Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர் எடப்பாடிதான்; ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை...!?

                                                                   முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்

ப்போலோ காலகட்டமான செப்டம்பர் 22-ல் தொடங்கி  இன்றைய (6.6.2017) தேதிவரையில் எது நிஜம், எது நாடகம் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப் பட்டிருக்கிறார்கள்... அதிகளவு குழப்பத்தில் இருப்பவர்கள், அ.தி.மு.க. வே கணக்கிட்டு சொல்லும் அந்த ஒன்றரைக் கோடி கட்சித் தொண்டர்கள் தான். 'அம்மா இப்போது நான்கு இட்லிகளை காரம் குறைவாக வைத்து சாப்பிட்டார், சின்னம்மா அருகிருந்து பாதுகாக்கப் பட்ட குடிநீரை அவருக்கு குடிக்கக் கொடுத்தார்' என்று சொன்ன முன்னாள் மந்திரி பொன்னையன், 'அம்மாவைக் கொன்று விட்டார்கள்' என்ற பிரசாரத்தை முன்னிறுத்தும் அணியில் நின்று இட்லிக்கு மாற்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.'அம்மாவை யாராலும் பார்க்க முடியாது, அம்மா மேக்கப் இல்லாமல் வெளியில் வந்ததே இல்லை... என்றெல்லாம் சொன்னவர்கள் கூட  ஜெயலலிதா இறந்ததாக அறிவிப்பு வெளியான சில நாட்களில், “அனைத்து கோப்புகளையும் அம்மாதான் பார்த்து எங்களுக்கு உத்தரவுகளை வழங்கினார். அம்மா சொன்னபடிதான் மூன்று தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளர்கள் தேர்வும் நடந்தது" என்று சொல்லி அதிர வைத்தனர். சென்னை அவ்வை சண்முகம் சாலையிலிருக்கும் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் இதுபோன்ற அடுத்தடுத்த பூகம்ப நகர்வை ஒருபோதும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் போன்ற முன்னாள் முதல்வர்கள் யாரும் பார்த்திராத காட்சிகளை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது...

"தமிழகத்தின் முதல்வர் எடப்பாடிதான்; ஆனால், அவர் போட்டிருக்கிற முதல்வர் சட்டை என்னுடையது" என்கிற 'பஞ்ச்' டயலாக்கை சொல்கிற ஹீரோவாக சீனியர் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியிருக்கிறார். சிறையில் இருந்து ஜூன் 3-ம் தேதி, அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார். 'கட்சியின் சின்னமான இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான தினகரன் உண்மையிலேயே தியாகிதான்' என்று அவரின் செயலுக்கு நியாயம் கற்பிக்கும் தீவிர ஆதரவாளர்கள் நிறையவே இருக்கிறார்கள். தினகரனை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்த கூட்டமே அதற்குச் சாட்சியாக அமைந்தது.சிறையில் இருந்து மீண்டுவந்த டி.டி.வி.தினகரன், "அமைச்சர்கள் அனைவரும் தாங்களாகவே அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். கட்சியின் நலனுக்காக என்னைக் கொஞ்சம் ஒதுங்கியிருக்கச் சொன்னார்கள். நானும் ஒதுங்கினேன். தற்போது சிறையில் இருக்கும் சின்னம்மாவை (சசிகலா) சந்தித்துவிட்டு, அடுத்தக்கட்ட பணிகளை மேற்கொள்ளப் போகிறேன்" என்றார்.

டி.டி.வி. தினகரன் பேட்டி அளித்த சில நிமிடங்களிலேயே அமைச்சர்கள் பலரும் அதற்கு 'கவுன்ட்டர்' கொடுத்தனர். "கட்சியின் நலனுக்காக கட்சியைவிட்டு ஒதுங்கியிருப்பதாகச் சொல்லிவிட்டு, இப்போது மீண்டும் கட்சிக்குள் வருவதாக தினகரன் சொல்லியிருக்கிறார். தினகரன் பேட்டி குறித்து கட்சித்தலைமை முடிவெடுக்கும்" என்றனர். அந்தப் பேட்டியிலேயே 'கட்சித் தலைமை என்பது சசிகலாவோ, தினகரனோ அல்ல' என்பதை அவர்கள் சொல்லாமல் சொல்லி விட்டனர்.கட்சிக்குள் மீண்டும் வரவிருப்பதாக தினகரன் பேட்டியளித்த ஒரேநாள் இடைவெளியில், அமைச்சர் ஜெயகுமார் அழைப்பின்பேரில், இருபது அமைச்சர்கள் அவசரமாகக்கூடி ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, "முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லிய பின் செய்தியாளர்களுக்குத் தெரியப் படுத்துகிறோம்" என்று ஜெயக்குமார் குறிப்பிட்டார். 'சின்னம்மாதான்யா கட்சி, அவங்கதான் இனி எல்லாமே...போதுமா?' என்று கூவத்தூரில் செய்தியாளர்களிடம் கோபத்துடன் பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் பேட்டியளித்தபோது அவரதுகருத்துகளை ஆமோதித்து தலையாட்டுகிறார். 

"இந்தவாரத்தில் சசிகலாவை சிறையில் போய் சந்தித்துப் பேசுவேன். அவரின் கட்டளையை ஏற்று கட்சிப் பணியாற்றுவேன்" என்று சொன்ன மறுநாளே சிறைக்குப் போய் சசிகலாவைப் பார்த்தார். இந்தச் சூழ்நிலையில், தினகரனை அத்தனை வேகத்துடன் சிறைக்கு அனுப்பி வைத்த சக்தி எது என்ற ஒருகேள்வியும் இங்கே எழுகிறது.அ.தி.மு.க. தொண்டர்களின் பார்வை ஒரே மாதிரியாக இருந்த நிலை மாறி தற்போது நான்கைந்து பார்வையாகி நிற்கிறது. சசிகலா - தினகரனுக்கு ஆதரவு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு, அமைச்சர் ஜெயக்குமாரின் நடவடிக்கையை புரிந்துகொள்ள முயற்சிக்கும் ஆதரவு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அ.தி.மு.க-வில் பலவிதமான பார்வைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க-வில் இப்போதுள்ள சூழ்நிலை பற்றி கருத்து தெரிவித்த அக்கட்சியின் சீனியர் தொண்டர்கள், "கட்சிக்குள் நுழைவேன் என்று அறிவித்த தினகரனின் வேகம், எங்கேபோய் யாரை எட்டியதோ, யாரை குத்தி காயப்படுத்தியதோ தெரியவில்லை. அதனால்தான் இப்படி அவசரக்கூட்டத்தை ஜெயக்குமார் கூட்டினார்.

தனக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த களேபரத்தில் தலையைக் காட்டாததும் சந்தேகத்தை வரவழைக்கிறது. எங்களுக்கு இதெல்லாமே ஒரு நாடகம் போல்தான் தெரிகிறது...  ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதிவிசாரணை கேட்டு ஓ.பி.எஸ். மேற்கொண்ட பயணம் பற்றி இனியாரும் பேச மாட்டார்கள். தினகரன், எடப்பாடி, ஜெயக்குமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிப் பேசத் தொடங்கி விடுவார்கள். அது, உண்மையான மோதல் இல்லை என்பதை நாங்கள் அறிவோம். சசிகலா டைரக்‌ஷனில்தான் கட்சி போய்க் கொண்டிருப்பதாக நாங்கள் உறுதியாகவே நம்புகிறோம். எடப்பாடி பழனிசாமி, டி.ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், செங்கோட்டையன், தங்கமணி. எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி போன்றோர் தங்களுக்கான கேரக்டர்களின் அருமையாக நடித்து வருகின்றனர்" என்கின்றனர். இன்னொரு தரப்பு தொண்டர்களோ, மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர். நம்மிடம் பேசிய வேறுசிலர், "இனி கட்சி அவ்வளவுதான், ஓ.பன்னீர் செல்வமா? சசிகலா கைகாட்டும் வேறு நபரா என்ற இரண்டு சாய்சில் கடந்த ஆறுமாதமாக கட்சி இருந்து வந்தது. இப்போது எடப்பாடி பழனிச்சாமியா, சசிகலாவின் ஆதரவைப் பெற்ற டி.டி.வி. தினகரனா அல்லது ஓ.பி.எஸ்ஸா? இவர்களில் யார் கையில் கட்சியும், ஆட்சியும் இருக்கும் என்ற குழப்பத்தில் நாங்கள் தவிக்கிறோம். மொத்தத்தில், அ.தி.மு.க.வுக்கு தலைமை யார் என்பது புரியாமல் உள்ளோம்" என்றனர்.

                                                        சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம்

சசிகலா- தினகரன், எடப்பாடி-ஜெயக்குமார் என அடுத்தடுத்து அ.தி.மு.க-வில் குழப்பங்கள் நீடித்து வருவதால், அடுத்தக்கட்ட பெரும் மோதலுக்கு அ.தி.மு.க. தலைமைக்கழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 'புரட்சித்தலைவி அம்மா அணி' யின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விடும் அறிக்கைகள் எல்லாமே அ.தி.மு.க. தலைமைக் கழக லெட்டர் ஹெட்டில்தான் இதுவரையிலும் வந்துகொண்டு இருக்கிறது.ஆனால், கட்சி அலுவலகத்துக்கு சசிகலா- தினகரன் ஆதரவைப் பெற்ற 'அம்மா அணி' அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே வந்து போகின்றனர். ஓ.பி.எஸ். அணியினர் ஒருவரும் அந்தப் பக்கம் வந்ததில்லை. அங்கே வருவதற்கான முயற்சியில் அவர்கள் இதுவரையிலும் ஈடுபட்டதில்லை. இதுபற்றி 'புரட்சித்தலைவி அம்மா அணி' யின் அவைத்தலைவர் மதுசூதனனிடம் கேட்டபோது, "அது எங்க இடம்தான்; அவங்களும் ('அம்மா அணி' ) நம்ம கட்சிக்காரப் பிள்ளைங்கதானே... எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் இருப்பாங்க... பிறகு ஓ.பி.எஸ். தலைமையிலான அண்ணா தி.மு.க.-காரன் மட்டும்தானே அங்கே இருக்கப் போறான்? எல்லாம் நல்லபடியா முடியற காலம் கைகூடிக்கிட்டு வருது" என்றார்.

