வெளியிடப்பட்ட நேரம்: 09:48 (06/06/2017)

கடைசி தொடர்பு:09:48 (06/06/2017)

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் இப்போது என்ன நடக்கிறது..? #SpotReport #VikatanExclusive

சிறுதாவூர்

“ஆலத்தூர் கருங்குழி பள்ளம் அருகே அம்மா தோட்டம் என்று அழைக்கப்படும் சிறுதாவூர் பங்களாவை அடுத்துள்ள எங்களுடைய நிலத்தை சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் அபகரித்துக் கொண்டனர்" என்று ஒரு தம்பதியர் நமக்குப் புகார் தெரிவித்தனர். அபகரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட அந்த நிலத்தைப் பற்றித்தெரிந்து கொள்ள அந்த இடத்துக்குப் பயணமானேன். திருப்போரூர்  சென்றதும், அங்கிருந்து சிறுதாவூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று அங்கிருந்த ஒரு கடையின் வாட்ச்மேனிடம் வழி கேட்டேன்." அரசு பேருந்து, டெம்போ போன்ற எல்லாமே அந்தவழியாப் போகும். ஆனா பஸ்ல போறதுதான் நல்லது" என்று அக்கறையுடன் கூறினார். 

இங்கே நிற்காதீர்கள் துரத்திய போலீஸார் 

“இல்லை அண்ணா பேருந்துக்காகக் காத்திருக்க நேரமில்லை டெம்போவிலே செல்கிறேன்" என்றேன். "டெம்போவில் பெண்கள் அதிகமாக வந்தால் நீயும் போம்மா" என்றார் மீண்டும்  அக்கறையோடு. கருங்குழிப் பள்ளம், சிறுதாவூர் என்றாலே அந்தப் பகுதி மக்கள் பதறுவதோடு கேட்ட நம்மை  ஏற இறங்கப் பார்க்கிறார்கள். "சிறுதாவூர் பங்களாவுக்குப் போகணும். அந்த இடத்துக்கு பக்கதுல்ல இறக்கி விடுங்க" என்று டெம்போ டிரைவரிடம் கூறினேன். நான் சொன்னபடியே அவர் சிறுதாவூர் பங்களா செல்லும் பாதையில் இறக்கி விட்டார். 

 இறங்கி பார்த்தும் சுற்றிலும் காட்டுப்பகுதி. நல்லவேளையாக சாலையின் ஓரத்தில் இளநீர் கடை ஒன்று இருந்தது. சிறுதாவூர் பங்களா என்று அங்கிருந்தவரிடம் கேட்டபோது ,"ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். இறங்கின இடத்திலேயே நில்லுங்க, டெம்போ எதாவது வந்தால் அதுல போங்க" என்றார். "பங்களாவின் டவர் தெரியும்.அந்த இடத்தில இறங்கிக்கங்க" என்றார் கூடுதல் தகவலுடன். அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி, அந்த இடத்தில் இறங்கினேன். அதற்குள் நமது புகைப்பட கலைஞரும் வந்து விட்டார். பாதிக்கப்பட்ட நபர் சுட்டிக்காட்டிய இடத்தைக் காட்ட புகைப்படம் எடுக்க கேமிராவை எடுத்தார். 

இதைப் பார்த்துக்கொண்டிருந்த பங்களா காம்பவுண்டை ஒட்டி நின்றிருந்த போலீஸ்காரர்கள் ஓடி வந்து எங்களைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். "தயவு செய்து புகைப்படம் எடுக்க வேண்டாம்" என்று கூறியவர்கள்,"உடனே இந்த இடத்தை விட்டுச் சென்று விடுங்கள்" என்று அதிகார தோரணையில் சொன்னார்கள்.கேமிராவுடன் இருந்தால் விடமாட்டர்கள் என்பதால் புகைப்பட கலைஞரை அனுப்பிவிட்டு மாளிகையின் வாயிலில் காத்திருந்தேன். அங்கு வந்த போலீசார், "இங்கே நிற்காதீர்கள்"  "டெம்போ இல்லாட்டி ஆட்டோ வந்ததும் சென்று விடுகிறேன்" என்று சொன்னேன். 

சின்னம்மாவுக்கு வணக்கம் சொல்லச் சொல்வார்..

அம்சவேணிஉடனடியாக வாகனம் எதுவும் வரவில்லை.15 நிமிடம் கடந்திருக்கும் 12 மணிவாக்கில் சிறுதாவூர் பங்களாவில் இருந்து சில பெண்கள் வெளியே வந்தனர். அவர்களும் பேருந்துக்காக காத்து நிற்க ஆரம்பித்தனர். அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அவர்களிடம்  மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன். 

