Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மைனர் பெண்களை திருப்பதியில் திருமணம் செய்த வாலிபர்கள்!

சென்னையைச் சேர்ந்த மைனர் பெண்கள், காதலர்களுடன் வீட்டைவிட்டு வெளியேறி, திருப்பதியில் திருமணம் செய்துகொண்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சென்னையைச் சேர்ந்தவர், லட்சுமி. கணவரை இழந்த இவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர், பிளஸ் 2 முடித்துள்ளார். இன்னொருவர், பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர்கள் இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு லட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், பிளஸ் 2 தேர்வில் மூத்த மகள் 650-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இதை லட்சுமி கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மூத்த மகள், கடந்த சில தினங்களாக யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

காதலியின் சோகத்துக்கு காதலன் ஆறுதல் சொல்லியுள்ளார். அப்போது, வீட்டை விட்டு வெளியேற அந்தக் காதல் ஜோடி முடிவுசெய்தது. இந்தத் தகவல் தங்கைக்கும் தெரிவிக்கப்பட்டது. அவரும், லட்சுமி மீது கோபத்தில் இருந்ததால், அவரும் தன்னுடைய காதலுடன் வீட்டைவிட்டுப் புறப்படத் திட்டமிட்டார். அதன்படி, இரண்டு காதல் ஜோடிகளும் வீட்டை விட்டு கடந்த சில தினங்களுக்கு முன் புறப்பட்டனர். பல இடங்களுக்குச் சென்ற காதல் ஜோடி, இறுதியில் திருப்பதிக்குச் சென்று திருமணமும் செய்ததாகக் கூறப்படுகிறது. 
 இரண்டு மகளையும் காணாமல் பரிதவித்த லட்சுமி, சூளைமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மதியழகன், மாயமான மைனர் பெண்கள் குறித்து விசாரணை நடத்தினார். இந்தச் சூழ்நிலையில் இரண்டு மைனர் பெண்களையும் திருநங்கைகள் கடத்தியதாகத் தகவல் பரவியது. இதனால், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணையில் திருநங்கைகள் கடத்தவில்லை என்ற தகவல் கிடைத்த பிறகே, போலீஸாரும் லட்சுமியும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

இந்தச் சூழ்நிலையில், லட்சமிக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய அவருடைய உறவினர் ஒருவர், உன்னுடைய இரண்டு மகள்களும் திருப்பதியில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தகவலை போலீஸாரிடம் லட்சுமி தெரிவித்ததும் போலீஸார் நேற்று திருப்பதிக்குச் சென்றனர். இரண்டு மைனர் பெண்களும் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற போலீஸார், அவர்கள் இருவரை மீட்டு சென்னைக்கு அழைத்துவந்தனர். போலீஸார் வருவதைத் தெரிந்த இரண்டு மைனர் பெண்களின் காதலர்கள், அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது. 

 இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மதியழகனிடம் கேட்டபோது, "சூளைமேட்டைச் சேர்ந்த அக்காள், தங்கையான இரண்டு மைனர் பெண்கள், அவர்களுடைய அம்மா திட்டியதால் வீட்டை விட்டு திருப்பதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட  புகாரின்பேரில் அவர்கள் இருவரையும் மீட்டு கொண்டுவந்துள்ளோம். அதற்குள், திருநங்கைகள் கடத்தியதாகவும் காதலர்களுடன் ஓடியதாகவும் வதந்திகள் பரவிவிட்டன"என்றார். 

 போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "அக்காள், தங்கை இருவரும் அந்தப் பகுதியில் உள்ள இரண்டு பேரை காதலித்துள்ளது உண்மைதான். அம்மா திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி திருப்பதி சென்றுவிட்டனர். மகள்களைக் காணவில்லை என்று அந்த மைனர் பெண்களின் அம்மா புகார் கொடுத்ததும் விசாரணை நடத்தினோம். இரண்டு பெண்களும் வெளியூர் செல்ல திருநங்கை ஒருவர் உதவி செய்துள்ளார். அவர்தான் இரண்டு பெண்களையும் கடத்திவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பிறகு இரண்டு பெண்களையும் அழைத்துச்சென்ற அவர்களது காதலர்களின் செல்போன் நம்பர்களை ஆய்வுசெய்தபோது, திருப்பதியில் சிக்னல் காட்டியது. இந்தச் சமயத்தில்தான் லட்சுமியின் உறவினர் வீட்டில் அவர்கள் இருந்த தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று மைனர் பெண்களை அழைத்துவந்துள்ளோம். அவர்களின் எதிர்காலம் கருதி மாயமானதாக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த இரண்டு பெண்களுக்கும் அறிவுரையும், கவுன்சலிங்கும் கொடுத்துள்ளோம். மைனர் பெண்களைக் கடத்தியதாக அந்த இரண்டு வாலிபர்கள் மீது வழக்குப் பதிவுசெய்யலாம். ஆனால் அது, அந்த இரண்டு பெண்களுக்கும் சிக்கல் ஏற்படும். எனவே, அந்த வாலிபர்கள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை"என்றனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement