பதவியேற்று 64 ஆண்டுகள்... அதிர்ஷ்டவசமாக பிரிட்டன் ராணி ஆன இரண்டாம் எலிசபெத்!

லகையே ஆண்ட நாடு பிரிட்டன். அந்த நாட்டின் ராணி என்றால் சும்மாவா? கடந்த 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி பிரிட்டன் அரியணையில் ஏறியவர் ராணி இரண்டாம் எலிசபெத். இவர் பதவியேற்று இன்றுடன் 64 ஆண்டுகள் ஆகின்றன. பிரிட்டன் ராணியைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைப் பார்ப்போம். 

ராணி எலிசபெத்

உலகில் ஒரு நாட்டை நீண்டகாலம் ஆளும் பெருமை, ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உண்டு. மன்னர் ஆறாம் ஜார்ஜின் மறைவையடுத்து, 1953-ம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் பதவிக்கு வந்தார். அதே ஆண்டில், ராணியின் பாட்டியான ராணி மேரி மரணம் அடைந்தார். `தன் மரணம், ராணி இரண்டாம் எலிசபெத்தின் முடிசூட்டு விழாவைப் பாதிக்கக் கூடாது; அது திட்டமிட்டப்படி நிகழவேண்டும்' என ராணி மேரி உயில் எழுதிவைத்திருந்தார்.

1952-ம் ஆண்டு பிரிட்டன் ராணியாக அறிவிக்கப்பட்டார் எலிசபெத். 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி பிரிட்டன் ராணியாக முடிசூட்டிக்கொண்டார். பிரிட்டன் வரலாற்றிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் முடிசூட்டு விழா ராணி எலிசபெத்துடையதுதான். முதலாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு `இரண்டாம் எலிசபெத்' என இவர் அழைக்கப்பட்டார்.

ஐந்தாம் ஜார்ஜின் மகன் இளவரசர் ஆல்பர்ட் - எலிசபெத் பௌவ்ஸ் நியோன் தம்பதிக்கு, 1921-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி பிறந்தார் எலிசபெத். இவரின் இயற்பெயர், எலிசபெத் அலெக்ஸாண்ட்ரியா மேரி. குழந்தைப் பருவத்தில் இவரின் செல்லப் பெயர்  `லில்லிபெட்'. இவரும் அவரது தங்கை இளவரசி மார்க்கரெட்டும் அரண்மனையிலேயே கல்வி கற்றனர். தங்கைமீது ராணிக்கு அதிக பாசம். மார்க்கரெட் வசிக்கும் கென்னிங்டன் அரண்மனையிலிருந்து பக்கிங்ஹாம் அரண்மனையில் வசிக்கும் எலிசபெத்திடம் தொலைபேசியில் பேசுவதற்கு அப்போதே வசதி உண்டு. தங்கையிடம் தினமும் ஒரு வார்த்தையாவது பேசிவிடுவார்.

வளர்ப்புப் பிராணிகள் மீதும் அதிக ப்ரியம் உண்டு. தந்தை ஆறாம் ஜார்ஜ், 1933-ம் ஆண்டு செல்ல நாய் ஒன்றை வாங்கிக்கொடுத்தார். அதற்கு `டூக்கி' எனப் பெயரிட்டு வளர்த்தார். சிறுவயதில் தன் செல்ல நாய்களுடன் லண்டன் வீதிகளில் நடப்பது, இரண்டாம் எலிசபெத் வழக்கம். இவர் தன் 10-வது வயதிலேயே குதிரையேற்றம் கற்றுக்கொண்டவர். 

எலிசபெத்தின் தந்தை ஆறாம் ஜார்ஜ் மகுடம் சூட்டிக்கொண்டதே ஒரு விபத்து போன்றதுதான். 1936-ம் ஆண்டு எலிசபெத்தின் தாத்தா மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மரணம் அடைந்தார். எட்டாம் எட்வர்டுக்குத்தான் பிரிட்டனை ஆளும் உரிமை இருந்தது. அவரோ... அமெரிக்காவைச் சேர்ந்த விவகாரத்துப்பெற்ற பெண் வால்லிஸ் சிம்ப்சன் மீது மையல்கொண்டிருந்தார். `காதலா... பதவியா?' என்ற கேள்வி எட்டாம் எட்வர்டு முன்னால் நின்றது. மனம் சொன்னபடி, காதலுக்காக அரச வாழ்வைத் துறந்தார். இதையடுத்தே ஆறாம் ஜார்ஜான ஆல்பர்ட், பிரிட்டன் அரசர் ஆனார். அந்த வழியில் எலிசபெத்தும் ராணி ஆனார். 

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்அறுபதாவது திருமண நாளை ஜோடியாகக் கொண்டாடிய ஒரே பிரிட்டன் ராணி இவர்தான். இளவரசர் பிலிப் மவுன்ட்பேட்டனை, 1947-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். ராணிக்கு, இளவரசர் பிலிப்பை 13 வயதிலிருந்தே தெரியும். இருவருக்குமிடையேயான இனம் புரியாத நட்பு, திருமணத்தில் முடிந்தது. எனினும் கணவரின் பெயரை, தன் பெயருடன் ராணி எலிசபெத் இணைத்துக்கொள்ளவில்லை. 

1948-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி, தற்போதைய பட்டத்து இளவரசரான சார்லஸ் பிறந்தார். அடுத்து, ஆனி பிறந்தார். 1952-ம் ஆண்டிலிருந்து இதுவரை 4,04,500 விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட பெருமைகள்:

இந்திய கடற்படைக் கப்பல்கள் `ஐ.என்.எஸ்' (INDIAN NAVAL SHIP) என அழைக்கப்படுவதுபோல், பிரிட்டன் கடற்படைக் கப்பல்கள் ராணியைக் கௌரவப்படுத்தும் வகையில் `ஹெச்.எம்.எஸ்' (HER MAJESTY'S SHIP) என்ற பெயருடன் அழைக்கப்படுகின்றன.

பிரிட்டனில் நம்பர் பிளேட் இல்லாமலும் டிரைவிங் லைசென்ஸ் இல்லாலும் கார் ஓட்ட அதிகாரம் படைத்த ஒரே ஒருவர் ராணிதான்.

உலகில் 600-க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளுக்கு நிதியுதவி வழங்கிவருகிறார். 

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அரண்மனையில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்குவதை, ராணி பாரம்பர்யமாகக் கடைப்பிடித்துவருகிறார். 

ராணி எலிசபெத்துக்கு, உலகம் முழுக்க 23 மெழுகுச்சிலைகள் உள்ளன.  இவருக்கென தனி ஃபேஸ்புக் பக்கம் உள்ளது. ஆனால், உள்ளே எவரும் நுழைந்துவிட முடியாது. ராணியை எவரும் விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

இவர் எந்த நாட்டுக்குச் செல்லவும் பாஸ்போர்ட் தேவையில்லை. உலகிலேயே அதிக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்த உலகத் தலைவர் இவர்தான்.

ராணி எலிசபெத்தும் அவரது குடும்பமும்தான் தொலைக்காட்சி டாகுமென்ட்ரியில் நடித்த முதல் பிரிட்டன் அரசக் குடும்பம். 

நகைச்சுவை உணர்வுமிக்க ராணி, இளவரசர் சார்லஸ், இளவரசி மார்க்கரெட் போன்றோரிடம் ஜோக்குகள் சொல்லி  வாய்விட்டுச் சிரிப்பார். 

தற்போது 91 வயதான ராணி இரண்டாம் எலிசபெத், பிரிட்டன் மக்களின் நம்பிக்கையாகத் திகழ்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!