போலீஸார் என்னைக் கொன்னுடுவாங்க..! - பதற்றத்தில் ராக்கெட் ராஜா

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராக்கெட் ராஜா. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஜாதிரீதியான பல புகார்களில் இவரது பெயர் இடம்பெற்றபோதிலும், போதிய ஆதாரம் இல்லாததால், இவர் எந்த வழக்கிலும் சேர்க்கப்பட்டதில்லை.

Rocket Raja


ஜாதிரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பசுபதி பாண்டியன் கொலைச் சம்பவத்தில், முதலில் சந்தேகத்துக்கு உள்ளான நபர், ராக்கெட். ஆனால், ஆதாரம் எதுவும் இல்லாததால், அவர் இந்தக் கொலை வழக்கில் இதுவரை சேர்க்கப்படவில்லை. ஆனாலும்கூட  காவல்துறையின்  சந்தேக வலையத்துக்குள் இவர்  இருக்கிறார். ராக்கெட் ராஜாவின் நடவடிக்கைகளை போலீஸார் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.


இவரின் சொந்த ஊர் திசையன்விளை அருகில் உள்ள ஆனைக்குடி. கராத்தே செல்வினைக் கொலைசெய்த கட்டத்துரையைக் கொலை செய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராக்கெட் ராஜா, கைது செய்யப்பட்டு அந்த வழக்கிலிருந்து விடுதலையானார்.
வெங்கடேசப் பண்ணையாரின் தளபதியாய் இயங்கிய ராக்கெட் ராஜா, அவரின் மறைவுக்குப் பிறகு, சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து செயல்பட்டுவருவதாக புகார் எழுந்து உள்ளது.

 

 


ராக்கெட் ராஜா மீது தமிழகத்தில் இருந்த அத்தனை வழக்குகளும் ஆதாரம் இல்லாததால் தள்ளுபடியாகிவிட்டன. 
இந்த நிலையில், ராக்கெட் ராஜாவை நெல்லை போலீஸார் சுற்றிவளைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வீடியோ பதிவையும்  ராக்கெட் ராஜா வெளியிட்டுள்ளார்.


அதில், 'என்மீது வழக்குகள் எதுவும் இல்லாத நிலையில், என்னைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கில் போலீஸார் செயல்படுகின்றனர். ஒருவரை தூதுவராக விட்டுக்கூட என்னை சரணடையக் கூறினார்கள். ஆனால், நான் சரணடைந்தாலும் என்னைக் கொல்வது உறுதி என தூதுவந்தவர் கூறிவிட்டுச் சென்றார்.


இது முழுக்க முழுக்க நெல்லை எஸ்.பி அருண் சக்திவேல் குமாரின்  தவறான புரிதலால் நடைபெற்றுவருகிறது. இது, என்னுடைய கடைசி வாக்குமூலமாகக்கூட இருக்கலாம். என்னை முறையாகக் கையாண்டால், நான் சரணடைகிறேன். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு நெல்லை போலீஸாரே காரணம்' என ராக்கெட் ராஜா அந்த வீடியோவில் வாக்குமூலம் அளித்துள்ளார்.  


இந்த விவகாரம் நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ ஏற்படுத்திய தாக்கத்தால், பொதுமக்கள் இந்த விவகாரம்குறித்து விவாதித்துவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!