வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (02/06/2017)

கடைசி தொடர்பு:13:20 (02/06/2017)

‘மஞ்ச பைகளில் 1 கோடி ரூபாய்.. அப்பமாகப் பங்கு போட்ட போலீஸ்?!’ - குற்றால கலாட்டா #VikatanExclusive

2000, 500 ரூபாய் நோட்டு

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், மரத்தடியில் கிடந்த மஞ்ச பையில், கட்டுக்கட்டாக கரன்சிகளைக் கண்டெடுத்த சிறுவனிடமிருந்து பறித்த போலீஸார், தங்களுக்குள் பங்கு போட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. 

'காசு... பணம்... துட்டு... மணி, மணி' என்ற பாடல் வரி  நிஜமானால் எப்படியிருக்கும். மனசுக்குள் மகிழ்ச்சி மத்தாப்புகள் வெடித்துச் சிதறும் அல்லவா. அதுபோலத்தான் நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் உள்ள பத்து வயது சிறுவனுக்கு இருந்தது அன்று. வீட்டிலிருந்து வெளியேறிய அந்தச்சிறுவன், ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதிக்கு தனியாகச் சென்றுள்ளான். அப்போதுதான், அவன் கண்ணில் பட்டது, மரத்தடியில் கிடந்த இரண்டு மஞ்ச பைகள். உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவலுடன் அதைத் திறந்துபார்த்த அந்தச் சிறுவனுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் காத்திருந்தது. ஒரு பையில் துணிகளும் இன்னொரு பையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் சீல் வைக்கப்பட்ட புத்தம் புதிய கரன்சி நோட்டுகள். அடுத்த நிமிடமே ஆனந்தத்தில் துள்ளிக்குதித்த அந்தச் சிறுவன், 'காசு... பணம்... துட்டு' என்று பாடிக்கொண்டே மஞ்ச பையோடு வீட்டுக்கு ஓடி வந்தான். மூச்சிரைத்த அந்தச் சிறுவனின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியைப் பார்த்ததும் அவனது தாய், என்னவென்று கேட்பதற்கு முன்னே, அந்தச் சிறுவன், ''அம்மா... அம்மா...'' என்று மஞ்ச பையிலிருந்து ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொடுத்தான்.

அதைப்பார்த்த அவனது தாய்,''ஏதுடா இவ்வளவு பணம்... எங்கயாவது திருடினியா...'' என்று கேட்க, ''இல்லம்மா 'மரத்தடியில கிடந்துச்சு, என் மேல சத்தியமா திருடல'' என்று விவரத்தைச் சொல்லி முடித்தான். அதற்குள், சிறுவனின் வீட்டுக்குள் திபு திபுவென பக்கத்து வீட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளே வந்தனர். அவர்கள், சிறுவனின் சத்தம், சந்தோஷம்குறித்து விசாரித்தனர். அவர்களின் கண்களிலிருந்து மஞ்ச பையை பக்குவமாக சேலைக்குள் மறைத்துக்கொண்டே பேசினார், சிறுவனின் தாய். சிறிது நேரத்துக்குப் பிறகு மூன்று பெண்களும் நேரடியாகவே பண விஷயத்தைச் சொல்ல, ''அப்படி ஒண்ணுமில்லே'' என்றார் சிறுவனின் தாய். ''நீ உண்மையச் சொல்லலைனா, போலீஸுக்குப் போயிருவோம்'' என்று கோரஸாக மூணு பெண்களும் சொல்ல, பயத்தில் சிறுவனும் அவனது தாயும் உண்மையைச் சொல்லியதோடு, சேலைக்குள் மறைத்துவைத்த மஞ்ச பையையும் வெளியில் எடுத்தாள். உள்ளே கரன்சி நோட்டுக்கள் வெளியில் எட்டிப்பார்த்துச் சிரித்தது. அதைப் பார்த்த அங்கிருந்த அனைவரும் சிரித்தனர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, போலீஸுக்குப் போகாமலிருக்க மூணு பெண்களுக்கும் சில ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து வாயடைத்தார் 2000 ரூபாய் நோட்டுசிறுவனின் தாய். அதை வாங்கிக்கொண்டு மூணு பெண்களும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.  அதன் பிறகுதான் வில்லங்கம் வீதிவரை சிறுவனின் குடும்பத்தை இழுத்துச் சென்றது. மரத்தடியில் சிறுவன் பணம் எடுத்த தகவல், அரசல் புரசலாக ஊருக்குள் பரவியது. ஆளாளுக்கு பஞ்சாயத்துசெய்து பணம்பறிக்க முயன்றனர். 50 லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை கிடைத்ததாகத் தகவல் உலா வந்தது. பணம் கிடைக்காத பொறாமையில், இந்தத் தகவல் குற்றாலம் போலீஸுக்கும் சொல்லப்பட்டது. உடனடியாக போலீஸார், சிறுவன், அவனது தாய், பணத்தை வாங்கிய பக்கத்து வீட்டு மூன்று பெண்கள் என அனைவரையும் ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு சென்றனர். அங்கு, சில ஆயிரம் மட்டுமே கிடைத்ததாக சிறுவனின் தாய் சொன்னார். அதன்பிறகு, சில லட்சங்கள் இருந்தாகத் தெரிவித்தார். விசாரணை முடிவில், அது ஒரு கோடி ரூபாய் என்று முடிவுக்கு வந்தது.

இந்தத் தகவல் கிடைத்த வழக்கறிஞர் ஒருவர், போலீஸ் நிலையத்திலேயே பஞ்சாயத்துப் பேசி பண விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். அடுத்து, அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தற்போது, பணம் போலீஸ் உள்பட பஞ்சாயத்துப் பேசியவர்கள் வரை பங்கு போடப்பட்டுள்ளதாகத் தகவல். இதுகுறித்து நமக்கு தகவல் தெரிவித்தவர், அனைவரின் முழு விவரங்களையும் தெரிவித்தார். பிறகு, சம்பந்தப்பட்ட குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகியிடம் போனில் தொடர்பு கொண்டு தகவலைக் கேட்டோம். ‘குடும்பப் பிரச்னை காரணமாக விசாரித்தோம். நீங்கள் சொல்வதைப் போல பண விவகாரமில்லை’ என்று சொல்லியதோடு, இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

அடுத்து, நமக்கு சொன்னவர் தெரிவித்த ஆடியோ ஆதாரத்தை நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்.பி அருண் சக்தி குமாருக்கு அனுப்பி வைத்ததோடு, அவரிடமும் விசாரித்தோம். “நீங்கள் சொல்லும் தகவல் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் விசாரித்த பிறகே உண்மை தெரியவரும். அதோடு, இந்தச் சம்பவத்தில் சிறுவன், அவனது தாய் என அனைவரிடமும் விசாரணை நடத்த உத்தரவிடுகிறேன்” என்றார். 

மரத்தடியில் கிடந்த மஞ்சள் பை விவகாரத்தில், போலீஸ் உயரதிகாரியின் விசாரணைக்குப் பிறகே, கூடுதல் தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தகவலையும் உங்களுக்குப் பகிர்வோம்.

சம்பந்தப்பட்ட சிறுவனின் குடும்பத்தினரிடம் போனில் பேசியபோது, ‘போலீஸார், எதையும் சொல்லக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்கள்' என்று இணைப்பைத் துண்டித்துவிட்டனர்.


டிரெண்டிங் @ விகடன்