ஜெயலலிதாவுக்குப் பதில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டபோதெல்லாம் எதிர்ப்பேச்சு ஏதும் பேசமுடியாத முதல்வராகவே ஓ.பி.எஸ். இருந்தார். அதற்குக் காரணம், எம்.ஜி.ஆருக்குப் பின்னர் அ.தி.மு.க.வின் 'ஒன் உமன்' ஆர்மியாக ஜெயலலிதா இருந்ததுதான். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதுபோன்ற 'கிரேஸ்' கொண்ட தலைமை அ.தி.மு.க.-வுக்கு இல்லை என்பதை கடந்த டிசம்பர் மாதம் முதலே அறிய முடிந்தது. ஜெயலலிதாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர்என்பதற்காக மட்டுமே. தொண்டர்களால் தற்காலிகமாக ஏற்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அதே ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து, சசிகலா முதல்வர் பதவிக்கு ஆசைப்படவே நிலைமை வேறுமாதிரியாக மாறியது. சசிகலாவுக்கு முதல்வர் பதவி வாய்க்காமல் போகவே எடப்பாடி பழனிசாமியை அந்த இடத்துக்கு சசிகலா கொண்டு வந்தார்.

கூவத்தூரில் 19 நாட்கள் சிறைவாழ்க்கை வாழ்ந்தபோது கூட சசிகலா - தினகரன் ஆதரவு நிலையிலிருந்து தடுமாறாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இப்படியொரு மாற்றத்தை தற்போது எடுத்திருப்பதற்குக் காரணம், அவர்களுக்குள் நடத்தப்பட்ட ஆலோசனையே எனலாம்.  'கொங்கு மண்டலத்தின் அடுத்த கட்ட வேகமாக மன்னார்குடியை மண் கவ்வ வைக்கும் திட்டங்கள் சாதாரணமாகவே நடக்கும்' என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. அதன் சின்ன நகர்வாக கோட்டையில் அனைத்து மந்திரிகளின் அறைகளிலும் முதல்வர் எடப்பாடி பழானிசாமி படம் இடம் பிடித்துள்ளது... இனி அந்தப் படங்கள் அரசுத்துறையின் அத்தனை இடத்திலும் அலங்கரிக்கத் தொடங்கி விடும்.ஓ.பி.எஸ். தலைமையிலான 'புரட்சித்தலைவி அம்மா அணி' நடத்தவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பாரா? இரட்டை இலைச் சின்னம் எந்த அணிக்குச் செல்லும் அல்லது நிரந்தரமாக முடக்கப்படுமா? தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு அஸ்திரம் பிரயோகிக்கப்படுமா என்பன போன்ற அடுத்தடுத்த அரங்கேற்றங்கள், அ.தி.மு.க-வுக்கும், தமிழக அரசுக்கும் சுனாமியாகவே மாறும் என்பதை சசிகலா - தினகரன் தரப்பு உணர்ந்ததன் எதிரொலியாகவே அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டி வெளியாகியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.

இரட்டை இலையை மீட்க இப்படியான ஒருவாய்ப்பு இருப்பதை நடராசன் போதித்திருக்க மாட்டாரா என்ன?..முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டிருக்கும் சட்டை எங்களுடையது, ஆனால் முதல்வர் நாங்கள் இல்லை; அவர்தான்...  என்பதைப் போலத்தான் எடப்பாடியின் முதல்வர் இருக்கை அன்று உலகுக்கு சொல்லாமல் சொன்னது. இன்று "தமிழகத்தின் முதல்வர் எடப்பாடிதான். ஆனால், அவர் போட்டிருக்கிற முதல்வர் சட்டை என்னுடையது" என்கிற டயலாக்கை அமைச்சர் ஜெயகுமாரை விட்டு சொல்ல வைத்திருக்கிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது... நாடகம் எது, நிஜம் எது என்பதை அறிந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலையில் அ.தி.மு.க தொண்டர்கள் தள்ளப்பட்டிருப்பது மிகவும் பரிதாபகரமானது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement