Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அண்ணன் இடிதாங்கியும், அம்மா அணியின் அடிதாங்கிகளும்..! பாவம் அ.தி.மு.க

இந்தியா - பாகிஸ்தான் மோதுன சாம்பியன்ஸ் டிராஃபி மேட்ச்சே தண்ணியில விழுந்த முறுக்கு மாதிரி நசநசன்னு நமுத்துப்போச்சு. ஆனால், அ.தி.மு.க அம்மா அணியில் நடக்கிற களேபரங்களுக்கு மட்டும் ஒரு எண்ட் கார்டு போடாம போய்க்கிட்டே இருக்கு. நாளுக்கு நாள் எதிரும் புதிருமாகத் திரும்புற அணி ஆட்களை வெச்சுக்கிட்டு 'என்னத்த' கண்ணையா ரேஞ்சுலதான் தினகரன் உள்பட மொத்தக் கட்சியினரும் இருக்காங்க. 

dinakaran - OPS - Edappadi palanisamy

முன்னாடி சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையே ஆரம்பிச்ச இந்தத் தகராறு, சசிகலா கைதானதுக்கு அப்புறமாவது சரியாகும்னு பார்த்தா, கடைசியாதான் வந்தார் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் பதவியேற்றதும், முழுமூச்சா மூச்சைப் பிடிச்சு உள்நீச்சல் அடிச்சவர் தினகரன் இடைஞ்சலாக வரவும், என்ன ஏதெனத் தெரியாமல் திகைத்துக் கிடந்தார். 'வாராது வந்த மாமணியாகத் தனக்கு வந்துசேர்ந்த முதல்வர் பதவிக்கு 'வாராது வந்த மாமணி'யாலேயே இடைஞ்சல் வந்தால் என்ன செய்வார் பாவம்.  

அந்தநேரம் பார்த்து வந்த ஆர்.கே.நகர் தேர்தலிலும் தினகரன் அண்ணன், தன்னையே வேட்பாளராக அறிவித்துக்கொள்ள, அசரவேயில்லை அம்மா அணியினர். எதிர்தரப்பு கட்டம் கட்டக் காத்திருந்த வேளையிலே தானே வலைசெய்து அதில் தலையை விட்டுக்கொண்டார் அண்ணன் தினகரன். பணக் கத்தைகள் ஆர்.கே.நகர் தெருக்களின் வழியே பாய்ந்தோடியது என இடைத்தேர்தல் ரத்தாக, எலெக்‌ஷன் கமிஷனுக்கே கமிஷன் கொடுத்த கேசில் தினகரன் உள்ளே போக அரசியல் வட்டாரத்தில் ஒரே கூத்துதான் போங்க... 

'ரத்துக்கு அஞ்சாத ரத்தத்தின் ரத்தங்கள்...' என கிரம்மர் சுரேஷ் ஊரெல்லாம் போஸ்டர் ஒட்ட, 'என்னாமா கூவுறாப்லய்யா கொய்யால...' என அந்நேரம் தினகரனே கண்ணில் தண்ணி விட்டிருப்பார். தேர்தல் ரத்து புண்ணியத்தில், அம்மா அணியும், புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. கயிறு இழுக்கும் போட்டிபோல விட்டுக்கொடுக்காமல் முட்டுக்கொடுத்த ரெண்டு அணிகளும் மாற்றிமாற்றி மோதிக்கொண்டாலும் சற்றும் முன்னேற்றமில்லை. அப்புறம் உட்கட்சியின் உள்கோஷ்டிகளுக்கு உள்ளேயே பிரச்னை வந்ததும் புரட்சித்தலைவி அம்மா அணி ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கத்  தொடங்கியதும் எதிர்க்கட்சிகளுக்கும் முரட்டு விருந்தானது.  

ஜாமீனில் வந்த தினகரன் ஆட்டையைக் கலைக்க, மீண்டும் கோஷ்டிகளுக்குள் 'வர்தா' புயல். எடப்பாடியாருக்கு ஆதரவாக, அமைச்சர்கள் பொங்கியெழுந்து தினகரனைப் போட்டுத் தாக்கினர். ஆட்சியில் தலையிடமாட்டேன் என பவ்யமாகக் கூறியவர் 'கட்சியும் நான்; ஆட்சியும் நான்' என அந்நியன் அவதாரம் எடுத்தார். ஓ.பி.எஸ் ஒருபக்கம் ஓரமாக உட்கார்ந்து 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...' என கடலை சாப்பிட்டபடியே சிச்சுவேஷன் சாங் பாடிக்கொண்டிருக்கிறார்.

கோஷ்டிப் பூசல் குறைவாயிருந்த கட்சியில் இப்போது திரும்பும் திசையெல்லாம் கோஷ்டிகள் மயம். கொங்குப் பக்கம் எடப்பாடி தரப்பு, கொஞ்சம் பக்கத்திலேயே செங்கோட்டையன் தரப்பு, தெற்குப் பக்கம் ஓ.பி.எஸ் தரப்பு, சசிகலா குடும்பத்திலேயே தினகரன் தரப்பு, திவாகரன் தரப்பு என வெளிப்படையாகவே அணிபிரிந்து அடித்துக்கொள்கிறார்கள். இத்தனையும் போதாதென ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், என அண்ணா பெயர் சொல்லி அத்தனை பேரும் கட்சிக்கு நாமம் போடக் காத்திருக்கிறார்கள். 

சித்தியைப் பார்க்க பெங்களூருக்குப் போன தினகரனுக்கு, 'சும்மா இருந்து தொலையேன்ப்பா' என எக்குத்தப்பாக டோஸ் விழ, 'எல்லாப் பக்கமும் அடின்னா என்னதான்யா செய்றது' எனப் புலம்பியபடியே தன் ஆதரவாளர்களோடு மீட்டிங் போட்டிருக்கிறார். அதற்குள்தான் இந்தப்பக்கம் அமைச்சர்களின் எதிர்ப்புச் சலம்பல். 'கட்சியை விட்டே தூக்கிடுவோம்' என பத்திரிகையாளர்களின் முன்பு அம்மா அணி அமைச்சர்கள் கொந்தளிக்க, அதை டி.வி.யில் பார்த்தவர், தன் பதவியை யாரும் பறிக்கமுடியாது எனக் கொக்கரித்திருக்கிறார். 

60 நாள்கள் கட்சியையும், ஆட்சியையும் கண்காணிக்கப் போவதாகவும், அதற்குள் இரு அணிகளும் சேர்வதானால் பரவாயில்லை. இல்லையெனில் முடிவு விபரீதமாக இருக்கும்' எனக் கெடு விதித்திருக்கிறார். அண்ணன் கோவத்தைப் பார்த்து அசந்துபோன ஆதரவாளர்களும், 'இனி எத்தனை தலை உருளப் போகுதோ...' என உசுப்பேத்திவிட்டு அமைதியாகின்றனராம். 
#இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...

செந்தில்பாலாஜி - தினகரன் சந்திப்பு

லேட்டஸ்ட் ட்விஸ்ட்டாக, எடப்பாடியார் ஆதரவு எம்.எல்.ஏக்களில் செந்தில்பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்பட ஏழு பேர் சேர்ந்து தினகரனைச் சந்தித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே 11 எம்.எல்.ஏக்கள் இப்போ பத்துப் பேருக்கும் மேல் சந்திக்கப் போயிருக்காங்க. ஆகமொத்தம் இதுவரைக்கும் 20 க்கு மேல். இவங்க தீர்க்கமான தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தா எடப்பாடியாரின் அரசுக்கு இப்பவே டெபாசிட் அவுட்டு. அப்புறம் என்ன... இன்னொரு ரவுண்டு கூவத்தூர் ரிசார்ட்... இன்னொரு சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பு... இன்னொரு முதல்வர்... நைஸ்! 

இந்த நேரத்தில்தான் எடப்பாடியார், கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மெள்ள மெள்ள இறக்கினார். முதல்வர் படத்தை அனைத்து அமைச்சர்கள் அறைகளிலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களின் அறைகளிலும் மாட்டவேண்டும் என உத்தரவு பறக்க, 'கொங்குச் சிங்கம் களமிறங்கிடுச்சுடோய்...' எனப் புல்லரிப்பு மோடுக்குப் போகிறார்களாம் அவரது ஆதரவாளர்கள். கட்சியையும், ஆட்சியையும், மக்களையும்(?!) காப்பாற்ற அமைச்சர்கள் ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவித்து அதிரடிக்கிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி

'நீங்க அப்படியே மக்களைக் காப்பாத்திட்டாலும் அசந்துதான் போயிருவோம்... போங்கப்பு' என யார் தமிழகத்தின் முதல்வர் என்பதையே மறந்துவிட்டு மத்திய அரசு அடுத்து என்ன செய்யக் காத்திருக்கோ... எனப் பயத்தோடு நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement