எடப்பாடி - 99, தி.மு.க. கூட்டணி - 98, தினகரன் - 25, ஓ.பி.எஸ்-12... தள்ளாடும் தமிழ்நாடு !

மீண்டும் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டத்துக்கு ஆளும் அ.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், டி.டி.வி. தினகரனின் அரசியல் பிரவேச அறிவிப்பால் எடப்பாடி அரசு தள்ளாடத் தொடங்கியுள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து இதுவரையில் 25 எம்.எல்.ஏ.க்கள் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். 

                                   எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்ஆக, இந்த நிமிடக் கணக்குப்படி 97 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஆட்சியாக எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இருக்கிறது. அடுத்தடுத்த  அரசியல் வானிலை மாற்றங்களைப் பொறுத்து  97-ல் கொஞ்சம் கூடலாம், குறையலாம். எதிர்க்கட்சியான தி.மு.க. 89 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருக்கிறது. தி.மு.க. கூட்டணியிலுள்ள  எம்.எல்.ஏ.க்களையும்  கணக்கிட்டால் தி.மு.க. 98 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்துள்ளது. முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை, 98-க்கு  கீழே போகாமல் தக்க வைத்துக்கொள்ளக் கூடிய கட்டாயத்துக்கு ஆளும் அ.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்  ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள 12 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணிதான் எடப்பாடி அரசுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்.  

                                                      ஆதரவாளர்களுடன் டி.டி.வி. தினகரன்


கையிருப்பு எம்.எல்.ஏ.க்கள் இதே  ஓ.பன்னீர்செல்வம் அணிக்குத் தாவி விடாமல் இருக்கத்தான் கடந்த பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி சென்னையிலிருந்து காஞ்சிபுரம் கொண்டு  போகப்பட்டு கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு 'சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்' என்ற பயிற்சியை அவர்களுக்கு சசிகலாவே நேரில் எடுத்தார். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 12 பேரே கையில் இருந்ததால் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியைத் தழுவினார். எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் முதலமைச்சராக நாற்காலியில் அமர்ந்தார். இவர்கள் நடத்திய பலபிரயோகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் சட்டைதான் கிழிந்தது.

இன்று அதே எடப்பாடி அரசு கவிழாமல் இருக்க ஓ.பி.எஸ். ஆதரவு தேவைப்பட்டாலும் அதில் வியப்பில்லை. பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், மூன்று நாள்களுக்கு கூவத்தூரின் 'கோல்டன் பே ரிசார்ட்'  மூடப்படுவதாக அதன் முகப்பிலேயே எழுதி ஒட்டி வைத்து விட்டார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் அதே விடுதி மீண்டும் தேவைப்படலாம். அல்லது அதே வசதிகளுடன் கூடிய வேறொரு விடுதி தேவைப்படலாம். அதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரனை ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பார்த்து வரும் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 19 மாவட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கியிருக்கிறார். மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் ஆளும் கட்சி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக அறிவாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரேநாளில் ஓராயிரம் பிரேக்கிங் கொடுத்த நாளாக 6.6.2017 அமையவுள்ளது!
 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!