Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்ரம்ப்பின் அதிரடி முடிவும்...நரேந்திர மோடியின் மெளனமும்! #ParisAgreement

ட்ரம்ப்

திவேகமாக மோசமடைந்துவரும் புவியின் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக உலகின் 195 நாடுகள் இணைந்து உருவாக்கிய பாரீஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டு மக்களுடனும், சர்வதேச நாடுகளுடனும் மோதல் போக்கையே கையாண்டுவருகிறார். குறிப்பாக அறிவியல்ரீதியாக நடைமுறைப்படுத்த இயலாததாகக் கூறப்படும் அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லைச்சுவர் விவகாரம், முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீதான பயணத்தடை, ஒபாமாகேர் என்னும் சுகாதாரக் காப்பீட்டுத் திட்ட ஒழிப்பு, ஊடகங்கள் மீதான பாகுபாடு மற்றும் வெறுப்புணர்வு, முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தல் போன்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே எடுத்துவருகிறார். மேற்கண்ட சறுக்கல்களைவிட டொனால்ட் ட்ரம்பின் மோசமான கொள்கையாகப் பார்க்கப்படுவது, காலநிலை மாற்றம் குறித்த அவரின் கருத்துகளே ஆகும். ஆம், “காலநிலை மாற்றமென்பது அமெரிக்காவின் உற்பத்தியைக் குறைக்கும்பொருட்டு சீனாவால், சீனர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று” என்பதே காலநிலை மாற்றம் மீதான டொனால்ட் ட்ரம்பின் புரிதலாகும்.

இந்நிலையில் கடந்த வாரம் இத்தாலியின் சிசிலியில் நடைபெற்ற G-7 நாடுகள் கூட்டத்தின்போது 2015-ம் ஆண்டு பாரீஸ் காலநிலை உடன்படிக்கை குறித்த முடிவை இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று வெள்ளைமாளிகையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின்போது பேசிய டொனால்ட் ட்ரம்ப், “அமெரிக்கர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், மூடப்பட்ட தொழிற்சாலைகளையும், வேலைவாய்ப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது” என்று திடுக்கிடும் முடிவை அறிவித்துள்ளார்.

இந்தியாவைக் குற்றஞ்சாட்டிய ட்ரம்ப்!:

மோடி

நேற்று நடைபெற்ற பாரீஸ் காலநிலை உடன்படிக்கை மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்த கூட்டத்தில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவைப் பல இடங்களில் குற்றஞ்சாட்டினார். குறிப்பாக “இந்தியா ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் கணக்கான நிதியை வளர்ந்த நாடுகளிடமிருந்து பெற்றுவருவதாகவும், மேலும் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையின் காரணமாக அமெரிக்கா புதிய அனல்மின் நிலையங்களைத் திறப்பது தடுக்கப்படுவதாகவும், ஆனால் அதேசமயம் 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது அனல்மின் நிலையங்களை இருமடங்காக்க உள்ளதாகவும்” என நேரடியாகவே தாக்கினார். ஆனால் இதற்கு இப்போது வரை எந்த பதிலும் அளிக்காமல் மெளனமாக இருக்கிறார் மோடி!

பாரீஸ் காலநிலை உடன்படிக்கை கூறுவதென்ன?

பாரீஸ் ஒப்பந்தம்நமது பூமியினுடைய மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆனால், அது மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாக வெப்பநிலை அதிகரித்தல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் நீர்மட்டம் உயருதல், பேய் - மழை, கடும் வறட்சி, நோய்கள் போன்றவை எண்ணிடலங்காத வகையில் அதிகரித்து நம்மை அச்சுறுத்தி வருகின்றன. மேற்கண்ட பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை பணித்திட்டப் பேரவையானது (United Nations Framework Convention on Climate Change – UNFCCC) கடந்த 1992-ம் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து 23 ஆண்டுகள் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 2015 டிசம்பரில் பாரீஸில் நடந்த காலநிலை மாநாட்டில் (COP21) வரலாற்றுச் சிறப்புமிக்க “பாரீஸ் உடன்படிக்கை”யானது, உலகின் 195 நாடுகளினால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த உடன்படிக்கையின்படி, பூமியின் மேற்பரப்பின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸைத் (முடிந்தால் 15.5 டிகிரி செல்சியஸ்) தாண்டவிடாமல் தடுக்கும் வகையில், அதற்கு முக்கியக் காரணமான பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் அளவைக் குறைக்க உலக நாடுகள் முடிவு செய்திருந்தன. குறிப்பாகப் பசுமை இல்ல வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் அமெரிக்கா போன்ற நாடுகளானது, இந்தியா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளுக்குத் தேவையான நிதியுதவியை அளிக்கவும் இது வழிவகை செய்கிறது. இந்நிலையில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடரும்பட்சத்தில், வரும் 2030 - 2050-க்கு இடைப்பட்ட ஒவ்வோர் ஆண்டும் 2,50,000 மக்கள் இதன் காரணமாக உயிரிழப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

ட்ரம்பின் முடிவுக்குக் கண்டனம் தெரிவித்த உலகத் தலைவர்கள்:

பிரான்ஸின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள இம்மானுவேல் மக்ரோன், ட்ரம்பின் இந்த அறிவிப்பு குறித்து கூறும்போது, ''பாரீஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவு தவறானதாகும். அறிவியலாளர்கள், பொறியாளர்கள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்டு இந்த அறிவிப்பால் ஏமாற்றமடைந்ததாக நினைப்பவர்கள் பிரான்ஸை அவர்களின் இரண்டாம் வீடாக எண்ணி இங்குவந்து, எங்களோடு இணைந்து பணியாற்றலாம்'' என்று தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டிம் குக், “இந்த முடிவு, நமது பூமிக்குத் தவறானதாகும். காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஆப்பிள் நிறுவனம் எந்நாளும் பின்வாங்காது'' என்று தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க், “பாரீஸ் உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் இந்த முடிவு நமது சுற்றுச்சூழலையும், பொருளாதாரத்தையும், நமது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும். ஃபேஸ்புக் அமைக்கும் தரவு மையங்கள் 100 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக்கொண்டு அமைக்கப்படும். மேலும், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் முயற்சியை, இன்னும் காலதாமதம் ஆவதற்கு முன், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

முரண்பாடாக உள்ள இந்தியாவின் காலநிலை குறித்த கொள்கை:

பாரீஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதிலும், குறிப்பாக ''பாரீஸ் காலநிலை உடன்படிக்கையால் அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றம் பாதிக்கப்படும் நிலையில், வளர்ந்த நாடுகளிடம் இருந்து பில்லியன் கணக்கான நிதியுதவியைப் பெறும் இந்தியா, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் அனல்மின் நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தியை 2020-ம் ஆண்டுக்குள் இருமடங்காக்கும் என்று அறிவித்துள்ளது எவ்வகையில் நியாயமாகும்'' என்று ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைநோக்கி முன்னேறிவரும் சூழ்நிலையில் சுற்றுச்சூழலுக்கு அதிகபட்ச தீங்கை விளைவிக்கும் அனல்மின் நிலையங்களைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டும் இந்தியா, அதே சமயத்தில் பாரீஸ் காலநிலை உடன்படிக்கையில் அதன் முடிவுக்கு உட்பட்டு கையெழுத்திட்டிருப்பது முரண்பாடாக உள்ளது. மேலும், இதுவரை பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத அணுமின் நிலையங்களை அமைப்பதிலும் இந்தியா தொடர்ந்து அதீத ஆர்வம் காட்டிவருகிறது. 

- ஜெ. சாய்ராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement