Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் தொடரில் வெடிக்கவிருக்கும் பிரச்னைகள் இவைதான்!

தமிழக சட்டமன்றம் பட்ஜெட் கூட்டத் தொடர்

ட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த பகுதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், எதிர்ப்பும் எதிர்பார்ப்புகளும் காத்திருக்கின்றன. 

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரானது கடந்த மார்ச்சில் கூடியது. மார்ச் 16 ஆம் தேதியன்று 2017-18ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல்செய்தார். அதைத் தொடர்ந்து மார்ச் 20 முதல் 25ஆம் தேதிவரை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடந்திருக்கவேண்டிய துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவில்லை. ஏப்ரல் 12ஆம் தேதி நடக்கவிருந்த சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலையொட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் மோசடிக் குற்றச்சாட்டுகளால் அந்த இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. 

இதற்கிடையே அதிமுகவை நிர்வகிப்பதில் யாருக்கு அதிகாரம் என்பதில் சசிகலா மற்றும் ஓ.பன்னீர் அணிகளுக்கு இடையில் போட்டி ஏற்பட்டு, தேர்தல் ஆணையம்வரை விவகாரம் போனது. இரு தரப்பினரும் தாங்கள்தான் அதிமுகவுக்கு உரிமை படைத்தவர்கள் என நிரூபிக்க தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஏராளமான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதுடன் வாதிட்டும் வருகின்றனர். 
அதன்பிறகு பல பிரச்னைகளையொட்டி சட்டப்பேரவையைக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட முன்னணி கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தும், பேரவை கூட்டப்படவில்லை. 

தலைநகர் டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் தாக்கத்தால், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என திமுக தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் தண்ணீர்த் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இதற்குத் தீர்வுகாண மத்திய அரசிடமும் அருகமை மாநில அரசுகளிடமும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு தனிச்சட்டமுன்வரைவு இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும் அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நெடுஞ்சாலையோரம் மூடப்பட்ட மதுக்கடைகளை இடம்மாற்றி ஊர்களுக்குள் திறக்கப்படுவதை எதிர்த்து பெண்களின் பங்கேற்பில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழகத்தில் அமையவிருந்த பெரும் தொழிற்சாலை திட்டங்கள், மாநில அரசின் குறைபாடுகளால் ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. 

இவை மட்டுமின்றி வேறு பல விவகாரங்களையும் வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கிளப்பவுள்ளன. 

பாலபாரதிமாநில சுயாட்சியைப் பறிப்பதாக அமைந்துள்ள நீட் தேர்வுக்கு மாநிலத்தில் நீடித்துவரும் எதிர்ப்பைக் குறைக்கும்வகையில் அது தொடர்பாக புதிய மசோதா தாக்கல்செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. பத்திரப்பதிவுக் கட்டணம் அதிகரித்துள்ளதாலும் வீட்டுமனைத் தொழிலானது மந்தமடைந்துள்ள நிலையில், நிலத்தின் வழிகாட்டல் மதிப்பைக் குறைப்பதற்கான மசோதா கொண்டுவரப்படும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.  

முதியோர் மற்றும் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கான அரசு நிதியுதவி, ரேசன் பொருட்களுக்கான நிதி போன்றவை ஆண்டுக்கு ஒருமுறை மானியக் கோரிக்கையில்தான் ஒதுக்கப்படும்; வழக்கமான காலகட்டத்தில் பேரவையைக் கூட்டாததால் இதன் மூலம் பயனடைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் சிபிஎம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாலபாரதி. 

”குறிப்பாக மாநிலம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சம் கடுமையாக நிலவுகிறது. 146 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வறட்சியால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆளுக்கு 10 லிட்டராவது தேவை என்றபோதும் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக திண்டுக்கல் நகரம் முழுக்க தண்ணீர்ப் பஞ்சம் இருந்தாலும்,  9 இடங்களில்தான் ஆழ்துளைக் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. வெளியிலிருந்து தண்ணீரைக் கொண்டுவருவதற்கும் நிதி இல்லை. வறட்சிக்காகவே தனி சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. உரிய நேரத்தில் பேரவைக்கூட்டம் நடத்தப்படாததால், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. பேரவை கூடினால்தானே கூடுதல் நிதி வேண்டும் என்றுகூடக் கேட்கமுடியும். 

மேலும், மத்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டநிலையில், ரேசன் பொருட்கள் வாங்குவதற்கு 50% நிதியை மாநில அரசு வழங்கவேண்டும். மானியக் கோரிக்கை விவாதம் நடந்தால்தானே இதற்கான நிதியை ஒதுக்கமுடியும். அதைச் செய்யாததால் ரேசன் கடைகளில், உரிய அளவு அரிசியை வழங்குவதில்லை. அரிசி கோதுமை என சேர்த்துத் தருகிறார்கள் அல்லது குறைவான அரிசியைத் தருகிறார்கள் அல்லது அரிசி வரவில்லை என்கிறார்கள். ரேசன் கடைகளில் அரிசி கிடைக்கிறது என அரசு சொல்கிறது; சில இடங்களில் கிடைக்கிறது; பல இடங்களில் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை.  மாநில அரசாங்கம் இதை ஒரு சமாளிப்பு உத்தியாகவே செய்கிறது” என வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கான எதிர்பார்ப்புகளைப் பட்டியலிடுகிறார், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement