சென்னையில் எலெக்ட்ரிக் பேருந்து இயக்கப்படுமா? அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் | Electronic bus testing will soon, TN Minister M.R.Vijayabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (02/06/2017)

கடைசி தொடர்பு:14:50 (02/06/2017)

சென்னையில் எலெக்ட்ரிக் பேருந்து இயக்கப்படுமா? அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில்

சென்னையில், 'விரைவில் எலெக்ட்ரிக் பேருந்து சோதனை ஓட்டம் நடத்தப்படும்' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


சென்னை குரோம்பேட்டையில், போக்குவரத்துத்துறை ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 'ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையில், இதுவரையில் 1,250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை செப்டம்பர் மாதத்தில் வழங்குவதற்கு முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பான போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பிரச்னை, பேச்சுவார்த்தைமூலம் முடிவுக்குக்கொண்டுவரப்படும். ஓரிரு பேச்சுவார்த்தைகளில் 13-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் முழுமைபெறும். போக்குவரத்தில் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து, சிக்கன நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. படுக்கை வசதியுடன்கூடிய பேருந்துகளை இயக்கவும் முடிவுசெய்துள்ளோம். எலெக்ட்ரிக் மாதிரிப் பேருந்து சோதனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, டாடா மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்களிடம் மாதிரிப் பேருந்துகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் சென்னையில் இந்தச் சோதனை நடைபெறும்' என்றார்.