Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.ஜே.பி-க்கு 'செக்': தமிழகத்தில் உதயமாகிறதா புதிய கூட்டணி?

வைரவிழா - கிலியில் பி.ஜே.பி

தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணி வைரவிழா பொதுக்கூட்டம் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்திருப்பது பி.ஜே.பி-க்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.. சென்னையில் வெகுவிமரிசையாக நடைபெற்ற வைரவிழா பொதுக்கூட்டத்தில், இதுவரை இல்லாதவகையில் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக அணி திரண்டு, கருணாநிதிக்கு  புகழாரம் சூட்டினார்கள். அத்துடன் அவர்கள், தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் திறமைகளை எடுத்துரைத்ததுடன், 'விரைவில் தமிழக முதல்வராக ஸ்டாலின் வருவார்' என்றும் குறிப்பிட்டனர்.

தமிழக அரசியல்களத்தைப் பொறுத்தவரை, டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு, அதாவது ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு தெளிவற்ற நிலையில் கலங்கிப்போய் உள்ளதால், அதனை மேலும் நன்றாகக் குழப்பி, எப்படியாவது தமிழகத்தில் காலூன்றிவிட வேண்டும் என்ற நோக்கில், மத்தியில் ஆளும் பி.ஜே.பி எண்ணற்ற பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவைக் காரணம்காட்டி, ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தல் ரத்து, இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம்கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கில் டி.டி.வி. தினகரன் கைது, அ.தி.மு.க.-வின் பிரிந்த இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி என பல்வேறு சம்பவங்களின் பின்னணியில், மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசின் பங்கு உள்ளதாகவேக் கருதப்படுகிறது. சாதாரண, சாமான்ய மக்களே பி.ஜே.பி அரசின் இத்தகையபோக்கை வெளிப்படையாக விமர்சிக்கும் நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, சென்னை கூட்டத்தில் பேசியபோது, தமிழக அரசின் செயல்பாட்டின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாகக் கூறியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

ஸ்டாலின் - ராகுல்சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கருணாநிதியின் சட்டமன்றப் பணி வைரவிழா பொதுக்கூட்டத்தில், ராகுல்காந்தியுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா, திருணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவர் டெரக் ஓ பிரையன், பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சி மூத்தத் தலைவருமான நிதிஷ்குமார், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, கருணாநிதிக்கு வாழ்த்துகளையும், அவரது அயராத அரசியல் பணிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை, இந்த விழா அவருக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'திராவிடக்கட்சிகளுக்கு இணையாக, தமிழகத்தில் எப்படியாவது தடம் பதித்துவிடலாம்' என்று பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வரும் பி.ஜே.பி-க்கு, தி.மு.க நடத்திய இந்த விழா சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். அதற்கேற்றாற்போல், மு.க.ஸ்டாலின் தனது உரையின்போது, ஒருபடி மேலேபோய், தமிழகத்தை பி.ஜே.பி அரசு காவிமயமாக்கி வருவதாகத் தெரிவித்திருந்தார். இந்தக்கருத்துக்கு, தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், உடனடியாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், பதிலும் கூறியுள்ளார். அவர், 'தமிழகத்தை ஏன் காவிமயமாக்கக்கூடாது?' என்று எதிர்கேள்வியை எழுப்பியதில் இருந்தே பி.ஜே.பி-யின் அச்சம் வெளிப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக, பி.ஜே.பிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒன்றுதிரட்டி, ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி உள்ளிட்ட சில கட்சிகள் தவிர்த்து, அனைத்து தேசியக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி, கூட்டணிக்கான ஒரு மிகப்பெரும் சமிக்ஞையை உணர்த்தியுள்ளார் ஸ்டாலின்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்து ஆண்டுகால ஆட்சியில், மத்திய அரசுக்கு ஏற்கெனவே ஆதரவு அளித்த இடதுசாரிக் கட்சிகள் மற்றும் மாநிலக்கட்சிகள் தற்போது மீண்டும் ஓரணியில் திரண்டு, காங்கிரஸை ஆதரிக்கக்கூடிய சூழலை சென்னை வைரவிழா பொதுக்கூட்டம் ஏற்படுத்தியுள்ளது. பி.ஜே.பி அல்லாத தேசியக்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் சென்னையில் ஒரே மேடையில் உரையாற்றியிருப்பது, பி.ஜே.பி அரசுக்கு சற்றே கிலியை ஏற்படுத்தியிருப்பதாகவே அரசியல்நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, தமிழக அரசியலில் திட்டமிட்டு மூக்கை நுழைத்துக் கொண்டிருப்பதுடன், ஆளும் அ.தி.மு.க-வை தங்களின் கைப்பாவையாக ஆட்டிவைத்திருப்பதுடன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்த பல்வேறு திட்டங்களை, அவரது மறைவுக்குப் பின் நிறைவேற்றியதில் தொடங்கி, அண்மையில் "இறைச்சிக்கூடங்களுக்கு மாடுகளை விற்பனை செய்யக்கூடாது" என்ற உத்தரவு வரை, 'கேட்பதற்கு யாரும் இல்லை' என்ற போக்கிலேயே செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் எந்த உத்தரவையும் உறுதியுடன் எதிர்க்க முடியாமல், தலையாட்டி பொம்மைபோல், பி.ஜே.பி-யுடன் இணக்கமான போக்கையே கடைபிடித்துக் கொண்டுவருகிறது தமிழக அரசு.

கருணாநிதி-ராகுல்இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக அரசை பி.ஜே.பி அரசு இயக்கி வருவதாக, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசியிருப்பது, பி.ஜே.பி-க்கு செக் வைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையிலேயே ராகுல் இவ்வாறு பேசியதன் மூலம், பி.ஜே.பி-யை எதிர்த்துப்போராட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற தொனியை வெளிப்படுத்தும்வகையில் அமைந்ததாகவே பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களை சோனியா காந்தி ஏற்கெனவே சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளர் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற நிலைப்பாட்டை மீண்டும் உறுதிசெய்யும் வகையில் அமைந்து விட்டது.

வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பி.ஜே.பி-யை மட்டும் தனிமைப்படுத்தி, தேசிய அளவில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதுடன், அந்தந்த மாநிலங்களில் செல்வாக்குடன் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்கான முன்னோட்டமாக இந்தக் கூட்டம் அமைந்து விட்டது. அப்படி ஒருவேளை காங்கிரஸ் கட்சியுடன் அனைத்து மாநிலக் கட்சிகளும் கைகோர்த்தால், அது பி.ஜே.பி-க்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் ஏற்கெனவே கூட்டணி அமைத்து வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, அதுபோன்றதொரு மெகாகூட்டணியை எதிர்காலத்தில் மீண்டும் அமைப்பதற்கான முன்னோட்டமாகவே கருணாநிதியின் வைரவிழா பொதுக்கூட்டம் அமைந்தது.

மேலும் மாநில அரசின் செயல்பாடுகளில் மத்திய பி.ஜே.பி. அரசின் தலையீடு அதிகரிக்குமேயானால், அதைக்கண்டித்து தேசியக்கட்சிகளும் குரல்கொடுக்க நேரிடும் என்ற பி.ஜே.பி-க்கான எச்சரிக்கை மணியாகவும் அந்தப் பொதுக்கூட்டம் அமைந்து விட்டது. இதனால், தமிழகத்தைப் பொறுத்தவரை பி.ஜே.பி. இனி, சற்றே நிதானித்துச் செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. கருணாநிதியின் வைரவிழா பொதுக்கூட்டம், எதிர்கால மெகாகூட்டணிக்கு வித்திட்டால் நலமே! தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க-வும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், மக்களின் புறக்கணிப்புக்கு ஆளாக வேண்டிவரும் என்பதை அக்கட்சி மறந்துவிடக்கூடாது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement