Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பி அடிப்பாரா தினகரன்..?! சிந்தனையில் பன்னீர்செல்வம் அணி

தினகரன்

“நான் கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்” என்று ஏப்ரல் 19-ம் தேதி கூலாகப் பேட்டிக்கொடுத்தார் தினகரன். ஆனால், திகார் சிறையிலிருந்து திரும்பியவுடன் “நான் கட்சியில் மீண்டும் தொடருவேன். என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு” உல்டா அடித்திருக்கிறார் தினகரன்.

திருப்பி அடிக்கப் போகிறார் தினகரன் என்று தினகரன் ஆதரவாளர்கள் திகில் காட்டுகின்றார்கள். அ.தி.மு.க-வுக்குள் மீண்டும் தினகரன் ரிட்டன் பேக் பின்னணி குறித்து தினகரனுக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். “சசிகலா குடும்பத்தை தவிர்த்த அ.தி.மு.க இயங்குவது என்பது இயலாத காரியம் என்பதன் நீட்சிதான் தினகரன் திரும்பியதற்குக் காரணம். சசிகலாவுக்கு எதிராக ஒ.பி.எஸ். போர்க்கொடி துாக்கியபோது, கட்சியிலிருந்த முக்கிய நிர்வாகிகளே கொஞ்சம் ஆட்டம் கண்டுதான் போனார்கள். சசிகலாவும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தபோதுதான், அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு கொடுத்து சசிகலாவின் கரங்களை வலுப்படுத்தியதில் பெரும்பங்கு தினகரனுக்கு உண்டு. கூவத்துாரில் இவரின் செயல்பாடுகளை அங்கிருந்து பார்த்தவர்களுக்குத் தெரியும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் தனித்தனியாகப் பேசியே மனதைக் கரைத்தவர், இவரின் அணுமுறை பார்த்த சசிகலா, சிறைக்குப் போகும் முன் இவர் கையில் கட்சியை ஒப்படைத்துச் சென்றதன் காரணமும் அதுதான். 

அ.தி.மு.க-வின் துணை பொதுச்செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டதே ஓ.பி.எஸ் அணிக்கு வீழ்ச்சியாகப் பார்க்கப்பட்டது. சசிகலா குடும்பத்திலே பன்னீர்செல்வம் பணிந்து போகும் நபராக தினகரன் மட்டுமே இருந்தார். மேலும் அ.தி.மு.க-வின் பெரும்பாலான நிர்வாகிகள் தினகரனுக்கு நன்கு அறிமுகமானவர்கள்.துணை பொதுச்செயலாளராக தினகரனின் அணுகுமுறையும் ஆக்கப்பூர்வமாகத்தான் இருந்தது. அ.தி.மு.க-வை தனது பிடிக்குள் கொண்டுவரும் யுக்திகளை அவர் கொஞ்சம், கொஞ்சமாகக் கையாளுவதை டெல்லியில் இருப்பவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதனால்தான் அவரை நோக்கி அஸ்திரங்களை வீச ஆரம்பித்தார்கள்.ஆட்சிக்கு நெருக்கடி, அமைச்சர்களுக்குக் கிடுக்கிப்பிடி என வரிசையாக டெல்லியிலிருந்து கிளம்பியது அஸ்திரங்கள். பன்னீர் அணியை பவருக்கு கொண்டுவர நடைபெற்ற திரைமறைவு விளையாட்டில் தினகரன் கொஞ்சம் ஆடித்தான் போனார்.

   அமைச்சர்களுக்கு ஒருபுறம் அழுத்தம் வர தினகரனுக்கு எதிராகத்தான்  நாங்கள் இருக்கிறோம் என்று வெளிப்படையாகவே அமைச்சர்கள் சொன்னார்கள். அதற்கு இசைவு சொல்லும்விதமாக தினகரனும் “நான் கட்சியை விட்டு ஒதுங்கிவிட்டேன்”  என்று சொல்லி பிரச்னைக்குத் தற்காலிக தீர்வுக்கு வழிவகுத்தார். ஆனால், திரைமறைவில் மன்னார்குடி குடும்பத்தின் கண் அசைவிலே ஆட்சியின் அனைத்து செயல்களும் நடந்துவந்தன. ஓ.பி.எஸ், அணியுடன் இணைந்து செயல்படுங்கள் என்று டெல்லி உத்தரவை கடைபிடிக்க முடியாமல் போனதற்கு இந்த திரைமறைவு கூட்டணிதான் காரணியாக அமைந்தது. தினகரனை சென்னையிலிருந்து அப்புறப்படுத்தினால், அணிகள் இணைப்புக்கு வாய்ப்புண்டு என்று நினைத்து, அவர் மீது வழக்கு பாய்ச்சி திகார் ஜெயிலில் அவரை முடக்கினர். ஆனாலும் பன்னீர் அணியின் கை ஓங்குவதற்கு வழியில்லாமல் போனதால், டெல்லி லாபி வேறு திட்டத்தைக் கையில் எடுத்தது.

தினகரன்

பன்னீர் இடத்தி்ல் எடப்பாடியை வைக்க முடிவு செய்தார்கள். அதற்கு உடனடியாக இசைவும் வந்தது. டெல்லிக்குப் பயணமான எடப்பாடி பழனிச்சாமி, மோடியிடம் சரணாகதி அடைந்தார். “உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறோம்” என்று உத்தரவாதம் அளித்தார். சசிகலா தரப்பின் ஆலோசனைபடியே இந்த பேச்சுவார்ததையில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார். அதன்பிறகுதான், சசிகலா குடும்பத்தின் மீதான மத்திய அரசின் பார்வை மாறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தினகரன் பெயிலுக்கு மனு செய்தார். காரணம் “மத்திய அரசு இனி தம்மை தடுக்காது, என்ற தைரியம்”. அவர் நினைத்தது போலவே நடக்கவும் செய்தது. ஜனாதிபதி தேர்தலில் எந்த வித நிபந்தனையும் இன்றி பி.ஜே.பி-யை ஆதரிக்க அ.தி.மு.க தயாரானது. அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார் நடராஜன். ஒரே வாரத்தில் நிலைமை மாறியது.“ பவருக்கு உங்கள் குடும்பம் வராமல் இருந்தால் போதும்” என்று டெல்லி நிபந்தனைக்கு நடராஜன் செவிசாய்த்தார். மத்திய அரசு இனி நம் விஷயத்தில் மல்லுக்கட்டாது என்ற தகவல், தினகரனுக்குச் சொல்லப்பட்டதும் உற்சாகமாகிவிட்டார். 

 எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய எம்.எல்.ஏ-க்களுக்கு தினகரன் தரப்பிலிருந்தே அழுத்தம் வந்தது. “ அமைதியாக இருங்கள், நான் வந்து பார்த்துக்கொள்கிறேன்” என்றதும் அவர்களும் அமைதியானார்கள். அடுத்தகட்டமாக பன்னீர் அணியில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் துாது சென்றது. மூன்று எம்.எல்.ஏ-க்கள் அணிமாற சம்மதம் தெரிவித்தனர்.சிறையிலிருந்து வெளியே வந்த தினகரனைப் பத்து எம்.எல்.ஏ-க்கள் ஐந்து எம்.பி-க்கள் டெல்லியிலே சந்திப்பை நடத்தி, தமிழகத்தின் நிலையை விளக்கி சொல்லியுள்ளார்கள். அப்போது அவர்களிடம், “இணைப்பு என்னால் தடைபடக் கூடாது என்றுதான் நான் ஒதுங்கி நின்றேன். இதே நிலை நீடித்தால் கட்சி காணாமல் போய்விடும். அதனால் நான் கட்சி பணியில் தீவிரம் காட்டப்போகிறேன்.சென்னை வந்த பிறகு அ.தி.மு.க-வில் இனி ஒரு அணி மட்டும்தான் இருக்கும்” என்று காட்டமாகச் சொல்ல,அங்கிருந்தவர்கள் தினகரனின் இந்தப் பேச்சைப் பார்த்து மிரண்டுள்ளார்கள்.தனக்கு எதிராக அமைச்சர்கள் பேசியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை தினகரன். ஏனென்றால், முதல்வர் பழனிசாமி இப்போது சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில்தான் இருந்துவருகிறார். அதனால்தான் தினகரன் கூறிய கருத்திற்கு செங்கோட்டையன் உட்பட அமைச்சர்கள் முதல்வர் பதில் சொல்லுவார் என்று ஒதுங்கி கொண்டார்கள் என்கிறார். ஜனாதிபதி தேர்தல் வரை பொறுமையாக இருப்போம்,  அதன்பிறகு வேகமெடுக்கலாம் என்று தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளது.

சசிகலா குடும்ப உறவுகளும் தினகரன் கட்டுபாட்டில் கட்சியைக் கொண்டுவருவது தற்போது சிறந்தது என்று கருதுகின்றார்கள். இந்த திட்டத்தின் செயல்வடிவம்தான், தினகரன் வெளியேவந்ததும் கட்சிப் பணிகளில் மீண்டும் ஈடுபடப் போகின்றேன் என்று தைரியமாக சொன்னதன் காரணம்” என்கிறார்கள்.

பன்னீர் அணிக்கு இனி மவுசு இருக்காது என்பது தினகரன் ஆதரவாளர்களின் ஒட்டுமொத்தக் குரலாக இருக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement