ஓ.என்.ஜி.சி-க்கு எதிரான போராட்டம்: பேரா.ஜெயராமன் உட்பட 11 பேர் அதிரடி கைது!

jayaraman

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் ஜெயராமன் உட்பட 11 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம், கதிராமங்கலம் எனும் கிராமத்தின் விளைநிலங்களில், ஓ.என்.ஜி.சி தனது எண்ணெய்க் குழாய்களைப் பதித்துள்ளது. இந்தக் குழாய்களால், விளைநிலங்கள் தற்போது கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன. இது, அந்தக் கிராம மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குரிய நிவாரணத்தை ஓ.என்.ஜி.சி நிர்வாகம் வழங்க வேண்டும் என கதிராமங்கலம் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். ஆனால் ஓ.என்.ஜி.சி நிர்வாகமோ, இழுத்தடிப்பு செய்துவந்தது. 

jayaraman

இந்நிலையில், கதிராமங்கலம் பகுதிகளில் மேலும் எண்ணெய்க் குழாய்களைப் பதிக்க ஆயத்தமானது, ஓ.என்.ஜி.சி. இது, கதிராமங்கலம் கிராம மக்களிடையே கடும் கோபத்தை உண்டுபண்ணி, அவர்களைப் போராட்டத்தை நோக்கித் தள்ளியது. அந்தக் கிராம மக்களுடன், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடிய, 'மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு' கைகோர்த்தது. அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா.ஜெயராமன் தலைமையில், இன்று காலை கதிராமங்கலத்தில் போராட்டம் தொடங்கியது. உடனடியாக அந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் குதித்த கிராம மக்கள், பேரா.ஜெயராமன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். வழக்கம்போல மாலை நேரத்துக்கு மேல் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,பேரா.ஜெயராமன் உட்பட 11 பேர் தற்போது வரை விடுவிக்கப்படவில்லை. 

அவர்கள், கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காக்கவைக்கப்பட்டுள்ளனர். 15 நாள்கள் வரை ரிமாண்ட் செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்திவரும் பேரா.ஜெயராமன் உட்பட 11 பேரின் கைதுக்குப் பின்னால், அரசியல் காய்நகர்த்தல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!