Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“நாடு நல்லா இருக்க கூடங்குளமும், நியூட்ரினோவும் அவசியம்..!“ - அமைச்சரின் சுற்றுச்சூழல் தின ஷேரிங்

சுற்றுச்சூழல்

ஜூன் 5-ம் தேதியான இன்று உலகம் முழுவதும் 'உலகச் சுற்றுச்சூழல் தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும்  விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, சென்னை, கிண்டியில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இணைந்து இன்று உலகச் சுற்றுச்சூழல் தின விழாவினை கொண்டாடியது. இதை முன்னிட்டு சுற்றுச்சூழல் விருதுகள் வழங்குதல் மற்றும் கழிவுகள் குறித்த மேலாண்மை விதிகளை நடைமுறைப்படுத்துதல் குறித்த கலந்தாய்வும் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் முகம்மது நசிமுதீன், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அதுல்ய மிஸ்ரா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் புத்தகங்களை அறிமுகப்படுத்தி, விருதுகளை வழங்கி பேருரை ஆற்றினார், வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன். அவர் பேசியது விழாவில் சற்று சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

1972-ம் ஆண்டிலிருந்து ஜூன் 5-ம் தேதி சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழல் துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இங்குச் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு மக்கள் தொகை அதிகரித்ததுதான், முக்கியக் காரணம். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தல், பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்தல் எனப் பல காரணிகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. நிலம், நீர், காற்று ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருக்கும் முறையில் நமது சுற்றுச்சூழல் துறை சிறப்பாகச் செயலாற்றுகிறது. குறிப்பாகச் சென்னையில் மாசுபாடு இல்லாத காற்று இருப்பதற்குக் காரணம், இந்தச் சுற்றுச்சூழல் துறைதான். மேலும் பாதாள சாக்கடைத் திட்டம் அமைத்து சுற்றுச்சூழலைக் காப்பதும் சுற்றுச்சூழல் துறைதான். இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களின் பட்டியலில் சென்னை தற்போது மூன்றாவது இடம் வகிக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, கழிவுகளைச் சுத்தப்படுத்தித் திடக்கழிவு பயன்பாட்டினை குறைத்து அதனைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முறையைக் கொண்டு வர இருக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை நீரும் நிலமும் பாதுகாப்பாக உள்ளது. நாட்டில் தொழிற்சாலைகள் அதிகமாகக் கட்டப்பட வேண்டும். அதனால் அதிகமான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். இதனால் மக்கள் பயன்பெறுவர். ஈரோடு திருப்பூர் பகுதிகளில் சாயப்பட்டறைகள் அதிகமாக இருக்கின்றன. இதனால் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரமும், வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. ஆனால், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் குழாய்களிலும், தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களிலும் உடைப்பு ஏற்பட்டுக் கவனிக்காமல் நீரானது வீணாகினால் தயவு செய்து பத்திரிக்கையில் எழுத வேண்டாம். ஜெயலலிதா இருக்கும்போது சாயப்பட்டறைகளுக்கு வட்டியில்லாக் கடனாகக் கொடுத்தார். இங்கே உள்ள தொழிற்சாலைகளில் முன்னர் எல்லாம் புகை அப்படியே வெளியேறும். ஆனால் இப்போது புகை சுத்தம் செய்யப்பட்டு வெளியே விடப்படுகிறது. எல்லாவற்றிலும் இன்று சுற்றுச்சூழல் துறை நன்றாகச் செயல்பட்டு வருகிறது. எல்லாப் பள்ளிகளிலும் மரம் நட்டு வளர்ப்பது குறித்து எல்.சி.டி திரை மூலம் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சேத்துப்பட்டு, கொரட்டூர், அம்பத்தூர் ஆகிய ஏரிகள் ஆகிய ஏரிகள் பல கோடி செலவில் தூர்வாரப்பட்டுச் சுற்றிலும் கற்கள் அமைத்து நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரி பக்கத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஏரி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டில் சாயத்தண்ணீரை வெளியேற்ற ஒன்றரை கோடியில் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதன் வேலைச் சாயத்தண்ணீரை தூய நன்னீராக மாற்றிக் கொடுப்பதுதான். மேலும் கடந்த 4 ஆண்டுகளில் இரண்டரை கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு வளமாக உள்ளது" என்றார்.

கருத்துரைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார், அமைச்சர் கே.சி.கருப்பணன். "அப்போது பேசிய அவர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எல்லாத் தொழிற்சாலைகளுக்கும் இங்கே அனுமதி கொடுக்க வேண்டும்" என்றார். கூடங்குளம், நியூட்ரினோ ஆகிய திட்டங்களைப் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "கூடங்குளத்தில் கிடைக்கின்ற மின்சாரத்தால்தான் நமக்கு மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. இதுதவிர, ஒரு நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் சிறிய இடத்தை அர்ப்பணிப்பதில் தவறில்லை". மேலும் மீத்தேன், ஷேல் கேஸ் குறித்த கேள்விகளுக்கு "தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை பொறுப்பாகாது, அது மத்திய சுற்றுச்சூழல் துறையின் வேலை. அது நினைத்தால்தான் இந்தத் திட்டங்களை நிறுத்த முடியும்" என்றார்.

கூடங்குளம், நியூட்ரினோ நல்லது, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும், சென்னையில் சுத்தமான காற்று நிலவுகிறது, தூய பாதாள சாக்கடை திட்டம், ஜெயலலிதா நட்ட இரண்டரை கோடி மரங்கள் என வரிசையாக அடுக்கிக் கொண்டே செல்கிறார் அமைச்சர்.

வாசகர்களே... நீங்கள் என்ன நினைக்கறீர்கள்?  உங்கள் கருத்துகளை கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement