கருணாநிதி பிறந்தநாள் : களைகட்டும் கோபாலபுரம்..!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா மற்றும் 94-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் வைரவிழா நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.


பிறந்தநாள் மற்றும் வைரவிழாவை முன்னிட்டு கருணாநிதிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதற்கிடையே, உடல்நலக்குறைவு காரணமாக, வைரவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.


அதேபோல, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் வைரவிழாவில் கலந்துகொள்ள இயலவில்லை எனக் கூறியுள்ளார். ஆனால், இருவரும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒருபக்கம், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவரும் நிலையில், மறுபக்கம் தி.மு.க தொண்டர்கள் கருணாநிதியின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடிவருகின்றனர்.


 இன்று காலை 6 மணி முதலே, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால், நீண்ட நாள்களுக்குப் பிறகு கோபாலபுரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!