கருணாநிதி, எழுத்துகளால் ஆனவர்! - ‘பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர் 4

கருணாநிதி

பாகம் 1 / பாகம் 2 / பாகம் 3 /

வ்வளவு பேசினாரோ, அவ்வளவு எழுதினார். `ரோமாபுரி பாண்டியன்', `தென்பாண்டிச் சிங்கம்', `பொன்னர் சங்கர்', `பாயும்புலி பண்டாரக வன்னியன்', `துள்ளி வருகுது வேள்' எனச் சரித்திர நாவல்களின் பட்டியல் ஒரு பக்கம். கவியரங்கக் கவிதைகள் மற்றொரு பக்கம். `வெள்ளிக்கிழமை', `ஒரே ரத்தம்', `தூக்குமேடை' எனச் சமூகக் கதைகளின் பட்டியல் வேறொரு பக்கம். சிறுகதைகளின் அணிவகுப்பு மேலுமொரு பக்கம். `திருக்குறள் உரை', `தொல்காப்பிய உரை', `தாய் காவியம்' என விளக்கவுரை எழுதிய நூல்கள் ஒரு பக்கம். இப்படி பக்கம் பக்கமாகச் சொல்லவேண்டிய கலைஞரின் பக்கங்கள் எண்ணற்றவை. திரைக்கதை வசனங்கள், நாடகங்கள், கடிதங்கள், கேள்வி-பதில்கள், கட்டுரைகள் என எழுதிக் குவித்தவற்றைச் சேர்த்தால், இந்த மனிதர் பிறந்ததிலிருந்து எழுதிக்கொண்டேதான் இருந்திருப்பார் என இவரை அறியாதவர்கள் நினைக்கக்கூடும். சுமார் 70 ஆண்டுகளாக அரசியல் கட்சியில் இருப்பவர். ஒரு நாளும் இடைவிடாமல் மேடைகளில்  பேசிவந்தவர். தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்தவர். 50 ஆண்டுகளாக ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருப்பவர் என்று அடுக்கிக்கொண்டுபோனால், இவரை அறியாதவர்கள் நம்பாமல்போவதற்கும் வாய்ப்பு அதிகம்.
இவருக்கு மட்டும் ஒருநாள் என்பது 48 மணி நேரமாகவோ, 72 மணி நேரமாகவோ இயற்கை ஏதேனும் சலுகை வழங்கியிருக்குமோ?

இலக்கியம்


சரித்திரக் கதை எழுதுவது சாதாரணம் அல்ல. அந்த நாளில் பயன்படுத்திய உடை, உணவு, போர்க்கருவிகள், பயணிக்கும் முறை, மன்னர்கள், புலவர்கள் பெயர்கள், மொழிப் பிரயோகம், கால வித்தியாசம், தூர வித்தியாசம் அனைத்தும் மனதுக்குள் இருக்க வேண்டும். இலங்கை மீது போரிட்டான் என்றால்,  படைக்கருவிகளை எப்படிக் கொண்டுசென்றான், உணவுக்கு என்ன வழி செய்தான், வீரர்களுக்கு எந்த மாதிரியான பயிற்சிகள் அளிக்கப்பட்டன, எதற்காகப் போரிட்டான் என, கதையைப் பின்னிக்கொண்டுபோக வேண்டும். தரவுகள் முக்கியம். ஆனால், அது கட்டுரையாக அமைந்துவிடக் கூடாது. பாண்டிய மன்னர்களும் சோழ மன்னர்களும் யவனர்களோடு எந்த மாதிரியான வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர், எப்படி ஏற்றுமதி செய்யப்பட்டது, எப்படி மொழிகளைப் புரிந்துகொண்டனர், எவ்வளவு நாள்கள் பயணித்தனர்? கப்பலைச் செலுத்துபவனின் அறிவு, நாவாய், பாய்மரம், படகு ஆகியவற்றுக்கான வித்தியாசங்கள் என நுணுக்கமாக அறிந்திருக்க வேண்டும். கலைஞர் அந்த மாதிரியான விவரங்களுக்கு நேரம் செலவழிப்பதையும், அதற்கான வல்லுநர்களிடம் பேசி விளங்கிக்கொள்வதையும் நான் அறிவேன். `முரசொலி' நண்பர்கள் சிலரும் அதைப் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதற்கெல்லாம் நேரம் அவருக்கு ஒத்துழைத்ததா... நேரத்துக்கு அவர் ஒத்துழைத்தாரா என்ற ஆச்சர்யம்தான் அந்தச் சரித்திரக் கதைகளைவிடவும் முக்கியம் என நினைக்கிறேன்.
திருக்குறளில் கடவுள் வாழ்த்துப் பகுதிக்கு கலைஞர் எழுதிய உரை, அவருடைய கொள்கை சார்ந்தது.

இலக்கியம்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
என்ற குறளுக்கு,
 
தன்னைவிட   அறிவில்  மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி
நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால்
என்ன பயன்? ஒன்றுமில்லை.
என்றும்

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
என்ற குறளுக்கு,
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி
நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
என்றும் உரை எழுதியிருப்பது கலைஞர் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் குறளின் பொருளையும் குறைக்காமல் செய்திருக்கும் மொழி நயம்.

குறளோவியம் என ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு சிறுகதை எழுதி விளக்கியது, குறள்மீது அவருக்கு இருந்த ஈர்ப்பை விளக்கும். அரசு சார்பில் கட்டப்பட்ட ஒரு கட்டடத்துக்குக் `குறளகம்' எனப் பெயர் வைத்திருப்பதும் அந்த ஈர்ப்புக்கு இன்னோர் அடையாளம்.
கல்வி நிறுவனத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பதற்கு, கலைஞர் சிறந்த உதாரணம். பள்ளிப்படிப்பைத் தாண்டாதவர் கலைஞர். அவருடன் தி.மு.க-வில் பங்காற்றிய நெடுஞ்செழியன், அன்பழகன் போன்றோர் எம்.ஏ படித்தவர்கள், தமிழறிஞர்கள். ஆனால், எழுதும் ஆர்வத்தோடு ஒப்பிட்டால், கலைஞரிடம் நெருங்க முடியாத தூரத்தில் இருந்தனர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதலாம், சிலப்பதிகாரத்தை நாடகமாக்கலாம் என இவர்தான் நினைத்தார்.
`நெஞ்சுக்கு நீதி' என, தன் வாழ்க்கையைத் தானே பதிவுசெய்ய நினைத்து, அதிலும் ஐந்து பாகங்களை எழுதி முடித்துவிட்டார்.
கலைஞர், எழுத்துகளால் ஆனவர்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!