Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீல்சேரில்தான் வாழ்க்கை... ஆனாலும், வாயால் தேர்வெழுதி சாதித்த சிறுவன்!

மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரைச் சேர்ந்த சிறுவன் துகின் தேவுக்கு, ஸ்டீபன் ஹாக்கிங்தான் இன்ஸ்பிரேஷன். துகினுக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்போலவே வீல்சேர் வாழ்க்கை. ஸ்டீபன் ஹாக்கிங்கை அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis,) என்னும் நரம்பு நோய் 21 வயதில் தாக்கியது என்றால், துகினை கருவிலேயே தாக்கியது arthrogryposis multiplex congenita என்கிற நோய். இதனால், கருவில் இருக்கும்போது, கை, கால் மூட்டுகளில் வளர்ச்சி குன்றியது. பிறந்தது முதல் இருபது அறுவைசிகிச்சைகள் செய்தும் எந்தப் பலனுமில்லை. மண்ணைத் தொட்டது முதலே வீல்சேர் வாழ்க்கை. விவரம் தெரிந்தது முதல் ஸ்டீபன் ஹாக்கிங்தான் துகினின் ஹீரோ. 

மாற்றுத்திறனாளி மாணவன் துகின்

ஸ்டீபன் போலவே துகினும் படிப்பில் கெட்டி. பெற்றோருடன் சேர்ந்து பள்ளியும் அவரை ஊக்கப்படுத்தியது. காரக்பூரில் ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயாவில் துகின் படித்தார். வீட்டிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருந்தது பள்ளி. தினமும் பள்ளிக்குச் சென்று வருவதே துகினுக்குப் போராட்டமான விஷயம். கை செயலிழந்த நிலையில் எப்படி எழுதுவது? துகின் அதற்கும் ஒரு விடை கண்டார். பேனாவை வாயில் கவ்விப் பிடித்து எழுதக் கற்றுக்கொண்டார்.

அப்படித்தான் சி.பி.எஸ்.இ தேர்வும் எழுதினார். துகினுக்காக எழுத்தர் வழங்கப்படவில்லை. முழுத்தேர்வையும் வாயில் பேனா பிடித்தபடி எழுதியிருந்தார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் நேரம் மட்டும் வழங்கப்பட்டது. எழுதுவது மட்டுமல்ல, செல்போனை இயக்குவதிலிருந்து பல விஷயங்களை வாயினாலேயே செய்ய கற்றுக்கொண்டார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சி.பி.எஸ்.இ  பத்தாம் வகுப்புத் தேர்வில், துகின் 88 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்று அசத்தியிருக்கிறார். இதனால், பெற்றோரும் துகினும் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். துகினின் இலக்கு 95 சதவிகிதமாக இருந்தது. மதிப்பெண் குறைந்தது சற்று வருத்தத்தைத் தந்தாலும், மேற்படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகக் கூறுகிறார். ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரில் ஐஐடி நுழைவுத்தேர்வுக்காகத் தன்னைத் தயார்படுத்திவருகிறார். 

துகினின் சாதனையைப் பாரட்டி மேற்குவங்கத்தைச் சேர்ந்த தீனபந்து தொண்டு நிறுவனம், லேப்டாப் மற்று டெலெஸ்கோப் ஒன்றைப் பரிசாக வழங்கியிருக்கிறது. துகினைப் பற்றிய குறும்படம் ஒன்றை, பிரபல இயக்குநர் மோனலிஸா தாஸ் குப்தா இயக்கிவருகிறார். கோட்டாவில் உள்ள ஆலென் கரியர் இன்ஸ்டிட்யூட், ஐஐடி பயிற்சியை முற்றிலும் இலவசமாக வழங்கவுள்ளது. இதையடுத்து, துகினின் பெற்றோர் படிப்பு முடியும் வரை கோட்டாவில் வசிக்கத் திட்டமிட்டுள்ளனர். '' ஸ்டீபன் ஹாக்கிங்போல ஆக வேண்டும். வருங்காலத்தில்  ஐஐடி-யில் சேர வேண்டும்'' என உற்சாகத்துடன் கூறும் துகின், கடந்த 2012-ம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும், 2013-ம் ஆண்டு சிறந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைக்கான விருதையும் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றிருக்கிறார். 

துகின் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்

துகின் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ''ஸ்டீபன் ஹாக்கிங், துகின் இருவரையும் தாக்கிய நோய்கள் வெவ்வேறானவை. ஆனால், இருவரது மூளை வளர்ச்சி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால், இதுபோன்றோருக்கு மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும்'' என்கின்றனர். 

துகினின் தந்தை சமிரான் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார். தாயார் மத்திய அரசின் கல்வித் துறையில் பணியில் இருந்தார். துகினுக்காக வேலையை ராஜினாமா செய்துவிட்டார். '' துகின்தான் எங்கள் உலகம். அவனைவிட எங்களுக்கு வேறு எதுவும் முக்கியம் அல்ல. இன்னோரு குழந்தை பிறந்து, அது நல்ல நிலையில் இருந்தால் துகினின் மனம் பாதிக்கப்படும் என்பதற்காக இரண்டாவது குழந்தைகூட நாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை'' என்கிறார் அவரது தாய்.

Pic Courtesy : Hindustan Times 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement