சதீஷ்குமார் தற்கொலையில் என்னிடம் பணம் பறிக்க முயல்கிறார்கள்! மாரியப்பன் பகீர்

Mariyappan

'சதீஷ்குமார் தற்கொலை விவகாரத்தில், என்னிடம் பணம் பறிக்க சிலர் முயல்கிறார்கள்' என பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் பகீர் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

டெல்லியில் பயிற்சியை முடித்துவிட்டு, இரண்டு நாள்களுக்கு முன்பு மாரியப்பன் தனது சொந்த ஊராக ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டிக்கு வந்துள்ளார். அப்போது, மாரியப்பன் கார் மீது அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தை மோதியுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், சதீஷ்குமார் நேற்றிரவு ரயில் மோதி தற்கொலைசெய்துகொண்டார். இந்த தற்கொலைக்கு மாரியப்பன்தான் காரணம் என்று சதீஷ்குமாரின் உறவினர்கள் புகார் கூறிவருகின்றனர். இதனிடையே, தன்னிடம் பணம் பறிக்க முயல்வதாக மாரியப்பன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இரண்டு நாள்களுக்கு முன் குடிபோதையில் சதீஷ்குமார் பைக்கில் வந்து, எனது கார் மீது மோதினார். இதில், கார் சேதம் அடைந்தது. இதுகுறித்து சதீஷ்குமாரின் பெற்றோரிடம் தெரிவித்தோம். தற்போது சதீஷ்குமார் மரணத்தில் என்னைத் தொடர்புபடுத்துகின்றனர். சதீஷ்குமார் தற்கொலையைப் பயன்படுத்தி, சிலர் அவதூறு பரப்ப முயல்கின்றனர். இந்த விவகாரத்தில், என்னை சிக்கவைத்து பணம் பறிக்க முயற்சி நடக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே, ஓமலூர் அரசு மருத்துவமனையில் உள்ள சதீஷ்குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சதீஷ்குமார் இறந்தது தொடர்பாக மாரியப்பன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!