வெளியிடப்பட்ட நேரம்: 19:42 (03/06/2017)

கடைசி தொடர்பு:21:54 (03/06/2017)

'கலைஞர் வைரவிழா'- கருணாநிதி பற்றி அரசியல் தலைவர்கள் பேச்சு இதுதான்!

கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் வைரவிழாக் கொண்டாட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தலைவர்கள் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றனர். 

 

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்:

கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி தருகிறது. கருணாநிதியின் அரசியல் அத்தியாயத்தை யாராலும் முறியடிக்க முடியாது. சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவர் கருணாநிதி. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் தலைவர் கருணாநிதி. எழுத்து மற்றும் பேச்சின் மூலம் மக்கள் மனதைப் பிடித்தவர் கருணாநிதி. தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார் என்று நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை மு.க.ஸ்டாலின் கொண்டு வருவார். உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய தலைவர் கருணாநிதி. அவர் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறார்.


இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா: 

கூட்டாட்சி தத்துவத்தை நசுக்கும் சூழல் இன்று தேசிய அளவில் ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு தேவைப்படுகிறது. கருணாநிதி அடிப்படையில் ஒரு சமூக புரட்சியாளர். மதவெறி அரசியலிலிருந்து நாட்டைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் எங்களுடன் கைகோர்ப்பார். 

 

 

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்:


கொள்கை, லட்சியம் என்பதிலிருந்து தி.மு.க பின்வாங்கியதில்லை. மாட்டிறைச்சிக்குத் தடை போட்டு மத்திய அரசு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை சந்திக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். எதிர்க்கட்சிகளாகிய நாம் தயாராகிவிட்டோமா என்றுதான் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். நாம் தயாராக இருக்கிறோம் என்பதைக்காட்டவே இந்த விழா.


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி:

கருணாநிதிக்குப் பாரத ரத்னா விருது  வழங்கி கௌரவிக்க வேண்டும். கின்னஸ் புத்தகத்தில் எழுதி பயிலப்பட வேண்டியவர் கருணாநிதி. தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. 

 

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி:

இளைஞர்களை அதிகம் ஊக்குவிக்கும் தன்மை கொண்டவர் கருணாநிதி. தேச பக்தர்கள் இந்தியாவைப் பாதுகாப்பதற்காக இந்த மேடையில் அனைவரும் கூடியுள்ளோம். மதச்சார்பின்மையைக் காப்பதற்காக அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். மக்களின் ஆதரவைப் பெற்று நாட்டைக் காக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசியல் ஆதாயம் அடைவதற்காக நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. மேலும் கருணாநிதியுடனான தனது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அப்போது, கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்குப் பெயர் வைத்ததை பகிர்ந்து கொண்டதையும் தெரிவித்தார். 

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி:

மிகப்பெரிய ஒருவரின் மனிதரான கருணாநிதியின் இடத்தை நிரப்ப வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது. நான் நம்பிக்கையோடு சொல்கிறேன், கருணாநிதியைப் பற்றி எப்படி பெருமையாக பேசுகிறோமோ அதைப்போல ஸ்டாலினைப் பற்றியும் பெருமையாக பேசுவோம். அவர் சரியான பாதையில் செல்கிறார். மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கை எதிர்த்து இந்த மேடையில் இருக்கும் தலைவர்கள் அனைவரும் நிற்போம்.