'இதைச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது'- திருச்சி போலீஸை பதறவைத்த போராட்டக்காரர்கள்!

மத்திய அரசின் மாடு, ஒட்டகம் இறைச்சி மீதான தடையைக் கண்டித்தும், சென்னை ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் மீதான தாக்குதலைக் கண்டித்தும் திருச்சியில் தடையை மீறி போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை, கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்துவருகின்றன. பல இடங்களில் மாட்டிறைச்சித் திருவிழா நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின் மாடு, ஒட்டகம் இறைச்சி மீதான தடையைக் கண்டித்தும், சென்னை ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் மீதான தாக்குதலைக் கண்டித்தும் திருச்சி  மத்தியப் பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று போராட்டம் நடத்தினர்.

மக்கள் அதிகாரம் அமைப்பினரின் போராட்டம்குறித்து தகவலறிந்த போலீஸார், திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு காவல்துறை படை குவிக்கப்பட்டது. பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியிலும், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ம.ப.சின்னதுரை, ம.க.இ.க அமைப்பின் பாடகி லதா ஆகியோர் தலைமையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பறையடித்தபடி மத்தியப் பேருந்து நிலையம் அருகே ஊர்வலமாக வந்தனர். அடுத்து, திருச்சி பெரியார் சிலை முன்பு கூடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர், மாட்டுக்கறியைச் சாப்பிட்டபடியே, மாட்டு இறைச்சிக்குத் தடைவிதித்துள்ள மத்திய அரசுக்கு எதிராகவும், மாணவர் சூரஜ் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், 'ஐஐடி மாணவர் தாக்குதலுக்குக் காரணமான மணீஷ் குமாரை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு, மக்கள் அதிகாரம் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், இந்தப் போராட்டத்துக்கு போலீஸார் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டது. மாட்டு எலும்பை வாயில் வைத்தபடியும், கறியைச் சாப்பிட்டவாறும் போராடியவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராடக்காரர்கள், இதைச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்று போலீஸாருக்குக் கொடுக்க, போலீஸார் பதறிப்போனார்கள். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த சிவா, “மாட்டுக்கறிக்குத் தடை என்பது சிறுபான்மையினர், தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களின் உரிமையைப் பறிக்கும் செயல். வறட்சியில் விவசாயிகள் நெஞ்சு வெடித்து இறந்துபோனார்கள், இந்த அரசு வேடிக்கை பார்த்தது. இப்போது, அதே விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கிறது. உணவு என்பது அவரவர் உரிமை அதைப் பறிக்கிறது. இதனைக் கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டோம். எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் தடையை மீறி போராட்டம் நடத்தினோம். இப்போது எங்களைக் கைதுசெய்யத் துடிக்கிறது போலீஸ். அதேபோல, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவை நடத்தியதற்கு எதிராக, ஐஐடி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோதச் செயல். ஒருபோதும் இதை அனுமதிக்கக்கூடாது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!