யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பொங்கிஎழும் திருமாவளவன்!

’தலித்துகளை இழிவுபடுத்திய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’, என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

 

Thirumavalavan

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '’உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆதித்யநாத்தின் வருகையையொட்டி, 'தலித் மக்கள் குளித்துவிட்டு வரவேண்டும்' என்று  உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் சார்பில் சோப்பும் ஷாம்புவும் வழங்கப்பட்டுள்ளது. இது, தலித் மக்களை இழிவுப்படுத்தும் செயலாகும். இதற்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

உத்தரப்பிரதேசத்தில், ஆதித்யநாத் முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மேற்கு உத்தரப்பிரதேச பகுதியில் இருக்கும் சகரன்பூர் என்ற இடத்தில் உள்ள தலித்துகள் தாக்கப்பட்டு, வீடுகள் எரிக்கப்பட்டு, ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆதித்யநாத்தின் ஆதரவுபெற்ற சாதி வெறியர்கள், அந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர் மீதே வழக்கும் போடப்பட்டுள்ளது. 

சகரன்பூர் வன்முறையைக் கண்டித்து, சமீபத்தில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித்துகள் பேரணி நடத்தினர். அதற்குப் பிறகும்கூட பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இழப்பீடு வழங்கவோ, வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவோ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில்தான், தலித்துகள் அசுத்தமானவர்கள் என்று பொருள்படும்படியாக ஆதித்யநாத் அரசாங்கம் சோப்பும், ஷாம்பும் கொடுத்து அவர்களை இழிவுபடுத்தியுள்ளது.  தங்களை அசுத்தமானவர்கள் எனச்சொல்லி இழிவுபடுத்திய முதலமைச்சர் ஆதித்யநாத், முதலில் சாதி அழுக்கிலிருந்து தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் எனச் சொல்லி, அவருக்கு 16 அடி நீளமுள்ள சோப்பு ஒன்றை தலித்துகள் இப்போது அனுப்பிவைத்துள்ளனர். 

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, தலித்துகள் மீதான வன்கொடுமைகள் நாளுக்குநாள் கூடிக்கொண்டே உள்ளன. பெரும்பான்மை பலத்தோடு உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, வகுப்புவாதிகள் இன்னும் வெறிகொண்டு அலைகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக தடுத்துநிறுத்தப்பட வேண்டும். அவர்களை இழிவுபடுத்திய முதல்வர் ஆதித்யநாத், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!