94 அடி ஓவியத்தில் கருணாநிதியின் வரலாறு..! நெல்லை ஓவியர் அசத்தல்! | Karunanidhi's history, done and dusted in a 94 feet painting

வெளியிடப்பட்ட நேரம்: 05:33 (03/06/2017)

கடைசி தொடர்பு:05:33 (03/06/2017)

94 அடி ஓவியத்தில் கருணாநிதியின் வரலாறு..! நெல்லை ஓவியர் அசத்தல்!

ருணாநிதியின் வைர விழாவை முன்னிட்டு, அவரின் இளமைக்காலம் முதல் இன்று வரையிலான சாதனைகளை, 94 அடி நீளம்கொண்ட ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம், கருணாநிதியின் பிறந்த நாளன்று அவரிடம் வழங்கப்பட இருக்கிறது.

கருணாநிதி

நெல்லை மாவட்டம் பத்தமடை பகுதியைச் சேர்ந்த ஓவியர், கணேசன். இவர், பாளையங்கோட்டை பெருமாள் புரத்தில் சிவராம் கலைக்கூடம் என்கிற ஓவியப் பயிற்சி மையத்தை நடத்திவருகிறார். ஓவிய ஆசிரியரான இவர், கருணாநிதியின் வைர விழாவை கெளரவிக்கும் வகையில், 94 அடி நீளத்தில் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

அதில், கருணாநிதியின் 14 வயது முதல் தற்போது வரையிலான உருவங்கள் இடம்பெற்றுள்ளன. பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, பக்தவச்சலம், எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் தொடர்பான ஓவியங்கள் அவரது தூரிகையால் வண்ணமயமாகக் காட்சியளிக்கின்றன. கலைஞர் பங்கேற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள், குறிப்பிடத் தகுந்த சாதனைகள் போன்றவையும் ஓவியங்களாக இடம்பெற்று, காண்போரைக் கவர்கின்றன.

 

கருணாநிதி

இந்த ஓவியங்களை வரைந்ததுகுறித்து கணேசனிடம் பேசியபோது, ‘‘நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. எனக்குக் கலைஞரைப் பிடிக்கும். அதனால் அவரது 94 வயதைக் குறிக்கும்வகையில் 94 அடி நீளமான ஓவியத்தை வரைய முடிவுசெய்தேன். அப்துல் கலாம்  உயிரோடு இருந்த காலத்தில், அவரின் ஓவியத்தை வரைந்து அவருக்கு அளித்தேன். அந்த ஓவியத்தைப் பார்த்து வியந்த அவர், பரிசு வழங்கி என்னைப் பாராட்டினார்.

சில வருடங்களுக்கு முன்பு, கலைஞர் மீதான மரியாதை காரணமாக அவருடைய ஓவியத்தை வரைந்தேன். பத்திரிகைகளில் வந்த அவரது பல்வேறு புகைப்படங்களை வெட்டி ஒட்டி, கலைஞரின் ஓவியத்தைப் படைத்தேன். ஆயிரம் புகைப்படங்களின் மூலம் அந்த ஓவியத்தை உருவாக்கினேன். அதைக் கலைஞரிடம் கொடுத்தபோது, அவர் அளவில்லா மகிழ்ச்சிகொண்டார். அப்போதே, கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஓவியத்தை வரைய திட்டமிட்டேன்.

அதற்காக கடந்த இரண்டு வருடங்களாக கலைஞரின் பல்வேறு வரலாற்றுப் பதிவுகள், பத்திரிகைகள் மட்டும் அல்லாமல் கலைஞர் எழுதிய `நெஞ்சுக்கு நீதி' புத்தகம் உள்ளிட்ட பல நூல்களைத் தொடர்ந்து படித்தேன். அத்துடன் கலைஞரை அறிந்தவர்கள், அவரோடு பழகியவர்கள் எனப் பலரையும் சந்தித்துப் பேசி, கலைஞர் குறித்த தகவல்களைத் திரட்டினேன். இவற்றைத் தொகுத்து இப்போது 94 அடி நீளத்துக்கு ஓவியம் வரைந்துள்ளேன். இதில், கலைஞரின் சிறு வயது நிகழ்வு, பெற்றோருடனான சுவாரஸ்ய சம்பவங்கள், நண்பர்களைக்கொண்டு நடத்திய அரசியல் கூட்டம், பெரியாரின்மீது கொண்ட பற்றால் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள்... என அனைத்தையும் பதிவு செய்துள்ளேன்.

கருணாநிதி

கல்லக்குடி போராட்டம், பாளையங்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட சம்பவம், அவரது ஆட்சிக்காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள், குறிப்பாக மகளிர் மற்றும் விவசாயிகள், குழந்தைகள் நலன் காக்கும் திட்டங்கள் பற்றிய படங்கள் என இந்த ஓவியத்தில் கலைஞரின் வாழ்க்கை வரலாறு முழுமையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை நான் வரைந்துவருவதை அறிந்த தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள், என்னை வந்து சந்தித்து, இந்த ஓவியத்தை வைர விழாவின்போது கலைஞரிடம் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்ததாக, ‘இளையராஜா ஆயிரம்’ என்ற தலைப்பில் ஓவியம் வரையும் முயற்சியில் இறங்கியுள்ளேன். தமிழ்த் திரை உலகில் வியக்கத்தக்க சாதனை படைத்துள்ள இளையராஜாவுக்குச் செய்யும் தொண்டாக நினைத்து இந்தப் பணியை மேற்கொண்டுவருகிறேன். ஆயிரம் திரைப்படங்களுக்குமேல் அவர் இசையமைத்துள்ள நிலையில், அதைக் குறிப்பிடும் வகையில் இந்த ஓவியம் தயாராகிறது. இளையராஜாவின் இளமைக்காலம் முதலாக அவர் கடந்து வந்த பாதையை நினைவுபடுத்தும் வகையில் அந்த ஓவியம் இருக்கும்’’ என்றார் மிகுந்த உற்சாகத்துடன்.

 

கருணாநிதி

கருணாநிதி ஓவியம் குறித்துப் பேசிய நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரான அப்துல் வஹாப், ‘‘கலைஞரின் வாழ்க்கையையும் சாதனைகளையும் விவரிக்கும் வகையில் ஓவியர் கணேசன் படம் வரைந்திருக்கிறார். அவரது திறமையான ஓவியத்தில், கலைஞரின் வாழ்க்கை கண்முன்னே வந்து செல்கிறது. மிகவும் தத்ரூபமாக வரையப்பட்ட இந்த ஓவியத்தை, கலைஞரின் வைர விழா நிகழ்ச்சியின்போது மு.க.ஸ்டாலினிடம் வழங்கி, கலைஞரின் பார்வைக்குக் கொண்டு செல்ல முடிவுசெய்திருக்கிறோம்.

இந்த ஓவியத்தைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தால், கலைஞரின் சரித்திரம் எளிதில் புரியும். கட்சிக்குத் தொடர்பு இல்லாதவராக இருந்தபோதிலும், தலைவர்மீதுள்ள அபிமானத்தின் காரணமாக இந்த அரிய ஓவியத்தை வரைந்த கணேசனைப் பாராட்டுகிறேன்’’ என்றார்.

கருணாநிதியின் சாதனைகளை விளக்கும் ஓவியத்தை வரைந்த ஓவியர் கணேசனுக்கு, பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

படங்கள்: எல்.ராஜேந்திரன்


டிரெண்டிங் @ விகடன்