திருக்குவளை முத்துவேலர் மகன் தமிழக முதல்வர் கருணாநிதி ஆன கதை! #3MinsRead

அண்ணாவுடன் கருணாநிதி

கருணாநிதியின் சட்டமன்ற நகைச்சுவைகள் ஆல்பத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

தி.மு.க என்றால் ‘திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி’ என்று அவருடைய தொண்டர்கள் சொல்லக்கூடும். 
தி.மு.க-வுக்கும் மு.க-வுக்குமான பந்தம் அப்படித்தான் ஆகிவிட்டது.

மு.க என சுருக்கமாகவும் செல்லமாகவும் அழைக்கப்படும் மு.கருணாநிதி, நாகப்பட்டினத்திலுள்ள திருக்குவளை கிராமத்தில் ஜூன் 3, 1924-ல் பிறந்தார். தந்தை, முத்துவேலர்; தாய், அஞ்சுகம். கருணாநிதிக்குப் பெற்றோர் இட்ட பெயர், தட்சிணாமூர்த்தி.
தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பேச்சாற்றலும் திராவிடர் கழக ஈடுபாடும் மாணவப் பருவத்திலேயே அதிகம். அதனாலேயே அவருடைய பள்ளிப் படிப்பிலும் அவருடைய கவனம் செல்லவில்லை. நீதிக்கட்சியின் தூணாகக் கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14-வது வயதில், சமூக இயக்கங்களில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது இளம் பருவத்தில், மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான அனைத்து மாணவர்களின் கழகம் என்ற அமைப்பாக உருபெற்றது.
அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபட்ட கருணாநிதி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க ‘மாணவர் அணி’ என்று அதைச் சொல்லலாம். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசைவாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும் விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அவர் துண்டுப் பிரசுரமாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித் தோழர்களான அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.

1957-ல் நடைபெற்ற தி.மு.க இந்தி எதிர்ப்பு மாநாட்டில் மத்திய அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாள் பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய கருணாநிதி இந்தி திணிப்பை எதிர்த்து, ``இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்றார்.
அதேபோல், அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவது என மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16-ம் தேதி அண்ணாவும், நவம்பர் 19-ம் தேதி கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, கண்ணதாசன்.

கருணாநிதியின் சட்டமன்ற நகைச்சுவைகள் ஆல்பத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

1957-ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டார். முதல் முறையாக தி.மு.க சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும் முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் அது வழிவகுத்தது.
1967-ல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் தி.மு.க முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும் கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர். தி.மு.க-வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க-வின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.

1969–1971 அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை, 1971-1976 இரண்டாவது முறை, 1989–1991 மூன்றாம் முறை, 1996-2001 நான்காம் முறை, 2006-2011 ஐந்தாம் முறை என முதலமைச்சர் பதவியில் இருந்தார்.

கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி ஒரு போராளியாகப் பங்கேற்றார். ரயிலின் முன்பு தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1967-ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்தபோது, கருணாநிதி சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார். அரசியல் பணிகளுக்கு இடையே திரையுலகிலும் அவருடைய செல்வாக்கு உயர்ந்திருந்தது. 

அன்றைய நாட்களில் நாடகங்களுக்கு அறிஞர் அண்ணாவின் ‘ஓர் இரவு’ என்று விளம்பரப்படுத்துவது வாடிக்கை. கலைஞர் கருணாநிதியின் ‘தூக்கு மேடை’ நாடகத்தில் எம்.ஆர்.ராதா நடித்துவந்தார். அறிஞர் அண்ணா என அழைப்பதுபோல கலைஞர் கருணாநிதியின் ‘தூக்கு மேடை’ என விளம்பரப்படுத்த ஆரம்பித்தார் எம்.ஆர்.ராதா. அதுவே கருணாநிதியின் பெயரோடு நீடித்து இருக்கும் பெயராக நிலைத்துவிட்டது.

சிவாஜி கணேசன் நடிப்பில் ஏவி.எம். நிறுவனம் தயாரித்த ‘பராசக்தி’ திரைப்படம் கலைஞரின் வசனங்களுக்காகவே திரும்பத் திரும்ப பார்க்கப்பட்டது. வசனப் புத்தகங்கள் லட்சக்கணக்கில் அச்சடிக்கப்பட்டு, இளைஞர்களால் மனப்பாடம் செய்யப்பட்டது. அதற்கு முன்னர் திரை உலகில் அப்படி ஒரு வசனப் புரட்சி நிகழ்ந்ததில்லை. பலர் சினிமாவில் கருணாநிதிபோல வசனம் எழுத வேண்டும்... கருணாநிதியின் வசனங்களை உச்சரித்துப் பழக வேண்டும் என விரும்பி சினிமாவுக்கு வந்தனர்.

இவர் வசனம் எழுதிய மனோகரா, பூம்புகார், மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற சரித்திரப் பின்னணி படங்களுக்கு அப்போது மிகுந்த வரவேற்பு இருந்தது. சரித்திரப் படங்களின் வசனங்களிலும் திராவிட இயக்கக் கருத்துக்களை சாதுர்யமாக சேர்ப்பதில் கலைஞர் வல்லவர். அது அரசியல் மட்டத்தில் அவருக்கு செல்வாக்கை உயர்த்தியது.

கருணாநிதியுடன் சிவாஜி‘‘அரசனையே எதிர்க்கத் துணிந்துவிட்டார்களா? என மன்னன் கேட்பார். ‘’ஆண்டவனையே எதிர்க்கத் துணிந்துவிட்டார்கள்’’ என நாயகன் சொல்வான். இதுதான் கலைஞரின் எழுத்து யுக்தி.. 

அண்ணாவைப் போன்ற பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஓயாத அரசியல் பணி, பத்திரிகை பணி எனப் பன்முகத் தன்மை கலைஞர் இடத்திலும் இருந்தது. அதுவே அவரை அண்ணாவுக்கு அடுத்த இடத்துக்கு அமரும் தகுதியை ஏற்படுத்தியது.

கருணாநிதி மூன்று முறை திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவியான பத்மாவதி அவர்களுக்குப் பிறந்தவர், மு.க.முத்து. கருணாநிதியின் முதல் மனைவி, திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார். கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி. மூத்த மகன் மு.க.முத்து திரையுலகில் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். ‘அணையா விளக்கு’, ‘சமையல்காரன்’ போன்ற படங்கள் அவர் நடித்தவை. மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் (2007), (2009)-2011 தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராகப் பணியாற்றியவர். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக, தி.மு.க-வின் செயல் தலைவராக இருக்கிறார். மு.க.அழகிரி மத்திய ரசாயன அமைச்சராக இருந்தவர். கனிமொழி இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக உள்ளார்.

அரசியல் பணிகளுக்கு இடையே இளைப்பாறும் இடமாக இலக்கியம் தனக்கு இருப்பதாக கலைஞர் சொல்வார். முதல்வராக இருந்த நேரங்களிலும்கூட கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கும் ஆர்வம் இவருக்கு இருந்தது. 

ஒரு கவியரங்கத்தில் கவிக்கோ அப்துல்ரகுமானை மேடைக்கு அழைத்தபோது, ‘‘வெற்றி பல பெற்று நான் விருது பெற வரும்போது, வெகுமானம் எது வேண்டும் எனக் கேட்டால்... அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’ என்றார். கவிஞர்கள் மீது அவருக்கு இருந்த மரியாதைக்குச் சான்று அது. எழுத்தாளர் ஜெயகாந்தன் தி.மு.க மீதும் கலைஞர் மீதும் கடுமையான விமர்சனங்களை வைப்பவர். காட்டமாகத் தாக்குபவர். ஆனால், ஜெயகாந்தன் மீது கருணாநிதி வைத்திருந்த மரியாதை ஒருபோதும் குறைந்ததில்லை. கண்ணதாசனைப் போல கருணாநிதியை விமர்சித்தவர் இருக்க முடியாது. ஆனால், கண்ணதாசனை அவர் எதிர்த்ததில்லை. ‘கண்ணதாசன் ஒரு குழந்தை. அவர் எடுப்பார் கைப்பிள்ளை’ என்றார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் கருணாநிதியைத் தாக்கி எழுதி வந்த நேரத்தில்தான் அவருக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு ஒதுக்கிக் கொடுத்தார். எழுத்தாளர்களிடம் பேசிக்கொண்டிருப்பது அவருக்குப் பிடித்தமானது. ஏராளமான நூல்களை இவர் தமிழின் வளர்ச்சிக்காகத் தந்துள்ளார்.

இவரின் தன் வரலாற்று நூல், ‘நெஞ்சுக்கு நீதி’ திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளிதழான முரசொலி மற்றும் குங்குமத்தில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்தமையாகும். இந்த நூல் நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.

கருணாநிதி

திரைப்படங்களுக்கு எழுதிய கதைகள், வசனங்கள் 75-ஐ நெருங்கிவிட்டன. திரைப்பணியையே முழு நேரமாக  செய்தவர்களைவிட இவருடைய சாதனை அதிகம். இவருடைய வசனத்தில் வெளியான திரைப்படங்களில், ‘பராசக்தி’, ‘மந்திரிகுமாரி’, ‘மலைக்கள்ளன்’, ‘மனோகரா’, ‘பூம்புகார்’, ‘இருவர் உள்ளம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘நீதிக்கு தண்டனை’, ‘பாசப் பறவைகள்’, ‘பாடாத தேனீக்கள்’, ‘பாலைவனப்பூக்கள்’ ஆகியவை முக்கியமானவை.

மேடை நாடகங்கள் பல எழுதியிருக்கிறார். அவற்றில் சிலப்பதிகாரம், மணிமகுடம், ஒரே ரத்தம், பழனியப்பன், தூக்கு மேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, வெள்ளிக்கிழமை, உதயசூரியன், நச்சுக் கோப்பை ஆகியவை பிரசாரத்தன்மை மிக்கவை. இதில் மணிமகுடம், தூக்கு மேடை, ஒரே ரத்தம் ஆகியவை சினிமாவாக மாறியவை.

எழுதிய நூல்களில் பல திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கு உற்சாக டானிக்காக அமைந்தன. ‘தேனலைகள்’, ‘குறளோவியம்’, ‘நெஞ்சுக்கு நீதி’, தொல்காப்பியப் பூங்கா’, சங்கத் தமிழ், ஒரே ரத்தம், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பாயும்புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், வெள்ளிக்கிழமை, இனியவை இருபது,சங்கத் தமிழ், திருக்குறள் உரை, மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று அவற்றுள் முக்கியமானவை.

எத்தனை திரைக்கதைகள், எத்தனை நாவல்கள், எத்தனை கடிதங்கள், எத்தனை மேடைப் பேச்சுகள், எத்தனைப் போராட்டங்கள், எத்தனைச் சிறைத்தண்டனைகள், எத்தனை வழக்குகள்...

‘உன் மீது அடித்த வெயில் கடல் மீது அடித்திருந்தால் பாதி கடல் பாலைவனமாகியிருக்கும்’’ எனக் கலைஞரைப் புகழ்ந்தார் வைரமுத்து.
2009 ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அகில இந்திய திரைப்பட தொழிலாளர்களின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் முதல் நாளான அன்று, அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில், அதன் தலைவர் வி.சி.குகநாதன் தலைமையில், சம்மேளனத்தின் நிர்வாகிகள் கருணாநிதிக்கு உலகக் கலைப் படைப்பாளி என்ற விருதை வழங்கினர்.

அண்ணாமலை பல்கலைக்கழகம், இவரை கெளரவித்து ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது.

தமிழ்ப் பல்கலைக்கழகம், அவரது படைப்பான `தென்பாண்டி சிங்கம்’ என்ற புத்தகத்துக்கு ‘ராஜராஜன் விருதை’ வழங்கியது. தமிழ்நாட்டு கவர்னரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேந்தரும் அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கி கௌரவித்தனர்.

தமிழ்ப் பற்று, திராவிட உணர்வு, சாதி ஏற்றத் தாழ்வின்மை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற சமூக செயல்பாடுகளை ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து முடிந்தவரைப் பின்பற்றியவர்.

அரசியல், சினிமா, எழுத்து, பேச்சு, பத்திரிகை என பல்துறையிலும் வித்தகராகத் திகழும் கலைஞர் கருணாநிதி ஒரு சகாப்தம்... ஒரு காலக்கட்டம். 
 

கருணாநிதியின் சட்டமன்ற நகைச்சுவைகள் ஆல்பத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!