Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"சினிமா பார்த்ததில்லை... ஆனா, 17 வருஷமா திரை விமர்சகி!’’ - நியூஸ் ரீடர் ரத்னா

நியூஸ் ரீடர் ரத்னா

''நியூஸ் ரீடரா என்னோட பணியைத் தொடங்கி 28 வருஷம் ஆகுது. சிறப்பான அடையாளத்தைக் கொடுத்தாலும் இந்தப் பணியை இதுவரைக்கும் பார்ட் டைமாதான் பண்ணிட்டு இருக்கேன். அதே சமயம் என்னுடைய முழுநேர வேலை கார்மென்ட் பிஸினஸ்'' என உற்சாகமாகப் பேசும் சன் டிவி செய்தி வாசிப்பாளர் ரத்னா அனைவருக்கும் பரிட்சயமானவர். 

“எங்க குடும்பத்துல எனக்கு மட்டும்தான் தமிழில் ஆர்வம் அதிகம். கூடவே உலக நடப்புகளை தவறாம தெரிந்துகொண்டு நண்பர்களோடு விவாதிக்கவும் செய்வேன். அதனாலேயே நியூஸ் ரீடர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். தனியார் சேனல்களோட வருகை இல்லாத அந்த காலகட்டத்துல பொதிகையில செய்தி வாசிப்பாளர் வேலைக்கு தேர்வாகிறது குதிரைக் கொம்பான விஷயம். எம்.காம்., காஸ்ட் அக்கவுன்டிங் கோர்ஸ் முடிச்சுட்டு, 1989-ம் வருஷம் பொதிகை சேனல்ல இன்டர்வியூக்குப் போனேன். 250 பேர் கலந்துகிட்ட செய்தி வாசிப்பாளர் வேலைக்கு, இறுதியா நான் உள்ளிட்ட ரெண்டு பேர்தான் தேர்வானோம். அங்க சில மாசம் வேலை பார்த்துட்டு சின்ன பிரேக் எடுத்துகிட்டேன். அப்ப ஆரம்பமானது சன்.டிவி. உடனே அங்க நியூஸ் ரீடரா என்னோட மீடியா மறுபிரவேசத்தை ஆரம்பித்தேன். இத்தனை வருஷ காலமா எல்லாருக்கும் பரிட்சயமான பெண்ணா வலம் வர்றேன். சன் டிவியில சேர்ந்த பிறகுதான் என்னோட கிராஃப் உயர்ந்தது" என்பவர் தன் பணி அனுபவத்தில் மறக்க முடியாத நிகழ்வுகளைக் கூறுகிறார். 

நியூஸ் ரீடர் ரத்னா

"ஒண்ணா இரண்டா... ஊடக பயணத்துல ஏராளமான சுவாரஸ்யமான, மகிழ்ச்சியான, துக்கமான தருணங்களை சந்திச்சிருக்கேன். சுனாமியும், கும்பகோணம் தீ விபத்தும் என் வாழ்நாள்ல மறக்க முடியாத துயர சம்பவங்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் ‘திடீர்னு கடல் சீற்றத்தால மிகப்பெரிய அளவுல சேதம் ஏற்பட்டிருக்கிறது. உடனே ஆஃபிஸ்க்கு கிளம்பி வாங்க’னு போன் வந்துச்சு. அப்போ என்னோட பையனும், பொண்ணும் மூணு மாச கைக்குழந்தைகளா இருந்தாங்க. இந்தச் சமயத்துல 'துக்கமான செய்தியை படிக்க போய்தான் ஆகணுமா? முடியாதுனு சொல்லேன்னு வீட்டுல சொன்னாங்க. ஆனா 'தொழிலுக்கான முக்கியத்துவத்தைக் கொடுத்தாகணும்'னு சொல்லிட்டு, நானும் பதறியடிச்சு ஆஃபிஸ்க்குப் போனேன். சுனாமி வீடியோ க்ளிப்பிங் எல்லாம் பார்த்ததும் இது என்ன ஹாலிவுட் படத்துல பார்க்கிற மாதிரி இருக்குது. செய்திகள் எல்லாம் நிஜமா கனவானு என் மனசுல உறுதிபடுத்திக்கவே நேரமாச்சு. அடுத்து தொடர்ச்சியா ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை சிறப்பு செய்திகளைச் சொல்ல, அதை எதிர்நோக்கி தமிழகமே காத்துகிட்டு இருந்துச்சு. அச்செய்திகளில் நூற்றுக்கணக்குல உயிரிழப்புன்னு சொல்லிக்கொண்டே இருக்கிறதையும், அந்தக் காட்சிகளை பார்க்கும்போது மனசுக்குள்ள பயங்கரமான பதற்றமும், ஆதங்கமும் இருந்துகொண்டே இருந்துச்சு. 

