வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (06/06/2017)

கடைசி தொடர்பு:19:12 (06/06/2017)

தினகரனின் அக்டோபர் அதிரடி!

தினகரன்

“அறுபது நாட்கள் வரை பொறுத்திருப்போம். அப்புறம் நடக்க போவதைப் பாருங்கள்” என்று தன்னைச் சந்திக்க வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம்  அனலாகப் பேசியுள்ளார் தினகரன். ஆளும்கட்சி ஆட்சிக்கு எந்நேரத்திலும் சிக்கல் வரலாம் என்கிற சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் படத்தை அமைச்சர்கள் தங்கள் அறையில் மாட்டியுள்ளார்கள். இன்னொருபுறம் அவர் முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா  என்று தினகரன் வீட்டில் எம்.எல்.ஏ-க்கள்  ஆலோசனை நடந்திருக்கிறது. “அ.தி.மு.க ஆட்சி அடுத்த நான்கு ஆண்டுகள் நீடிக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்”என்கிறார் தினகரன் வீட்டில் ஆலோசனையில்  கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர்.

60 நாள் கவுண்டவுன்!


சிறையில் இருந்து தினகரன் வெளியே வந்தபோதே எடப்பாடி அமைச்சர்கள் மீது கடும் கோபத்தில்தான் இருந்தார். “இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்றுதான் நான் ஒதுங்கிப்போனேன். 45 நாட்களாக என்ன செய்தார்கள்” என்று வெளியே வந்தவுடன் தன்னுடைய ஆதரவாளர்களிடம் கேட்டபோதே, எடப்பாடிக்கு சிக்கல் என்பதை தினகரன் ஆதரவாளர்கள் உணரத் தொடங்கி விட்டனர்.  
பெங்களுரில் சசிகலாவை பார்க்க தினகரன் செல்லும் முன்பே எடப்பாடி தரப்பிடம் தினகரன் பேசியுள்ளார். “பதினைந்து நாட்களுக்குள் நான் சொல்வது மாதிரி நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், அறுபது நாட்கள் கழித்து நீங்கள் யாருமே அ.தி.மு.க கரைவேட்டியை கட்டமுடியாது. அதிகாரம் இருக்கிறது என்று ஆடுகின்றீர்களா? நாங்கள் நினைத்தால் அதிகாரமே இல்லாமல் செய்துவிடுவோம்” என்று சொல்லியுள்ளார். அறுபது நாள் என்பது சசிகலாவை சந்திப்பதற்கு முன்பே தினகரன் குறித்த கணக்கு தானாம். ஆனால் அதற்கு முன்பே எடப்பாடி பதவிக்கு கடும் நெருக்கடி வந்துவிடும் என்கின்கின்றனர் தினகரன் அணியினர்.

தினகரன் வீட்டில் ஆலோசனை

காவு கொடுக்கிறார்கள் கட்சியை!

அமைச்சர்கள் அனைவரும் சம்பாதிக்கும் நோக்கில்தான் இருக்கிறார்கள். ஆட்சி இல்லை என்றால் இவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். கட்சியை வைத்து கரன்சி பார்க்கும் வேலைதான் இப்போது நடக்கிறது என்று தினரகன் கோபப்பட்டுள்ளார். ஜெயக்குமாரின் கருத்துக்களை பார்த்து ஏகத்துக்கும் டென்சனாகி விட்டாராம். மூன்று பேரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.  ஆட்சியில் நமக்கு பங்கில்லை என்றால் எதற்கு ஆட்சி என்று அமைச்சர்களிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அலறவிட்டுள்ளார்கள் .


எங்கள் பக்கம் 43 பேர்!

தினகரன் வீட்டில் 26 எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைநடத்தியிருந்தாலும், தங்கள் பக்கம் 43 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக தினகரன் தரப்பினர் கூறுகின்றனர். பன்னீர்செல்வம் தரப்புடனும் பேசுவதற்குத் தயாராகி விட்டார்கள் தினகரன் அணியினர். பிரிந்து இருந்து நீங்கள் என்ன சாதித்தீர்கள்? என்ற ரீதியில் பன்னீரை தங்கள் பக்கம் கொண்டுவர முக்கிய புள்ளி ஒருவர் மூலம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்கள். முதல்வர் எடப்பாடி, தலைமைச் செயலகத்தில் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தியதே தினகரன் தரப்பின் அதிரடியைச் சமாளிக்கதான் என்கிறார்கள். எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் “நீங்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் அடுத்த நான்கு ஆண்டுகள் இந்த அரசைச் சிக்கல் இல்லாமல் ஓட்டமுடியும்” என்று எடப்பாடி பேச, எம்.எல்.ஏ ஒருவர் “ தினகரனை ஒதுக்கி வைக்கும் முடிவை அமைச்சர்கள் யாரைக்கேட்டு எடுத்தார்கள்?" என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்துள்ளார் முதல்வர்.,தினகரனுக்கு ஆதரவாக முதல்வரிடமே இப்படி சிலர் பேசியிருக்கிறார்கள். ஒருவேளை எடப்பாடி அணிக்கு சிக்கல் வந்தால்,அவரை  ஆதரிக்கலாமா என  பன்னீர் தரப்பு  யோசித்துவருகிறது. 

தினகரன்


ஆட்சிக்குச் சிக்கலா?

 தினகரனுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே நடக்கும் இந்தப் பனிப்போர் பத்து நாட்களுக்குள் முடிவுக்கு வராவிட்டால் ஆட்சி நீடிப்பது சிக்கல் என்கிறார்கள். இருபதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தினகரன் பின்னால் அணிவகுத்தாலும், மன்னார்குடியை சேர்ந்த சசிகலா உறவுகள் சிலரே தினகரனுக்கு எதிராக இருப்பதால் தைரியமாக இருக்கிறார் எடப்பாடி. ஆனாலும் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் அனைத்து வேலைகளையும் தினகரன் தரப்பினர் ஆரம்பிக்கப் போகிறார்கள். ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்க தமிழ்செல்வன் அறிவித்தன் பின்னணியும் அதுதான் என்கிறார்கள்.நம்மால் ஆட்சிக்குச் சிக்கல் வரக்கூடாது என்று தினகரன் சொல்லியிருந்தாலும், தினகரனை தொடர்ந்து அவர்கள் புறக்கணித்தால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு  ஆட்சி நீடிப்பது கடினம் என்ற நிலைதான் உள்ளது. அமைச்சர் பதவியில் தனக்கு வேண்டியவர்களுக்கு இடம் கொடுப்பது, தன் கட்டுப்பாட்டில் ஆட்சியை நடத்துவது என்ற நிபந்தனைகளை எடப்பாடி தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அக்டோபர் மாதம் வேறு ஒரு திட்டத்தைக் களம் இறக்க தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளது என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். அந்தப் பயம், எடப்பாடியின் அமைச்சர்கள் அனைவருக்கும் இருப்பதால், இன்னும் சில நாட்களில் தினகரன் வசம் அவர்கள் வந்து விடுவார்கள் என்று தினகரன் தரப்பினர் நம்பிக்கையோடு உள்ளார்கள். அவ்வாறு வழிக்கு வராமல் போனால்,  அக்டோபருக்குப் பிறகு ஆட்சிச் சக்கரத்தில் மாற்றங்கள் நிகழும் என்பது உண்மை.

 


டிரெண்டிங் @ விகடன்