காட்டு யானை தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி! | Edappadi Palaniswami funds Rs 16 lakh for family members of four people killed by wild elephant

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (02/06/2017)

கடைசி தொடர்பு:14:46 (02/06/2017)

காட்டு யானை தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி!

காட்டு யானை தாக்கி உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கு, தலா 4 லட்ச ரூபாய் உடனடியாக வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், குறிச்சி மற்றும் வெள்ளலூர் கிராமத்தில், இன்று (2.6.2017) அதிகாலை காட்டு யானைகள் கூட்டமாகப் புகுந்து, வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகள் காயத்திரி, வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி நாகரத்தினம், மாரியப்பன் என்பவரின் மனைவி ஜோதிமணி மற்றும் குப்பண்ண கோனார் என்பவரின் மகன் பழனிசாமி ஆகிய நான்கு நபர்களைத் தாக்கி, அதனால் அவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானை  தாக்கியதில் அகால மரணமடைந்த காயத்திரி, நாகரத்தினம், ஜோதிமணி மற்றும் பழனிசாமி ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த  இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். காட்டு யானை தாக்கியதில் மூன்று நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியையும் அறிந்து வருத்தமடைந்தேன்.

காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருபவர்களுக்கு நல்ல முறையில் சிசிச்சை அளிக்க கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 59,100 ரூபாயும் வனத்துறைமூலம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.