வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (06/06/2017)

கடைசி தொடர்பு:20:01 (06/06/2017)

''அந்த தமிழச்சியை அடிச்சு போடிமெட்டுக்கு அனுப்பு!''- மிரட்டலுக்கு அஞ்சாத போராளி #VikatanExclusive

கேரள மின்வாரியத் துறை அமைச்சர் எம்.எம்.மணி, சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர்; 20 ஆண்டுகளாக இடுக்கி மாவட்ட மார்க்ஸிஸ்ட் கட்சியின் செயலாளர். தடாலடி ஆளான இவருக்கு, முதலமைச்சர் பினராஜி விஜயனிடம் கடும் செல்வாக்கு உண்டு. கடந்த ஏப்ரல் மாதத்தில் மூணாறு அருகே அடிமாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.எம்.மணி, மூணாற்றில் 2015-ம் ஆண்டு தேயிலை ஊதிய உயர்வுகோரி பெண்கள் நடத்திய போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார். 'போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து மது அருந்தியதாகவும், காட்டுக்குள் வேறு என்னவெல்லாமோ நடந்தது' என்கிறரீதியில் அமைச்சரின் பேச்சு அமைந்தது. தேயிலை ஊதிய உயர்வுப் போராட்டத்தை முன்னின்று நடத்தியது 'பெண்கள் ஒற்றுமை' என்ற அமைப்பு. இதன் முக்கிய நிர்வாகியான கோமதி அகஸ்டின் என்பவரைக்  குறிவைத்துதான் அமைச்சர் எம்.எம்.மணி தரக்குறைவாகப் பேசினார். அவர், கோமதியைக் குறிவைப்பதன் பின்னணியில் ஃப்ளாஷ்பேக் ஒன்றும் இருக்கிறது.

தேயிலை ஊதிய உயர்வுக்காக போராடிய கோமதி

இடுக்கி மாவட்டத்தில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 90 சதவிகிதம் பேர் தமிழ்ப் பெண்கள். இந்தத் தோட்டங்களை டாடாவின் துணை நிறுவனமான 'கண்ணன் தேவன் டீ'  நிறுவனம் குத்தகைக்கு எடுத்து நடத்திவருகிறது. தேயிலைத் தோட்டங்களைப் பொறுத்தவரை, தொழிற்சங்கங்கள் முக்கியமானவை. சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி சங்கங்களைத் தாண்டி எதுவும் நடக்காது. இந்தச் சங்கங்களில் ஏதாவது ஒன்றில் பதிவுசெய்தால்தான், தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்துக்குள் கால் வைக்க முடியும். எதிர்த்தால் எதிர்காலமே கேள்விக்குறிதான். கடந்த 2015-ம் ஆண்டுக்கு முன்பு வரை, தினமும் 21 கிலோ பறித்தால் 232 ரூபாய் கூலி கிடைக்கும். கூலியை உயர்த்தவேண்டி பல ஆண்டுகளாகப் போராடிவந்தனர் தொழிலாளர்கள். எந்தப் பலனும் இல்லை. உள்ளடி வேலைகளைத் தொழிற்சங்கங்களே செய்துகொண்டிருந்தன.

ஒருகட்டத்தில் தொழிற்சங்கங்களை நம்பாமல் பெண்களே வீதியில் இறங்கி, மூணாறின் முக்கியப் பகுதிகளை ஸ்தம்பிக்கச் செய்தனர். தொழிற்சங்கங்களைப் புறக்கணித்துவிட்டு பெண்களே களம்காண, தொழிற்சங்க நிர்வாகிகளுக்குப் பெரும் அதிர்ச்சி. அப்போது, உருவானதுதான்  'பெண்கள் ஒற்றுமை அமைப்பு'.  தேயிலைத் தோட்டங்களைவிடுத்து பெண்கள் சராசரியாகப் போராட்டத்தில் பங்கேற்க, கண்ணன் தேவன் டீ தொழிற்சாலையை மூடிவிடும் நிலை ஏற்பட்டது. போராட்டம் நீர்த்துப்போகச்செய்ய, நிர்வாகத்துடன் சேர்ந்து தொழிற்சங்கங்களே சதியில் ஈடுபடுவதாகவும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். 

உச்சகட்டமாக, கேரளச் சட்டமன்றத்தின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனும் மூணாறு வந்து போராட்டத்தில் ஈடுபட, உம்மன்சாண்டி அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. கண்ணன் தேவன் டீ நிர்வாகத்துக்கு கேரள அரசு நெருக்கடி கொடுக்க, வேறு வழி இல்லாமல் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்தது நிர்வாகம். போராட்டம், மிகப்பெரிய வெற்றிபெற்றது. தினமும் 500  ரூபாய் சம்பளம், அதிகப்படியாகக் கொழுந்து பறித்தால் அதற்கேற்ப சம்பளம், போனஸ் உள்ளிட்ட வசதிகள் கிடைத்தன. இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர்தான் கோமதி அகஸ்டின்.  இதனால் பெண்களிடையே கோமதிக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு நல்லதண்ணி கிராமப் பஞ்சாயத்தின் தலைவரானார். 

தேயிலை ஊதியத்துக்காக போராடிய கோமதியின் மகன்இதற்கிடையே ‛பெண்கள் ஒற்றுமை’ அமைப்புக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட, கோமதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தொழிற்சங்க நிர்வாகியானால் தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்காகப் பேச வாய்ப்பு கிடைக்கும் என்பது கோமதியின் எதிர்பார்ப்பு. ஆனால், கோமதியைக் கட்சியில் சேர்த்ததோடு சரி, அவருக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கவில்லை. கட்சிக்குள்ளும் தமிழர்கள், மலையாளிகள் பாலிடிக்ஸ் இருந்தது.  பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கோமதி, ஏப்ரல் முதல் வாரத்தில் இடுக்கியில் செய்தியாளர்களைச் சந்தித்து, மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கட்சியிலிருந்து விலகிய பிறகு அமைச்சர் மணியின் வாயிலிருந்து தரக்குறைவான பேச்சு வெளிப்பட, தமிழ்ப் பெண்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்ட கோமதியை, `கொலை செய்துவிடுவோம்' என சிலர் மிரட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கோமதியிடம் பேசியேபோது, மிகுந்த வருத்தத்துடன் வேதனையுடனும் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். '' ஊதிய உயர்வுக்காக நாங்க நடத்திய போராட்டத்துக்கு எதிரா அவங்க செஞ்ச அத்தனை சதித் திட்டங்களையும் உடைச்சு ஜெயிச்சுக்காட்டினோம். எங்க பக்கம் இருந்த நியாயத்தை உணர்ந்த அரசு அதிகாரிகளும், நேர்மையான போலீஸ் அதிகாரிகளும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களைக் கொச்சைப்படுத்தும்வகையில் மணி பேசியிருந்தார்.  நான் மார்க்சிஸ்ட்  கட்சியில் இருந்தவரை, இந்த அமைச்சர் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இந்த மண்லதான் காலங்காலமாக நாங்கள் உழைச்சுட்டு வர்றோம். ஆனா, ஓய்வுபெறும்போது வெறுங்கையோடுதான் போகவேண்டியது இருக்கு. அதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணணும்கிறது எங்களோட நீண்டகால கோரிக்கை. தமிழர்களை அடிமையாக வைத்திருப்பதுதான் இவங்களோட திட்டம்.  உரிமைக்காகப் போராட்டம் நடத்தினா உயிரை எடுக்கக்கூடத் தயங்க மாட்டாங்க. 'என்னை எதிர்த்தால் கொலை செய்யக்கூடத் தயங்க மாட்டேன்'னு மணியே சொல்றாரு. என்னோட உயிர் எப்பவேணாலும் போகும். அதுக்கெல்லாம் நான் பயப்படலை. போராட்டத்துல ஈடுபட்டதால்தான் என்னை வேலையிலிருந்து நீக்கினாங்க. ஆனால், மக்கள் என்னை நம்பினார்கள். தேர்தல்ல போட்டியிட்டு ஜெயிச்சேன். 

இப்போ மூணாறு டவுன்ல ஆட்டோவுலகூட என்னை ஏற்ற மாட்டாங்க; பேசவும் மாட்டாங்க. என்னோட பையன் ஜீவா, நல்லா ஃபுட்பால் விளையாடுவான். கேரள மாநில  16 வயதுக்குட்பட்ட அணியில் சேரணும்கிறது அவனோட லட்சியம். அவனும் அதுக்காகத் தயாராகிட்டிருந்தான். இப்போ, அவனை செலெக்‌ஷனுக்குக்கூட கூப்பிடலை. அந்தச் சின்னப் பையன் இவங்களுக்கு என்ன தீங்கு செஞ்சான்? நான் போய்க் கேட்டால், ' உன்னை இங்கே இருக்கவிடுறதே பெருசு. உன் பையனை சேர விட்டுடுவோமோ'னு கேட்குறாங்க. என்னால ஃபேஸ்புக்கக்கூடத் திறக்க முடியாது. கெட்டக் கெட்ட வார்த்தைகளால் திட்டுவாங்க. என்னைக் கேவலப்படுத்தி  மீம்ஸ் போடுவாங்க. 'அந்தத் தமிழச்சியை அடிச்சு, போடி மெட்டுக்குக் கீழே அனுப்பணும்னு' ஃபேஸ்புக்ல என்னோட படம் போட்டு மீம்ஸ் சுத்திட்டிருக்கும். மாவோயிஸ்ட் ஆதரவும் இருக்குனுகூட வதந்தி பரப்பினாங்க. ஆனா, நான் எதுக்கும் பயப்படப்போறதில்லை. வெறும் வயிற்றுப் பொழைப்புக்காகத் தேயிலைத் தோட்டத்துல அடிமை மாதிரி நம்ம தமிழ்ப்பெண்கள் வேலைபார்த்துட்டிருக்காங்க. என்ன ஆனாலும் சரி... தமிழ்ப் பெண்களை இந்த அடிமைத்தனத்துல இருந்து மீட்பேன். நம்ம மக்களும், இங்கே இருக்குற சிலர் செஞ்சுட்டிருக்கிற சதிகளைப் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க'' என்றார்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்