அதே போல கும்பகோணம் பள்ளி தீ விபத்துல குழந்தைகள் உயிரிழந்து அவங்களோட உடல்களை ஸ்டெச்சர்லேயும், வாழை இலையிலயும் எடுத்துக்கிட்டு போறதை பார்த்து செய்தி வாசிச்சப்போ உள்ளுக்குள்ளே சொல்ல முடியாத துக்கம். இப்படியான செய்திகளை எல்லாம் படிக்கிறப்போ தனிப்பட்ட உணர்வுகளை முகத்துல காட்டிக்காம செய்தி படிச்சுட்டு, வீட்டுல வந்து அழுத தருணங்கள் ஏராளம்'' என்பவர் தனக்கு இன்னும் ஓர் அடையாளம் கொடுத்த திரைவிமர்சனம் நிகழ்ச்சி தொகுப்பாளர் அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார். 

நியூஸ் ரீடர் ரத்னா

“ஆரம்பத்துல திரைவிமர்சனம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிட்டு இருந்த உமா பத்மநாபன் மேடம், புதிசா தொடங்கிய ‘வணக்கம் தமிழகம்’ நிகழ்ச்சி தொகுப்பாளரானாங்க. அதனால நேரப் பிரச்னை ஏற்பட்டு திரைவிமர்சனத்தை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சுது. 17 வருடங்களா 850 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி உலகம் முழுக்க எனக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்துச்சு. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் தமிழ்நாடு முழுக்க பெரும்பாலான ரசிகர்கள் ஒரு திரைப்படத்தின் விமர்சனத்தை தெரிஞ்சுகிட்டுதான் அடுத்து அப்படத்தைப் பார்க்கவே போவாங்க. ஆனா பெரும்பாலும் அப்படங்களை நான் பார்க்காமலேயே எங்கள் குழு தயாரித்துக் கொடுக்கிற தகவல்களை மட்டும் படிப்பேன். ‘அந்தப் படத்தைப் பார்க்கலாமா? நல்லாயிருக்குமா’னு என்னை சந்திச்சும், போன் வாயிலாவும் கேட்பாங்க" என்பவருக்குப் புடவைகள் என்றால் அலாதியான பிரியம். அதனால் நவீன உடைகள் அணியாமல் தனக்குப் பிடித்த வெரைட்டியான புடவைகளை அணிந்துதான், ஆரம்பம் முதல் இப்போ வரையிலும் ஊடகத்தின் முன்பாகத் தோன்றுகிறார். 

"சினிமாவுல நடிக்கிற வாய்ப்பும் பல முறை வந்தும் அதை மறுத்துட்டேன். ஆனா சினிமாவுல செய்தி வாசிக்கிற மாதிரியான காட்சிகள்ல நான்தான் நிறையவே தோன்றியிருக்கிறேன். இப்படி 28 வருஷமா மீடியா தொடர்புல இருந்தாலும், இது பார்ட் டைம் வொர்க்தான். ஊடக பயணம் தொடங்கிய சமயத்தில் தனியார் நிறுவனத்தில் அக்கவுன்ட்ஸ் வேலையும், அடுத்து அரசு நிறுவனத்தில் பல வருஷம் மார்க்கெட்டிங் வேலையும் செய்தேன். இப்போது கடந்த 12 வருஷமா கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் வேலையைப் பெரிய அளவுல செய்துகிட்டு இருக்கிறேன். வாடிக்கையாளர்கள் கேட்கும் ஆடை வகைகளை, மற்ற இடங்களில் இருந்து வாங்கி சேல்ஸ் பண்ணிகிட்டு இருக்கேன். நேரத்தைச் சரியா பயன்படுத்தி மீடியா, பிசினஸ், இசை, தியானம், யோகான்னு எப்போதும் மகிழ்ச்சியோடு இயங்கிட்டு இருக்கிறேன்" எனப் புன்னகைக்கிறார் ரத்னா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement