Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடரும் குழப்பம்: அ.தி.மு.க-வில் என்னதான் நடக்கிறது?

  அதிமுக அமைச்சர்கள்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வில் நீடித்துவரும் குழப்பம் இன்னமும் தீர்ந்தபாடில்லை. ஆற்றல்மிக்க ஒரு தலைவரை, 'அம்மா' என்று அன்போடு தாங்கள் அழைத்த, கட்சியின் பொதுச்செயலாளரை இழந்த துக்கத்தில் இருந்து மீள்வதற்குள், கட்சிக்குள் அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறியதால் செய்வதறியாமல் திகைத்துப் போயிருக்கிறார்கள் அ.தி.மு.க-வின் அடிமட்டத்தொண்டர்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவர் பதவியில் தொடர்வதற்கு இரண்டுமுறை நெருக்கடி ஏற்பட்டதையடுத்து, இடைக்கால முதல்வராக அல்லது தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்று செவ்வனே பணியாற்றினார் ஓ.பன்னீர்செல்வம். அதைப்பின்பற்றியே ஜெயலலிதா மறைந்தபோது, மக்களுக்கான, அ.தி.மு.க. தொண்டர்களுக்கான சாய்ஸாக, மத்திய அரசின் ஒப்புதலுடன் ஓ.பி.எஸ்ஸை முதல்வராக பதவியேற்க  அனைத்துத் தரப்பினரும் ஒப்புதல் அளித்தனர்.

ஆனால், அ.தி.மு.க. பொருளாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் முதல்வர் நாற்காலி, இரு மாதங்களுக்குள் ஆட்டம் கண்டது. அதற்குக் காரணம், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்ற அவரது தோழி சசிகலா, முதல்வராக ஆசைப்பட்டதுதான். கடந்த பிப்ரவரி மாதத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களால், சட்டமன்றக்கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்ததால், அவரால் முதல்வராக முடியாமல் போனது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். தவிர, தனது அக்காள் மகன் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக நியமித்து, கட்சியை தங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருக்கச் செய்தார்.

அதையடுத்து காட்சிகள் வேகமான மாறின. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், பணப்பட்டுவாடாவைக் காரணம்காட்டி அந்தத் தேர்தல் ரத்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி தினகரன் கைது என நிலைமை வேறுவிதமாகச் சென்றதால், அ.தி.மு.க தொண்டர்கள் ரொம்பவே குழம்பிப்போனார்கள்.

அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஜாமீனில் வெளிவந்ததும், தொடர்ந்து கட்சிப் பணியாற்றப் போவதாகக் கூறி அரசியல் பரபரப்பை மேலும் சூடாக்கினார். ஆனால், தமிழக அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி, "கட்சியை விட்டு ஒதுங்கியிருக்கப்போவதாக அறிவித்த தினகரன், அதே நிலைப்பாட்டில் தொடர்ந்து நீடிக்கவேண்டும்; எங்களுக்கும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழக அரசு ஜெயலலிதா வழியில் தன்னிச்சையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.

இதற்குப் பதிலடியாக, "என்னை கட்சியை விட்டு ஒதுங்கியிருக்கச் சொல்லவோ, நீக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்குத்தான் உண்டு. அவரைச் சந்தித்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்பேன்" என்று தினகரன் கூறியுள்ளார். இந்த களேபரத்தில் அ.தி.மு.க-வின் இரு அணிகள் இணைப்பு பற்றிய பேச்சே எழவில்லை. அடுத்தடுத்த மாறுபட்ட நிகழ்வுகளால், ஏற்கெனவே சோர்வில் இருக்கும் கட்சித் தொண்டர்கள் மேலும் சோர்வடையத் தொடங்கியுள்ளனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்ஜெயலலிதா மறைவுக்குப் பின், யார் தலைமையை ஏற்பது? தங்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்றெல்லாம் குழம்பிப்போய் இருந்த தொண்டர்களுக்கு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே நடக்கும் தற்போதைய குடுமிப்பிடி மோதல் குழப்பத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. இதனால், அவர்கள் செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று, அ.தி.மு.க மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. முழுமையாக இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தக்கூடிய வாய்ப்பு அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. ஆனால், எஞ்சியுள்ள நான்கு ஆண்டுகளை அ.தி.மு.க அரசு நிறைவு செய்யுமா என்ற கேள்விக்குறி தொண்டர்களிடையே இப்போதே எழத்தொடங்கி உள்ளது.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், கடந்த பிப்ரவரி மாதம், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் தமிழக அரசு வெற்றியும் பெற்றது. ஆனால், தற்போதைய சூழலில் அ.தி.மு.க-வில் எத்தனை அணிகள் உள்ளன? யார்- யார் எடப்பாடி அரசை ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள்? என்பதே தெரியாத சூழ்நிலை நிலவுகிறது.

எடப்பாடி அரசுக்கு ஆதரவு அளித்த 122 எம்.எல்.ஏக்களில் 15-க்கும் மேற்பட்டோர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் சில எம்.எல்.ஏக்கள், தினகரனுக்கு ஆதரவாக அணி திரள்வார்கள் என்பதால், எடப்பாடி தலைமையிலான அரசு ஆட்டம் காணும் நிலை உருவாகியுள்ளது. எடப்பாடி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவே பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கிறார்கள். எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் என பிரிந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரோ நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியிலேயே இதுபோன்ற பிளவு என்றால், தொண்டர்களின் நிலைமையை கேட்கவே தேவையில்லை. தாங்கள் எந்த அணியை ஆதரிப்பது என்பதை விடவும், கட்சியின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பதைபதைப்பிலும், குழப்பத்திலும் அ.தி.மு.க தொண்டர்கள் உள்ளனர்.

அ.தி.மு.க-வில் நீடிக்கும் குழப்பத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பதை அக்கட்சியின் தொண்டர்களைப் போலவே, தமிழக மக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement