Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியின் மூன்றாண்டு கால ஆட்சி பெண்களுக்கு என்ன செய்தது? - ஓர் அலசல்!

நாட்டின் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், சிறுபான்மையினருக்கான முக்கியத்துவம் உட்பட பல்வேறு வாக்குறுதிகளோடு, 'வலுவான ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதே என் லட்சியம்' என்ற முழக்கத்தை முன்வைத்து பிரதமராக முடிசூடிக்கொண்டார் நரேந்திர மோடி. மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டில் பெண்களுக்கான முக்கியத்துவம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சொல்கிறார்கள், அரசியல் களத்தில் உள்ள இரண்டு பெண் ஆளுமைகள்... 

மோடி

வானதி சீனிவாசன் (பாஜக) 

வானதி ''பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, மூன்றாண்டு ஆட்சியைச் சிறப்பாக நிறைவு செய்துள்ளது. ஆரம்பத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதம் சார்ந்து இயங்கும், தங்களுடைய கொள்கைகளை மக்களிடம் திணிக்கும் என்று பல விமர்சனங்களை முன்வைத்தார்கள். ஆனால், இந்த மூன்று வருடங்களில் மதத்தின் அடிப்படையில் எந்தவித கருத்துகளையும் திணிக்காமல் ஒவ்வொரு நாளும் நாட்டின் குடிமக்களுக்காகவே பாஜக உழைத்துக்கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார் நரேந்திர மோடி.

அது மட்டுமல்ல, ஒரு நாடு வளம்பெற வேண்டுமானால் அங்குள்ள பெண்கள் சுதந்திரமாகவும் கல்வி அறிவோடும் இருக்க வேண்டும் என்பதுதான் பிரதமரின் எண்ணம். அதற்காக, பெண்களுக்கான பல சிறப்புத் திட்டங்களை கொண்டுவந்துள்ளார். அவருடைய சிந்தனைகளெல்லாம் மக்கள் மீதும் நாட்டின் வளர்ச்சியின்மீதும் இருக்கிறது. மோடியின் ஆட்சியில் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த மக்களும் ஒன்றே. ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயர வேண்டும் என்பதே அவரின் இலக்கு. அதனால்தான் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சமையல் காஸ் இணைப்பு, தொழில் முனைவோருக்கான முத்ரா வங்கித் திட்டம், பெண் குழந்தைகளுக்கான தன்ஜன் யோஜனா போன்ற பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இதுவரையிலான சுதந்திர இந்தியாவில் அதிகளவில் பெண் ஆளுநர்கள் இருப்பது இந்த ஆட்சியில்தான். 

சிறுபான்மையினரை ஒதுக்கிவிட்டு எந்த ஒரு அரசுத் திட்டத்தையும் செயல்படுத்திவிட முடியாது. கண் துடைப்புக்காக இல்லாமல், அவர்களுக்கான பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்ததோடு, பெண்களின் சுதந்திரத்துக்காக பல நெருக்கடியான சவால்களை எதிர்கொண்டுள்ளார். அதை முஸ்லீம் பெண்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான், உத்திரபிரதேச தேர்தலில் மிகப்பெரிய அளவில் முஸ்லீம் பெண்களின் வாக்குகள் பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. ஆக, பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கான அரசாகவும் நாட்டின் பாதுகாப்போடு கூடிய வளர்ச்சியை நோக்கிய ஆட்சியைக் கொடுக்கும் எனவும் மக்கள் நம்புகிறார்கள். வரும் காலங்களில் மீதமிருக்கும் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் வாக்குகளும் பாஜகவின் பக்கம் திரும்பும் என்பது உறுதி.'' 

வழக்கறிஞர் அருள்மொழி:

அருள்மொழி ''மோடி ஆட்சியின் கடந்த மூன்றாண்டுகளில் நாட்டின் குடிமக்கள் அமைதியாக வாழ்வதற்கே வழியில்லை. மாற்றுக் கருத்தை வெளிப்படுத்துபவர்களுக்குப் பாதுகாப்பில்லை. உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் போராடிப் படிக்கச்செல்லும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அதுமட்டுல்ல, கடந்த ஐந்து வருடங்களோடு ஒப்பிடுகையில், சென்ற வருடம்தான் இந்தியாவுக்குள் பாகிஸ்தானின் ஊடுருவல் அதிகமாக நடந்துள்ளது. ஆக, மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் நாட்டுக்கே பாதுகாப்பு இல்லாதபோது, நாட்டில் உள்ள பெண்கள் பாதுகாப்போடு இருந்துவிட முடியுமா? 

நம் நாட்டில் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே செல்கிறது. இறப்பு விகிதமோ கூடிக்கொண்டே இருக்கிறது. இதுகுறித்து ஒருமுறைகூட இந்த அரசு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இப்போதும் பிஜே.பி ஆளும் மாநிலங்களில் பால்ய விவாஹம் நடக்கிறது. குஜராத்தில் தண்ணீருக்காகப் பெண்கள் பல மைல் தூரம் நடக்கும் நிலை. இது ஒருபுறம் இருக்க, இறந்துபோன மாடுகளை அப்புறப்படுத்தவில்லை என்பதற்காகத் தலித் இளைஞர்களும் முதியவர்களும் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தலித் பெண்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களுடைய நிலை எப்படி இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

தன் ஆட்சியின் குறைபாடுகளை பூசி மறைக்கவும், பெண்களுக்கு மரியாதை கொடுப்பதுபோல காட்டிக்கொள்ளவும், கேஸ் (சமையல் வாயு) விளம்பரத்தில் போஸ் கொடுக்கிறார். பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் திட்டம்கூட வங்கிகள் ஏற்படுத்தியதுதான். அதை மோடி கொஞ்சம் உல்டாவாக மாற்றியிருக்கிறார் அவ்வளவுதான். பெண் குழந்தைகளின் சேமிப்புக்காக முன்னெடுக்கும் நடவடிக்கையைக் கொஞ்சமேனும் அவர்களின் கல்விக்காக மாற்றியமைத்திருக்கலாம். மோடியின் ஆட்சியில்தான் அதிகமான பெண் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வேறு பெருமை பேசிக்கொள்கிறார்கள். ஆனால், இது புதிதாக ஒரு யானையைப் பிடிக்க கும்கி யானைகளைப் பயன்படுத்துவது போன்ற யுக்திதான். பி.ஜே.பியைப் பொறுத்தவரையிலும் ஆண்களும் பெண்களும் ஒரே தத்துவத்தைத்தான் பின்பற்றுவார்கள். 

மதத்தை முன்னிறுத்தும் எந்த ஆட்சியிலும் பெண்ணுரிமை பின்னுக்குத் தள்ளப்படும். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை முன்வைத்து நடந்தாலும் அதுதான்; ஆர்.எஸ்.எஸ் அமைப்பை முன்வைத்து நடந்தாலும் அதுதான் என்பதை மோடியின் ஆட்சி நிரூபித்துக்கொண்டிருக்கிறது.'' 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement