நீட் தேர்வு விவகாரம்! சி.பி.எஸ்.இ, தமிழக அரசு பதில் மனுத் தாக்கல்!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும் சி.பி.எஸ்.இ பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

நீட்

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக, மே 7ஆம் தேதி நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டது. சிபிஎஸ்இ நடத்திய தேர்வுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. முறைகேடுகளைத் தடுப்பதற்காக, சிபிஎஸ்இ ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளால் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும்’ என  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு மற்றும் சி.பி.எஸ்.இ தரப்பில் இன்று பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ''பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்துவதே அரசின் நோக்கம் எனவும், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகவும்'' தமிழக அரசு பதில் மனுவில் கூறியுள்ளது.

சி.பி.எஸ்.இ தரப்பில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ''90% பேர் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தேர்வு எழுதியதாகவும், குறைவான சதவீத மாணவர்களே பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதியதாகவும்'' சி.பி.எஸ்.இ கூறியுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!