பயத்தோடும் தயக்கத்தோடும் நம்மிடம் பேசினார் அம்சவேணி என்ற பெண். "காலை 8 மணிக்கு தோட்டத்துக்குள்ள  போனா வேலை முடிஞ்சு 3 மணிக்குதான் வெளியே வருவோம். அம்மா (ஜெயலலிதா) இந்த பங்களாவுக்கு வரும்போது எங்களை நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. அம்மா உயிரோடு இருந்தபோது அடிக்கடி இங்க வருவாங்க.அவங்களைப் பார்க்கும் போது 'வணக்கம்மா' என்று சொல்வோம். பதிலுக்கு அவரும் வணக்கம் சொல்வார்.எங்களுடைய மேனேஜர், 'சின்ன அம்மாவுக்கும் வணக்கம் சொல்லுங்கள்' என்று கூறுவார்.நாங்கள் அம்மாவுக்கு மட்டும் வணக்கம் சொல்லிவிட்டு வேலையை பார்ப்போம்.

தோட்டத்தில் 5 குளங்கள் இருக்கின்றன.அதில் ஒரு குளம் மிகவும் பெரிய குளம்.அந்த குளத்தில் சில நேரத்தில் போட் எடுக்கச் சொல்லி இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே அம்மா சுற்றி வருவார். அதேபோன்று சசிகலாவும் மாலை நேரத்தில் மூன்று சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு நிலத்தை சுற்றிப் பார்ப்பார். அம்மா பங்களாவுக்கு வருவார் என்று நம்பிக்கையோடுவேலை செய்து வந்தோம். இனிமேல் வரமாட்டார் என்று நினைக்கிறபோது மிகுந்த வேதனையாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தர்பூசனி பயிரிட்டிருந்தோம். அதன் அறுவடை முடிந்துவிட்டன. தற்போது பங்களாவில் உள்ள செடிகளைப் பராமரிப்பது, பங்களாவைச் சுற்றி சுத்தமாக வைத்திருப்பது போன்ற வேலைகளைச் செய்து வருகிறோம். மொத்தம் 23 பேர் வேலை செய்கிறார்கள். அதில் 18 பேர் பெண்கள் 5 பேர் ஆண்கள்" என்றார். 

அம்மா இறந்ததால பங்களாவுக்கு வர பிடிக்கல ..

அந்தப் பகுதியைச் சேர்ந்த கண்ணகியிடம் பேசினோம் "கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த தோட்டத்தில்தான் வேலை செய்து வந்தேன். கண்ணகி வேலைக்கு வருவதற்கு முன்பு இங்கு மாடுகளை ஓட்டி வந்து மேய்ப்பேன். பிறகு பங்களா தோட்டத்தில் பயிர் வைக்க நாத்து விட்டதால் மாடுகள் மேய்ப்பதை நிறுத்திக் கொண்டேன். அம்மா இறப்பதற்கு கொஞ்ச நாளுக்கு முன்பு இருந்து நான் அங்கு வேலைக்குப் போவதில்லை. வேலை செய்து கொண்டிருக்கும்போது மாடியில் நின்று அம்மா பாப்பாங்க. அப்போ வணக்கம் சொன்னா அவங்களும் சிரிச்சிக்கிட்டே பதிலுக்கு வணக்கம் சொல்லுவாங்க. பெரும்பாலும் பங்களாவின் கதவுகள் மூடியே இருக்கும். ஆனால் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா நடித்த படங்களில் இருந்து பாட்டுக்  மட்டும் கேட்கும். அம்மான்னா எனக்கு உயிர். அவர் இறந்தபோது வேதனையா இருந்துச்சு. அம்மா இல்லாத இந்த இடத்துக்கு வர பிடிக்கல. பங்களா வெறிச்சோடி போயிடுச்சு" என்றார் கவலையுடன்.  

சிறுதாவூர் பங்களா அருகே இருக்கும் இளநீர் கடைக்காரர் கணேசனிடம் பேசியபோது." அம்மா காரில் இந்தக் கடையைக் கடந்து செல்லும்போது வணக்கம் வைப்பேன். அவர்களும் பதிலுக்கு வணக்கம் வைப்பார்கள். பங்களாவுக்குள் நான் சென்றதில்லை. காட்டுப்பகுதி என்பதால் இந்தப் பகுதிக்கு வருவதற்கு பலருக்கு பயமாக இருக்கும்" என்றார் 


டிரெண்டிங் @ விகடன்