லஞ்சம் கொடுக்க முயன்றதற்கே வழக்கா? : தினகரன் கைதுக்கு பொங்கும் நாஞ்சில் சம்பத்

இரட்டை இலைச் சின்னம் பெற, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட வழக்கில், நேற்று ஜாமீன் பெற்றார் டி.டி.வி.தினகரன். இந்த நிலையில், டெல்லி திகார் சிறையிலிருந்து தினகரனும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் விடுதலையாகினர். 


இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, டி.டி.வி தினகரன் வெற்றி முழக்கக் கூட்டங்கள் நடந்தன. சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் நடந்த நாஞ்சில் சம்பத் கூட்டத்தில், குண்டுகல்யாணம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய குண்டு கல்யாணம், "தினகரன் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸிடம் நீதிபதி கேட்கிறார், 'இவர்கள் பேசிய உரையாடலைக் கொடுங்கள் என்று'. அப்போது டெல்லி போலீஸார், 'எங்களிடம் உரையாடல் இல்லை' என்று கூறுகிறார்கள். இந்த நாட்டையே காப்பாற்றக்கூடிய, சின்னம்மா வெகு விரைவில் வெளியே வருவார்கள்

டெல்லியை மிரளவைத்தவர் எங்கள் அண்ணன் டி.டி.வி தினகரன். மத்திய அரசுக்கு தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட்கள் மற்றும் ஓ.பி.எஸ் பற்றிக் கவலையில்லை. அவர்கள், அண்ணன் டி.டி.வி தினகரனைப் பார்த்து அஞ்சி நடுங்குகிறார்கள். டி.டி.வி தினகரன் மீது எத்தனை குற்றங்கள் சுமத்தினாலும் , அதில் நீங்கள் தோல்விதான் அடைவீர்கள்" என்று பேசினார்.

நாஞ்சில் சம்பத்


  "தமிழகத்துக்கு இப்போது ஒரு தலைவன் தேவைப்படுகிறான். டெல்லி லாபியை ஒழிக்க, தமிழகத்தில் ஒருத்தன் இருக்கிறான் என்றால், அது டி.டி.வி தினகரன் மட்டும்தான். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது வழக்கு. லஞ்சம் கொடுக்க முயன்றதற்கே வழக்கா? நாங்கள் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும்? எங்களுக்குக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை,

இரட்டை இலைச் சின்னத்தை முடக்கினால், தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். தாமரையை மறைக்க தொப்பி உள்ளது. ஆர்.கே நகர் தொகுதி அசைக்கமுடியாத அ.தி.மு.க-வின் கோட்டை. டி.டி.வி தினகரனால் மட்டுமே இந்தக் கட்சியைக் காப்பாற்ற முடியும். ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கழகத்தில், துணைப் பொதுச் செயலாளர் பதவியை விட்டுச்செல்கிறேன் என்று சொன்னவர், டி.டி.வி தினகரன். அப்போதே அவர் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்" என்று பேசினார், நாஞ்சில் சம்பத். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!