னால், சின்னச் சிலிர்ப்புடனும் தயக்கத்துடனும் கூச்சத்துடனும் நின்று,  பிறகு அருவிக்குள் மெள்ள நுழையும்போது, சடார் எனக் கொட்டும் அருவியைப் போன்ற அனுபவத்தை இந்த 'மடை திறந்து...' பாடலில் உணரலாம்.

 

இசைஞானி இளையராஜா

'சிந்து பைரவி' படத்தில் இடம்பெற்ற 'தொம் தொம் தொம்...' பாடல். மனைவி நெருக்கமான வேளையில் முத்தமிடும்போது காதலியின் நினைவு வந்துபோக, காமத்தையும் காதலையும் தன் உடலையும் சேர்த்துத் தூக்கிப்போட முனையும் ஒரு பாடகனின் ஆவேசமும் அவஸ்தையும் கலந்த பாடல். விடாது கனன்றுகொண்டிருக்கும் வேள்வித்தீயும் பாறைகள்மீது மோதும் அலைகளின் இரைச்சலும் என உணர்வுகளை, வார்த்தைகள் அதிகமில்லாமல் கொண்டுவந்து கொட்டும் பாடல்.

ராஜாவின் இசையில் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்களும் நமக்குள் வந்து போகும். உண்மையில் இளையராஜாவின் இசையைக் குறித்து எழுதுவது எளிதானதல்ல. ஏனெனில், அவரது இசை எழுதுவதற்கானதல்ல... உணர்வதற்கானது; கரைவதற்கானது. நம்முடைய உயிர் சொட்டுச் சொட்டாய் வழிய, அதை வெளியில் இருந்து ரசிக்கும் அனுபவமே இசைஞானியின் இசை தரும் அனுபவம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close