மோடி அரசின் சாதனைகளைப் பட்டியலிடுகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்! #ModiFest

பொன். ராதாகிருஷணன்

த்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை சார்பில் கள விளம்பரம் மற்றும் காட்சி இயக்குனரகம் சார்பில், சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 'மோடி ஃபெஸ்ட்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. MAKING OF DEVELOPED INDIA (MODI) என்ற தீமுடன் நடத்தப்பட்ட இவ்விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன், பி.ஜே.பி மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இல.கணேசன், கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொன். ராதாகிருஷ்ணன்இந்த நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய பொன்.ராதாகிருஷ்ணன், "பிரதமர் மோடியின் மூன்று ஆண்டு கால சாதனைகளைப் பட்டியலிட்டார். ஏழை மக்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க வகைசெய்த 'ஜன்தன் யோஜ்னா', முதியோர் ஓய்வூதியத் திட்டம், பெண் தொழில்முனைவோருக்கு நிதி வழங்கும் 'முத்ரா' வங்கித் திட்டம், இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம், இந்தியாவில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையிலான ஒலிம்பிக் பதக்கங்கள் இலக்குத் திட்டம் போன்ற பல்வேறு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அவர் தனது உரையில் விளக்கமாக எடுத்துக் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், "நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆன பின்னரும் 18,000 கிராமங்கள் மின்சாரமின்றித் தவித்து வந்தன. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்று, ஆயிரம் நாள்களில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புற வளர்ச்சிக்காக கிராம வளர்ச்சித் திட்டம், நீர்ப்பாசனத் திட்டம், சொட்டு நீர்ப் பாசனத் திட்டம் எனப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு விவசாயிகளின் நலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் அனைவரும் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா நிதியுதவியுடன், இலங்கை தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின்னர், புதிதாக சுமார் 96,000 கிலோ மீட்டர் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன" என்றார்.

தமிழிசை பேசும்போது, "பிரதமர் மோடியின் ஆட்சியில்தான், தமிழகத்தில் மெட்ரோ ரயில் செயல்பாட்டிற்கு வந்தது. எக்ஸ்பிரஸ் நடைமுறைப்படுத்தப்பட்டது. மத்திய அரசிடமிருந்து வாங்கும் மின்சாரத்திற்கு தற்போது தமிழக அரசு குறைந்த தொகையையே செலுத்துகிறது. இளைஞர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்தி இளைஞர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். 

முன்னதாக, நிகழ்ச்சியில் முத்ரா வங்கித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குக் கடன் தொகையை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், தமிழிசை சவுந்தரராஜனும் வழங்கினார்கள்.

- ம. நிவேதா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!